மாயக்கல்லி அத்துமீறல்; இறக்காமத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி | தினகரன்

மாயக்கல்லி அத்துமீறல்; இறக்காமத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி

 
மாயக்கல்லி பகுதியில் அத்துமீறி பிரவேசித்து பௌத்த விகாரை நிர்மாணிக்க எடுக்கும் செயற்பாடுகளுக்கெதிராக இறக்காமத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது. 
 
இன்று (28) காலை முதல் இறக்காமம் பிரதேச பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வீதிகள் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்பட்டிருந்தன. கணிசமான பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு நோன்பு நோற்றிருந்தமையும் காண முடிந்தது.
 
 
மேலும், இன்று (28) ஜூம்ஆ தொழுகையை அடுத்து இறக்காமம் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜாமியுல் தையார் பள்ளிவாசல், வரிப்பதான்சேனை ஜூம்ஆப் பள்ளிவாசல் ஆகிய பள்ளிகளில் இருந்து ஒன்று திரண்ட சுமார் 3,000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 'அல்லாஹு அக்பர்' (கடவுள் பெரியவன்) என்ற கோசத்துடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர்.
 
 
பௌத்தர்களே நீங்கள் எமது நண்பர்கள், பௌத்தர்களே எமது பூர்வீகம், மாயக்கல்லிக்கு பாதுகாப்பு நாங்களே, நீதிமன்றத்தை அவமதிக்காதீர், சிங்கள சகோதரர்களே நாட்டுச் சட்டத்திற்கு மதிப்புக் கொடுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டோர் தாங்கியிருந்தனர்.
 
 
குறித்த 3 பள்ளிகளிலுமிருந்தும் இறக்காம் பிரதான சந்திக்கு வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பேரணியாக இறக்காமம் பிரதேச செயலகத்திற்குச் சென்று மாயக்கல்லி மலையை மீட்டுத்தருமாறு கோரும் மகஜர்களை, பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் கையளித்தனர்.
 
 
 
இந்நிழ்வின்போது பிரதேச இணைப்புக் குழுத் தலைவர் எஸ்.ஐ. மன்சூர், சட்டத்தரணி எஸ்.எல். பாறுக், மாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
 
 
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் தங்களின் வேண்டுகோளை அரச அதிபர் ஊடாக உரிய இடங்களுக்கு அனுப்பப்படுமென தெரிவித்தார்.
 
(அம்பாறை மத்திய குறூப் நிருபர் - எஸ்.எல்.எம். பிக்கீர்)
 
 

Add new comment

Or log in with...