தொழிலாளரை மறந்த மேதின வைபவங்கள் | தினகரன்

தொழிலாளரை மறந்த மேதின வைபவங்கள்

உலகெங்கும் நேற்று தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. இலங்கையிலும் பரவலாக மேதின வைபவங்கள் நேற்று நடந்து முடிந்துள்ளன.

அரசியல் கட்சிகளின் மேதின வைபவங்களே நேற்று பெரிதும் கவனத்தை ஈர்த்தவையாக இருந்தன. ஏனெனில் அரசியல் கட்சிகளின் மேதினப் பேரணிகளிலும் கூட்டங்களிலுமே நேற்று மக்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது.

தொழிலாளர்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புகளின் மேதின வைபவங்கள் நேற்று பெரியளவில் சோபித்திருந்ததைக் காண முடியவில்லை. மேதினம் என்பது உழைக்கும் வர்க்கத்தினருக்கு உரியதாக உள்ள போதிலும், தொழிலாளர் அமைப்புகள் நடத்திய மேதின நிகழ்வுகள் சோபிக்காமல் போயுள்ளமை உண்மையிலேயே விசித்திரமும் வேதனையும் நிறைந்ததாகும்.

தொழிலாளர் அமைப்புகளெல்லாம் அரசியல்மயமாகிப் போய் விட்டனவா அல்லது அரசியல் கட்சிகளெல்லாம் தொழிலாளர்களின் நலன்களை மறந்து போய் விட்டனவா என்றெல்லாம் நேற்றைய மேதின வைபவங்களைப் பார்த்த போது நினைக்கத் தோன்றியது.

அரசியல் கட்சிகள் நேற்று நடத்திய மேதினக் கூட்டங்களைப் பார்த்த போது, ஒரு விடயத்தை தெளிவாக அவதானிக்க முடிந்தது. அரசியல் கட்சிகள் நடத்திய கூட்டங்களில் அரசியல்வாதிகள் பலரும் அதிகம் உரையாற்றிய போதிலும், அவர்களின் உரைகளில் தொழிலாளர் விடயங்கள் அதிகம் உள்ளடங்கியிருக்கவில்லை. தொழிலாளர்களின் உரிமைகள், சம்பள விவகாரம் போன்றன பற்றியெல்லாம் அவர்கள் அதிகம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தொழிலாளர்களுக்குரிய நலத் திட்டங்கள் பற்றிப் பேசவில்லை.அரசியல் விடயங்களே அதிகம் பேசப்பட்டதைக் காண முடிந்தது.

எனவே ஒரு விடயத்தை எம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்ற பாட்டாளிகள் தின வைபவங்களை பெருமளவான அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆகவே தொழிலாளர் மேம்பாட்டுக்குப் பாடுபட வேண்டிய பெரும் பொறுப்பு தொழிலாளர் அமைப்புகளையே இனிமேல் சார்ந்ததாகின்றது.

தொழிலாளர் வர்க்கம் ஓரணியின் கீழ் ஒன்றுபட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், நியாயமான கோரிக்கைகளுக்காகவும் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் தொழிலாளர்கள் தங்களுக்குரிய உரிமைகளை வென்றெடுப்பதுடன் மாத்திரமன்றி, தொழில் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள முடியும்.

கூட்டரசாங்கத்தை அமைத்திருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இப்போது அரசியல் எதிராளிகளாக இல்லை. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரிக்கு முற்பட்ட காலம் வரை அவை எதிரும்புதிருமான கட்சிகளாகும். மேதின வைபவங்களில் கூட ஒன்றின் மீதொன்று அரசியல் கணைகளை வீசுகின்ற கட்சிகள் அவை.

இன்றைய அரசியல் காட்சிகள் விசித்திரமானவையாகும். ஐக்கிய தேசியக் கட்சி தனது மேதினக் கூட்டத்தை கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது மேதினக் கூட்டத்தை கண்டி கெட்டம்பே மைதானத்திலும் நடத்தியிருந்த போதிலும், இவ்விரு பிரதான தேசியக் கட்சிகளிலும் மேதின உரைக் கருத்துகள் சமாந்தரமானவையாகவே அமைந்திருந்தன.

ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் ஒன்றின் மீதொன்று வசைமாரி பொழிந்த மேதின நிகழ்வுகள் இப்போதெல்லாம் இல்லை. இவ்விரு கட்சிகளும் அரசியல் ரீதியில் தனித்தனியான கொள்கைத் திட்டங்களைக் கொண்டிருந்த போதிலும், புதியதொரு அரசியல் கலாசாரத்தின் கீழ் நல்லிணக்கப் பாட்டுடன் செயற்படுவது சிறப்பம்சமாகும். உலகில் அரசியல் நல்லிணக்கத்துக்கு உதாரணமாக எடுத்துக் கூறக் கூடிய விடயம் இதுவாகும்.

இவற்றுக்கெல்லாம் மற்றொரு புறத்திலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இயங்குகின்ற ஒன்றிணைந்த எதிரணியானது கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று மேதினக் கூட்டத்தை நடத்தியிருந்தது. மஹிந்தவின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின்னர் அவர்கள் நடத்துகின்ற மூன்றாவது மேதினக் கூட்டம் இது.

இம்மூன்று மேதினக் கூட்டங்களிலும் அரசுக்கு சவால் விடுக்கும் அறிவிப்புகள் மஹிந்த தரப்பிலிருந்து வெளியாகியிருந்தன. தங்களது ஆதரவாளர்களை இக்கூட்டங்களுக்கு பெருமளவில் அழைத்து வரப் போவதாகவும், அங்கிருந்தே அரசைக் கவிழ்க்கும் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் மஹிந்த அணியினர் கூறியிருந்தனர். எங்கிருந்தோவெல்லாம் பெருமளவு மக்களை பஸ்களில் அழைத்து வருவதற்கு மஹிந்த தரப்பினரால் முடிந்துள்ளதென்பது உண்மைதான். எனினும் அவர்களது சவால்கள் இன்னும் கூட சவால்களாகவே இருக்கின்றன.

மேதினம் நெருங்கும் வேளையில் ஆட்சியை வீழ்த்தப் போவதாக சவால் விடுப்பது அரசியல் கேலிக்கூத்தாகிப் போயுள்ளது. அவர்களின் நேற்றைய மேதினக் கூட்டமும் இவ்வாறுதான் வீராவேசப் பேச்சுகளுடன் நடந்து முடிந்துள்ளது.

அதேசமயம் மஹிந்த அணியினரின் மேதினக் கூட்டத்தில் கூட தொழிலாளர் நலன் சார்ந்த உரைகள் இடம்பெறவில்லை. அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தையே அவர்கள் முதன்மைப்படுத்தி இருந்தனர்.

அரசியல் கட்சிகளின் நேற்றைய மேதின வைபவங்கள் அரசியல் நோக்கங்களையே கொண்டிருப்பதால், தொழிலாளர் நலனுக்கு இனிமேல் குரல் கொடுக்கப் போவது யார்? தொழிலாளர் அமைப்புகளே இனிமேல் ஒன்றுபட்டு சுயமாகப் போராட வேண்டும். அதன் மூலமே தொழிலாளர் நலனை மேம்படுத்த முடியும். 


Add new comment

Or log in with...