மே தின கூட்டம்; மூவர் பலி; ஒருவர் மணிக்கட்டு இழந்தார் | தினகரன்

மே தின கூட்டம்; மூவர் பலி; ஒருவர் மணிக்கட்டு இழந்தார்

 
மே தின கூட்டத்தில் பங்குபற்றிய பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் பஸ் சில்லில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
 
சிகிரியா, பிதுரங்கல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஏற்றிச் செல்லப்பட்ட பஸ்ஸில் சிகிரியாவிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த இவர், தங்களுடன் வந்தவர்களை, வீடுகளுக்கு விடுவதற்காக பிதுரங்கலை பிரதேசத்திற்கு சென்று அவர்களை வழியனுப்பி விட்டு நன்றி தெரிவித்து விட்டு, பஸ்ஸில் ஏறி தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். 
 
 
இதன்போது, இவர் மிதி பலகையிலிருந்து கீழே வீழ்ந்து பஸ்ஸின் சில்லில் சிக்கி விபத்திற்குள்ளாகியுள்ளார். இன்று (02) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, படுகாயமடைந்த இவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்துள்ளதாக பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
 
 
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் சிகிரியா, நவநகர பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான அதிகாரம் ஜனக என்பவர் என பொலிசார் தெரிவித்தனர்.
 
குறித்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இதேவேளை நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஜ தலைமையில் இடம்பெற்ற பொது எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அதிக வெப்பம் மற்றும் களைப்பு காரணமாகவே குறித்த இருவரும் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அதன் அடிப்படையில் மே தின ஊர்வலம் தொடர்பில் கலந்துகொண்ட மூவர் இது வரை மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
காலி முகத்திடலில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தில் பங்குபற்றிய 5 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே இறந்திருந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த மேதின கூட்டத்தில் பங்குபற்றிய மற்றைய மூவரில் இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மற்றையவர் இன்று (02) காலை வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சிகிச்சை பெற்று வரும் குறித்த இருவரினதும் நிலை பாரதூரமானதன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பலியான குறித்த இருவரினதும் பிரேத பரிசோதனைகள் இன்று (02) இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊர்வலத்தில் பங்குபற்றியிருந்த ஒருவர், பஸ் ஒன்றினுள் ஏறுவதற்காக முயற்சி செய்த வேளையில், பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்து மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (01) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
(படங்கள்: சிகிரியா விசேட நிருபர் - காஞ்சன ஆரியதாஸ)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...