யாழ் வடலியடைப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி பொலிஸார் பலி | தினகரன்

யாழ் வடலியடைப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி பொலிஸார் பலி

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர்.
 
இச்சம்பவம் இன்று (05)  பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக   தெரிவிக்கப்படுகின்றது.
 
இதன் போது,  படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரான துரைராஜசிங்கம் (33) என்பவர் உயிரிழந்துள்ளார்.
 
 
விடுமுறை பெற்று இளவாலையில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் பணியில் இணைவதற்காக தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை சித்தண்கேணி பகுதியில் நேர் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
 
இந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிளிலும் வந்த நால்வரும்  காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
ஏனைய  காயமடைந்த  மூவரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 
மேலும் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளுடன் மறுமுனையில் மது போதையில் வந்தவர்கள் போக்குவரத்து விதிகளுக்கு முரணாக மோட்டார் சைக்கிளை செலுத்தி இவ்விபத்தை ஏற்படுத்தியதாக  அப்பகுதி மக்கள்  தெரிவித்தனர்.
 
விபத்து தொடர்பாக இளவாலை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(புங்குடுதீவு குறூப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 
 
 

Add new comment

Or log in with...