மாயக்கல்லி: மற்றொருவர் காணியில் அத்துமீறி விகாரை நிர்மாணிக்குமாறு புத்தபெருமான் கூறவில்லை | தினகரன்

மாயக்கல்லி: மற்றொருவர் காணியில் அத்துமீறி விகாரை நிர்மாணிக்குமாறு புத்தபெருமான் கூறவில்லை

 
- ஞானசார இனங்களைத் தூண்டிவிடும் ஒரு குழப்பக்காரர்

- முஸ்லிம்கள் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்

 
தீகவாபி பரிவார சைத்திய ரஜமகா விகாராதிபதி
 
எந்த இனமாக இருந்தாலும் மற்றொருவரின் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை நிர்மாணிக்குமாறு புத்தபெருமான் ஒருபோதும் கூறவில்லை என தீகவாபி பரிவார சைத்திய ரஜமகா விகாரையின் பிரதம பௌத்த பிக்கு வணக்கத்திற்குரிய போத்திவெல சந்தானந்த தேரர் தெரிவித்தார்.
 
இறக்காமம் மாயக்கல்லி விடயம் தொடர்பில் தேரரை அவரது விகாரையில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;. தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-
 
“நீண்ட காலமாக மாயக்கல்லி முஸ்லிம்களின் அவர்களது பூர்வீக காணிகளில் வசித்தோரை அவர்களின் விருப்பமின்றி அப்புறப்படுத்தி விகாரையை அமைக்கவேண்டிய அவசியமில்லை. மாணிக்கமடுவிக்கு அருகிலேயே தீகவாபி உள்ளதால் இங்கும் ஒரு விகாரை அவசியமில்லை.
 
 
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் பொறுப்பு எல்லா இனங்களையும் சார்ந்தது. இதனை ஒரு குறிப்பிட்ட குழு தான் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. மாணிக்கமடு மாயக்கல்லி விடயத்தினால் அம்பாறை மாவட்ட கணிசமான சிங்கள மக்கள் கவலையடைந்துள்ளனர். பௌத்த மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் என்றுமே நல்லுறவைப் பேணி வருகின்றனர். அவர்கள் இந்நாட்டுப் பிரஜைகள் எமது சகோதரர்கள்” என்றும் தெரிவித்தார்.
 
மேலும் தீகவாபியைச் சுற்றிலும் பல விகாரைகள் உள்ளன. ஆனால் புத்த பெருமானை வணங்குபவர்கள் மிக குறைவானவர்களே!. இந்நிலையில் மற்றுமொரு விகாரை மாணிக்கமடுவில் எதற்கு? எனவும் கேள்வி எழுப்பினார். மஹிந்த சிந்தனைக்குட்பட்ட பௌத்த பிக்குகளின் எதேச்சதிகார போக்கே இது. இனங்களிடையே முறுகல் நிலையைத் தோற்றுகிக்க எடுக்கப்படும் செயற்பாடுகளே இவை.
 
அத்துடன் எமது மாவட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் இருக்கிறோம். ஞானசார தேரர் இங்கு வர வேண்டிய அவசியமில்லை. இதனைப் பார்க்க அவர் யார்? அவர் இனங்களைத் தூண்டிவிடும் ஒரு குழப்பக்காரர். ஏனைய இனங்கள் மத்தியில் வாழும் கணிசமான பௌத்தர்கள் இவரது கொள்கையை ஆதரிக்கவில்லை. எனவெ முஸ்லிம்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும்” அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இந்த நாடு பௌத்தர்களுக்கே சொந்தமென சிலர் கூறுகின்றனர். ஆனால், புத்த மதத்தை இலங்கைக்கு கொண்டு வந்த மஹிந்த தேரர் கூட தேவநம்பிய திஸ்ஸ மன்னனிடம் இந்த நாடு எல்லா உயிர்களுக்கும் சொந்தம். உமக்கு மாத்திரமல்ல. ஆனால் இந்த நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பே உமக்குரியது. என்பதையும் போத்திவெல சந்தானெந்த தேரர் நினைவுபடுத்தினார்.
 
(அம்பாறை மத்திய குறூப் நிருபர் - எஸ்.எல்.எம். பிக்கீர்)
 
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...