எதிரணியின் விஷமப் பிரசாரம்! | தினகரன்

எதிரணியின் விஷமப் பிரசாரம்!

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய எந்தவொரு ஒப்பந்தத்தையும் எந்த நாட்டுடனும் செய்து கொள்ளப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். அதேசமயம் இந்தியாவுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்துக்கும் தெளிவுபடுத்தப்படுமெனவும் பிரதமர் கூறி இருக்கிறார். திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் இந்தியாவுடன் கூட்டு முயற்சியொன்றை முன்னெடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அதனால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புக் கிடையாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசு பதவிக்கு வந்த நாள் தொடக்கம் எதிரணியினர் அரசு மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானதாகக் கருதப்படக் கூடியது நாட்டையும், நாட்டின் வளங்களையும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தாரைவார்ப்பதாகக் கூறும் குற்றச்சாட்டாகும். சர்வதேச மட்டப் பேச்சுக்களிலும், நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பிலும் தெளிவாக அறிந்து கொள்ளாமல் தமது சுயநல அரசியலை வைத்து நாட்டு மக்களை குழப்பும் ஒருமுயற்சியையே எதிரணித் தரப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சர்வதேச ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். இந்தியாவுடனோ, சீனாவுடனோ வேறு எந்த நாட்டுடனோ ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை மேற்கொள்ளப்படுவதை தவறாக எடைபோடக் கூடாது. கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்த அரசுகள் ஒவ்வொன்றும் பொருளாதார அபிவிருத்தி வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொண்டே உள்ளன. இதில் கடனுதவி போன்றே நிவாரண ரீதியிலான உதவிகளும் உள்ளடக்கப்படுகின்றன.

இந்த அணுகுமுறையிலேயே இந்த நல்லாட்சியிலும் ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்படுகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மேற்கொண்ட இந்திய விஜயத்தின் போது பொருளாதாரச் செயற்திட்டங்கள் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கமளித்திருக்கிறார். அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் கூட்டு குறித்தே இந்த ஒப்பந்தத்தின் போது கூடுதலான கரிசனை காட்டப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் செய்து கொள்ளப்படக் கூடிய ஒப்பந்தங்கள் எமது நாட்டைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமானதும் அவதானிப்புக்குரியதுமாகும். அவை இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானதென்பதை இரண்டு நாடுகளுமே உணர்ந்துள்ளதை கடந்த காலத்தில் நன்கு அவதானிக்க முடிந்துள்ளது. இந்த ஒப்பந்தங்களை இலாப நட்டக் கணக்குப் பார்க்கக் கூடியதாக கருத முடியாது. இரு நாடுகளதும் நட்புறவு, பொருளாதார மேம்பாடுகளை கவனத்தில் கொள்வதாகவே அமையப் பெற்றுள்ளது.

பிரதமரின் இந்த விஜயத்தின் போது 500 மெகாவோட் இயற்கை வாயு உற்பத்தி நிலையமொன்றை அமைத்தல், சூரிய சக்தி நிலையத்தை உருவாக்குதல், எண்ணெய்க் குதம் குறித்து இந்திய எரிபொருள் நிறுவனத்துடன் கூட்டுக் கம்பனி திட்டத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்தல், துறைமுக அபிவிருத்தியில் இணைந்த குழு அமைத்தல் என்பவற்றோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் விசேட பொருளாதார வலயங்களை அமைத்து இந்திய முதலீடுகளை ஊக்குவிப்பதும் முக்கிய திட்டங்களாகக் காணப்பட்டுள்ளன.

இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டியது விசேட பொருளாதார வலயங்கள் அமைக்கும் திட்டமாகும். முழு நாட்டினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மேலோங்கச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும். இந்தியாவின் முதலீட்டுடன் உருவாக்கப்படக் கூடிய இந்த பொருளாதார வலயங்களில் இரு நாடுகளுக்கும் ஏற்புடையதான உற்பத்திகளுக்கு முன்னுரிமை தரக் கூடியதாக அமையலாம் என்றே நம்பப்படுகிறது.

இது தவிர யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, தம்புள்ள வரை அதிவேக நெடுஞ்சாலை அமைத்தலும், ரயில்வே முறையை மேம்படுத்தல் தொடர்பிலும் இருவேறு விசேட ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவுள்ளன. இந்த இரண்டு ஒப்பந்தங்களும் மிக முக்கியமானவையாகும். அதிவேக நெடுஞ்சாலையின் தேவை நீண்ட நெடுங்காலமாக உணரப்பட்டதாகும். அதே போன்று நாட்டின் போக்குவரத்தை துரிதப்படுத்தவும், மேலோங்கச் செய்யவும் ரயில் சேவை மேம்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.

பிரதமர் தமதுரையில் ஒரு விடயத்தை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது இந்த ஒப்பந்தங்களில் சிலவற்றுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட வேண்டும், சில ஒப்பந்தங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்பதாகும்.

எதிரணியினர் எதிர்க்க வேண்டுமென்பதற்காக சகட்டு மேனிக்கு எதிர்ப்பதைத் தவிர்த்து ஆரோக்கியமான நல்ல விடயங்களில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். அதுதான் உண்மையான அரசியல் ஜனநாயகமாகும். எந்த நாட்டினாலும் அரசியல் பயணத்தில் சிலவேளை ஸ்தம்பித நிலை ஏற்படும் போது அதற்கு தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் செயற்பாடே எதிரணி செய்ய வேண்டிய பணியாகும். மாறாக சறுக்கி விழும் போது பாதாளத்தில் தள்ளி விடுவதல்ல எதிரணி. இத்தகைய நல்ல பணியை இனியாவது தொடங்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அரசு நாட்டை பற்றிச் சிந்திக்கும் போது எதிரணியினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்துச் சிந்திப்பதை ஆரோக்கியமான செயற்பாடாக நோக்க முடியாது. இதனை ஏன் குறிப்பிடுகின்றோமெனின் எதிரணியில் சிலர் இந்தியாவை எதிரி நாடாகப் பார்த்து குற்றச்சாட்டுச் சுமத்துகின்றனர். இத்தகயை சிறுபிள்ளைத்தனமான எண்ணங்களிலிருந்து நாம் விடுபட்டால் மட்டுமே விமோசனம் கிடைக்கும்.


Add new comment

Or log in with...