மரணத்தின் பின்னரும் தொடரும் அடுத்தடுத்த திகில்கள்! | தினகரன்

மரணத்தின் பின்னரும் தொடரும் அடுத்தடுத்த திகில்கள்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணமும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறும் திகில் நிகழ்வுகளும் ஒரு கிரைம் நாவலைப் போல் நீள்கின்றன. ஜெயலலிதாவின் மரணத்திற்கான மூலகாரணமே இதுவரை விடை தெரியாத வினா!

தற்போது அவருக்கு மிகவும் பிடித்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளியைக் கொன்று நடந்த கொள்ளையும் அதை விட திகில் நிறைந்ததாகி விட்டது. கொள்ளை வழக்கில் தேடப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் சாரதி, கோடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர் ஆகியோர் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் வீதி விபத்தில் சிக்கியதும்தான் சந்தேகத்திற்கான கரு.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் பெரும் சர்ச்சைக்கும், சிக்கல்களுக்கும் வித்திட்டது தனது தோழியுடன் சேர்ந்து கோடநாடு எஸ்டேட்டை வாங்கிய பின்னர்தான். 1991 இல் முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, 900 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ேதாட்டத்தை விதிகளை மீறி வாங்கினார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. தீர்ப்புக்குப் பின்னர் அரசின் கட்டுப்பாட்டுக்கு எஸ்டேட்டை கொண்டு வரும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. இதுவரை சசிகலாவின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது அந்தத் தோட்டம்.

ஜெயலலிதா இருந்தவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக தனியார் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த பங்களாவில் கடந்த 23ம் திகதி இரவு நுழைந்தவர்கள், அங்கிருந்த காவலாளி ஒருவரை கொலை செய்து விட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்துத் தப்பினர்.

ஜெயலலிதா பயன்படுத்திய 5 கைக்கடிகாரங்கள் மட்டும்தான் கொள்ளை போய் உள்ளன. வேறு ஏதும் இல்லை என்கிறதுபொலிஸ் தரப்பு. இந்த வாதம் ஏற்கப்பட்டாலும் கூட இக்கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிசார் குற்றம் சாட்டும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் சாரதி கனகராஜ், கூலிப்படையை ஏற்பாடு செய்த சயன் ஆகியோர் ஒரே சமயத்தில் வீதி விபத்தில் சிக்கியது விசித்திரமா அல்லது தந்திரமா?

கொள்ளையின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்பட்ட கார் சாரதி தனது சொந்த ஊரில் இரண்டு நாட்களுக்கு மேலாக சுதந்திரமாக சுற்றி, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது. கார் சாரதியின் நண்பரின் மனைவி, குழந்தைக்கு ஒரே இடத்தில் விபத்தின் போது வெட்டுக்காயம் ஏற்பட்டதும் சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்துகிறது.

கார் சாரதிக்கு அப்பால் சிலருக்கும் கட்டாயம் பங்கு இருக்கும். நகை,பணத்துக்காக மட்டும் நடந்தது என்ற கோணத்தில் இந்த சம்பவத்தை அணுகுவது ஏற்புடையதல்ல. இதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் இருக்கக் கூடும்.

காவலாளி கொலையில் தொடங்கி கார் சாரதியின் மரணம் வரை கோடநாட்டில் பல இரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்கிறது. எனவே அதை மறைக்க சந்தேக மரணங்கள் இன்னும் தொடருமோ என்ற கவலை சாதாரண மக்களுக்கு கூட ஏற்படத் தொடங்கியுள்ளது. காவலாளி கொலை தொடங்கி கார் சாரதி மரணம் வரை அனைத்தையும் இணைத்து விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பு அல்லது நேர்மையான உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் விசாரணை நடந்தால்தான் மர்மங்கள் விலகும். தேவைப்பட்டால் தமிழக அரசே சி.பி.ஐ விசாரணை கோர முன்வர வேண்டும். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...