'மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ. சந்திரசேகரன்' மறுபிரசுரத்தின் வெளியீட்டு விழா | தினகரன்

'மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ. சந்திரசேகரன்' மறுபிரசுரத்தின் வெளியீட்டு விழா

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும், அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவினையொட்டி இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனுதாப தீர்மானத்தின் போது, நிகழ்த்தப்பட்ட அமைச்சர்கள், சர்வ கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளின் உரைகளை அமைச்சரின் முன்னாள் உடகச் செயலாளர் எச்.எச்.விக்கிரமசிங்க தொகுத்து பதிப்பித்து வெளியிட்ட மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ. சந்திரசேகரன் என்னும் நூலின் இரண்டாம் பதிப்பின் வெளியீட்டு விழா எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.

பல்வேறு மலையக சமூக ஆர்வலர்களினதும், அமைப்புகளினதும் வேண்டுகோளுக்கிணங்க வெளிவரும் இரண்டாம் பதிப்பின் முதற்பிரதியை அமைச்சரின் தாயாரான ஸ்ரீமதி பாப்பம்மாள் பெரியசாமி அம்மையாரிடம், வெளியீட்டுக்குழு சமர்ப்பித்து ஆசிபெறும்.

மே தின கூட்டத்தில் மலையக அரசியல் தொழிற்சங்க தலைவர்களும், அமைச்சர்களான மனோ கணேசன் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தொகுப்பாசிரியர் எச்.எச். விக்கிரமசிங்க சிறப்புப் பிரதிகளை வழங்குவார். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களான, அ. அரவிந்தகுமார், வேலுகுமார், எம். திலகராஜ் ஆகியோருக்கு பிரதிகள் வழங்கப்படும்.

அமரரின் சேவைகளையும் மலையக சமூகத்தின் விடிவிற்காக அவர் முன்னெடுத்த துணிச்சலான முயற்சிகளையும் சாதனைகளையும் விளக்கி கட்சி பேதமின்றி, சகல சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட நிமல் சிறிபால டி சில்வா, வாசு தேவ நாணயக்கார, டியூ குணசேகர, சி.பி. ரத்நாயக்க, கரு ஜயசூரிய, தினேஷ் குணவர்தன, ரவூப் ஹக்கீம், பஷில் ராஜபக்ஷ, முருகேசு சந்திரகுமார், மாவை சேனாதிராஜா, பழனி திகாம்பரம், திஸ்ஸ வித்தாரண, சி. ஸ்ரீதரன், பிரபா கணேசன், விஜித்த விஜயமுனி சொய்சா, ஜெ.ஸ்ரீ ரங்கா, வீ. இராதாகிருஷ்ணன், ஆர். யோகராஜன், ஏ.எச்.எம். அஸ்வர், தயாசிறி ஜயசேகர உட்பட சிரேஷ்ட அரசியல் வாதிகளால் ஆற்றிய உரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவ் அனுதாப உரைகள் பாராளுமன்றத்தில் மறைந்த ஓர் உறுப்பினருக்காக ஆற்றப்பட்ட உரைகளில் மிக நீண்ட நேரத்தினை கொண்டு விரிவானதாக விளங்குவதுடன், அதேவேளையில் நூலுருப் பெற்று விளங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமென சிரேஷ்ட அரசியல் விமர்சகர் ஒருவர் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அமரரின் அரசியல் பிரவேசம் ஆரம்ப கால உத்வேகமான போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க சமூக நடவடிக்கைகளை தொடக்க காலம் முதல் மிக துல்லியமாகவும் விரிவாகவும் அறிந்திருக்கும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன், விரிவுரையாளர், மு. நித்தியானந்தன், ஆலோசகர் எம். வாமதேவன், ஊடகவியலாளர் எம்.என். அமீன் ஆகியோரின் ஆக்கங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் சிறப்புச் செய்திகளுடனும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன், பொருளாளர் அ.அரவிந்த குமார், செயலாளர் நாயகம் அ. லோரன்ஸ், பிரதி செயலாளர் அனுஷியா சந்திரசேகரன் ஆகியோரின் கருத்துக்களையும் தாங்கி, இரண்டாம் பதிப்பு மலர்ந்திருக்கின்றது.

முதற் பதிப்பு 2014 ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வெளிநாடுகளில் வாழும் இந்திய தின நிகழ்வின் போது (பிரவாசி பாரதிய திவால்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறப்பு பிரதியை தொகுப்பாசிரியர் எச்.எச். விக்கிரமசிங்க வழங்கினார். இந்திய வம்சாவளி மக்கள் மகா சபையின் அமர்வில் அமைச்சர் வயலார் ரவி நூலை வைபவ ரீதியாக வெளியிட்டு கோபியோ சர்வதேச தலைவர் மகேன் உச்சான்னா வழங்கினார்.

இரண்டாம் பதிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நூலின் தலைப்புப் போலவே அடிமைப் பட்டிருந்த மக்களின் எழுச்சியில் முன்னின்ற தலைவராகவே செயற்பட்ட அவர் பின் தங்கிய நிலையிலிருந்த மலையக தொழிலாளர் சமூகத்திற்கு எப்போதுமே குரல்கொடுத்ததுடன் அதற்காகவே அயராது உழைத்த ஒரு மக்கள் சேவகனாகவே நான் பார்த்து வந்திருக்கின்றேன் என்று குறிப்பிடுகின்றார்.

இந்நூலின் வெளியீட்டு விழா டென்மார்க்கில் நோர்வே பிரேம்ராஜ் தலைமையில் நடைபெற்ற போது அங்கு சிறப்புரையாற்றிய தவராஜா சத்தியதாஸ் (கரவைதாசன்) மலையகத்தில் பதுளை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த என்.எம். சுப்பையா கனடாவில் மறைந்த போது அவரைப் பற்றி எழுத எதுவிதமான தகவலும் கிடைக்காமையையிட்டு மு. நித்தியானந்தன் மரணச் செய்தியை ஒளிபரப்ப முடியவில்லையே என மிகவும் மன வருத்தப்பட்டார். கரவைதாசன் தனதுரையில், மலையக ஆளுமைகள் பற்றிய தகவல்கள் நூல்கள் மிகமிக அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியதுடன் மலையக பெருந் தலைவர்கள் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் தன் வாழ்நாளிலேயே தன்னைப் பற்றி இரு நூல்களை பதிவு செய்தார். தனக்குப் பின்னர் தன்னைப் பற்றி யாரும் நூல் வடிவில் பதிவு செய்யமாட்டார்கள் என்ற கருத்தினை அவர் ஒரு வேளை கொண்டிருந்தாரோ என்னவோ என்ற குறிப்பினை எடுத்துக் கூறினார்.

இந்நிலையில் அமரர் சந்திரசேகரனின் மறைவிற்குப் பின்னர் இந்நூலை பதிப்பித்திருப்பது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது செய்தியில் அவர் தோட்ட வீடமைப்பு பொது வசதிகள் பிரதி அமைச்சராக பணியாற்றிய காலத்தில் பெருந்தோட்ட சமூகங்களுக்கான தனிவீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருந்தார்.

இந்த வேலைத் திட்டம் தற்பொழுது அவரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரும் எனது அமைச்சரவை சகாக்களுள் ஒரு வருமான பழனி திகாம்பரத்தால் மேற்கொள்ளப்பட்டு மிகவும் வெற்றிகரமாகவும் ஆக்கபூர்வமாகவும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பெருந்தோட்ட சமூகம் சிறந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளும் என்றும் குறுகின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தனது செய்தியில், வடக்குக் கிழக்கு மக்களின் நீண்ட கால பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை காட்டி வந்த அவர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் போது மலையக மக்களின் பிரச்சினைகளும் உள்வாங்கப்பட்டு அவற்றிற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். என்ற செய்தியை ஆணித்தரமாக கூறுகின்றார்.

உலகின் பல ஐரோப்ப நாடுகள் உட்பட நூலின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டு, அமைச்சர் சந்திரசேகரனின் நீங்கா நினைவலைகள் ஓயாது ஒலித்து சங்கநாதம் முழங்கியது போல இரண்டாம் பதிப்பும் பயனாக அமையும். இதற்காக அரும்பணியாற்றிய பதிப்பாசிரியர் எச்.எச். விக்கிரமசிங்க உட்பட அனைவருக்கும் மலையக மக்கள் முன்னணியின் தலைமைப் பீடம் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ளது.

கலாபூஷணம் மாத்தளை
பெ. வடிவேலன்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...