உலகெங்கும் ஆஸ்துமா நோயாளர் எண்ணிக்கை இரட்டிப்பு | தினகரன்

உலகெங்கும் ஆஸ்துமா நோயாளர் எண்ணிக்கை இரட்டிப்பு

உலகம் முழுவதும் ஆஸ்துமா தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஜெனிவாவில் 1989-ல் ‘உலக ஆஸ்துமா அமைப்பு’ தொடங்கப்பட்டது. அதுமுதல், ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி, 1992- இல் உலகளவில் சுமார் 15 கோடி பேர் ஆஸ்துமா நோயாளிகளாக இருந்தனர். சுற்றுச்சூழல் மாசு, உணவுப் பழக்கம், மரபணு செயல்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2010- இல் இந்த எண்ணிக்கை 30 கோடி. 15 தொடக்கம்- 50 வயதுக்கு உட்பட்ட 1,471 ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் ஆரோக்கியமான 864 பேரை வைத்து இங்கிலாந்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதிக பழம், காய்கறி சாப்பிடுவோர் ஆஸ்துமாவால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. வாரம் 3 அப்பிள் சாப்பிட்ட 32% பேர், வாரம் 3 முறை வெங்காயம் சாப்பிட்ட 18% பேர், தினமும் 2-3 முறை தேநீர் குடித்த 17% பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆஸ்துமா தொற்று நோய் இல்லை. ஆஸ்துமா நோயாளிகளுடன் பழகினால் இந்நோய் பரவாது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

மூச்சுக் குழாயில் சுருக்கம் ஏற்படுத்தி, மூச்சு விட சிரமம் தரும் நோய்தான் ஆஸ்துமா. இது ஒருவித ஒவ்வாமை. ஆளுக்கு ஆள் வேறுபடும். தூசு, புகை, கரப்பான் பூச்சி கழிவு, சில பங்கசுக்கள், தை மாதப் பூக்களின் மகரந்தம், பனி ஆகியவற்றால் ஒவ்வாமை ஏற்படும். வேகமாக ஓடி வந்து நிற்கும் போதும் மாடிப்படிகளில் ஏறி இறங்கும் போதும் மூச்சு வாங்குவது ஆஸ்துமா இல்லை.

ஆஸ்துமா நோய் பரம்பரையாகவும் (மரபணு கோளாறு), சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் ஏற்படுகிறது. பெரும்பாலும் சிகரெட் புகையினாலும், காற்று மாசுபாட்டினால் ஆஸ்துமா நோய் தாக்குகிறது. மேலும், மாறி வரும் வாழ்க்கை முறைகளான விரைவு உணவு, உடலில் பவுடர் மற்றும் வாசனைத் திரவியங்களைப் போடுவதால் ஆஸ்துமா ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.

நோயினை முழுமையாக குணப்படுத்த முடியாது. சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் உபாதையைக் குறைத்துக் கொண்டு வாழலாம். இந்நோயினால் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினால் ஆண்டு தோறும் உலகில் இலட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். கடந்த 10 ஆண்டில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. பெரியவர்களை விட இளைஞர்கள் தான் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களால் (வைரஸ் கிருமிகள்) நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் குழந்தைகள் சுவாசிக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர். நெஞ்சிலே சளி தங்கி விடுகிறது. இதனால், குழந்தைகள் எளிதில் ஆஸ்துமா நோய்க்கு உள்ளாகின்றனர். மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் 10 சதவீதம் குழந்தைகள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சரியான நேரத்தில் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதும், ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பதும் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்கலாம். அதேபோல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகரெட் புகை ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடியது. எனவே வீட்டில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் புகைப்பதை தவிர்ப்பது நலம்.

படுக்கை அறை, தலையணைகளில், போர்வைகளில் ஒவ்வாமை ஏற்படுத்தும் நுண்ணியிரிகள் இருக்கலாம். எனவே அவற்றை அடிக்கடி நன்றாக​ை துவைத்து காயப்போட்டு உபயோகிக்கவேண்டும்.

"களைப்பாக இருக்கிறேன், இதயம் இறுக்கமாக இருக்கிறது, மூச்சு விட கடினமாக உள்ளது, மூச்சு விடும் போது ஒரு விநோதமான சத்தம் கேட்கிறது" என, குழந்தைகள் கூறினால் மருத்துவரை அணுகுங்கள்.

பனங்காடு தினகரன் நிருபர் ஆர்.நடராஜன்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...