கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலும் மக்களை அச்சுறுத்தும் குப்பைமேடு | தினகரன்

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலும் மக்களை அச்சுறுத்தும் குப்பைமேடு

கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட கட்டுகஸ்தோட்ட பகுதியிலுள்ள தேக்கவத்த கொஹாகொட பிரதேசத்தில் கடந்த சுமார் 30 வருடங்களாக குப்பை கொட்டப்பட்டு வரும் குப்பை மேட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள 10 குடும்பங்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவசரமாக வேறு இடங்களுக்கு இடமாற்றப்படவுள்ள குடும்பங்களுக்கு தற்காலிகமாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுச் சூழலுடைய பிரதேசத்தில் வதிவிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அக்குடும்பங்களின்வாழ்வாதாரத்திற்கு அவசியமான சாதாரண நஷ்ட ஈட்டுத் தொகையும் பெற்றுக் கொடுக்கப்படும். எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அம்மக்களுக்கு பண உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.இதற்கு கண்டி மாநகர சபை பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேற்படி பிரதேசத்தில் தற்போது அனர்த்த ஆபத்து நிலைமை உருவாகியுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் மற்றும் பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன, உட்பட பல அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நேற்றுமுன்தினம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள கொஹொகொட பகுதிக்குச் சென்று நேரடியாகவே அவதானிப்பு மேற்கொண்டது. அச்சமயம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"தற்பொழுது குப்பை கொட்டப்படுகின்ற பிரதேசத்தில் மூன்று இடங்களில் மண்சரிவுக்கான ஆபத்து இருப்பதாக பேராசிரியர் அத்துல சேனாரத்ன என்னிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த மூன்று பகுதிகளிலும் தற்பொழுது வசித்து வருகின்ற 10 குடும்பங்களை இப்பிரதேசத்திலிருந்து வேறு பிரதேசத்திற்கு அவசரமாக அனுப்ப வேண்டியுள்ளது. ஆகவே இவர்களுக்கு அவசியமான வாழ்வாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு இவர்களை அனுப்பாவிடில் அனர்த்தங்கள் எற்படும் போது பாரிய மோசமான நிலைமைகளை அனுபவிக்க நேரிடும். அதாவது, இங்கு தொடராக குப்பைகள் கொட்டப்படுவதனால் இப்பிரதேச மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக சுட்டிக் காட்டுகின்றனர்.

இங்கு குப்பைகள் கொட்டுவதனால் மிகவும் தூரப் பிரதேசங்கள் வரையும் துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் குப்பை மேட்டிலிருந்து வெளிவருகின்ற அசுத்தமான நீர் மகாவலிகங்கையுடன் சேர்வதால் நீர் மாசடைவதற்கான ஆபத்து காணப்படுவதாகவும் பலர் என்னிடம் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நாளொன்றுக்கு கண்டி நகரிலிருந்து சேகரிக்கப்படுகின்ற சுமார் நூறு தொன் குப்பைகள் தினமும் அங்கு கொட்டப்பட்டு வருகின்றன, இவ்வாறு கொஹாகொட பகுதியில் மிக நீண்ட காலமாக இவ்வாறு கொட்டப்பட்டு வரும் குப்பை மேடானது எந்தச் சந்தர்ப்பத்திலும் சரிந்து விழக் கூடிய அபாய நிலை தற்போது தென்படுவதாக அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் அனர்த்தங்கள் காரணமாக ஆபத்துகள் ஏற்படலாம். குறிப்பாக பேராசிரியர் அத்துல சேனாரத்ன பல விடயங்களை என்னிடம் தற்போது தெரிவித்தார். அதாவது இந்த குப்பை மேட்டுக்கருகாமையில் பல சிற்றோடைகள் காணப்படுவதனால் மகாவலி கங்கை மாசுபடக் கூடிய நிலைமை உள்ளதெனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அனர்த்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கட்டுகஸ்தோட்ட ஹொஹொ குடும்பங்களை நாம் நினைத்தவாறு அங்குமிங்கும் அனுப்பி வைக்க முடியாது. அம்மக்களுக்கான உரிய வாழ்வாதார வசதிகளை அவசரமாக செய்து கொடுப்பது கட்டாயத் தேவையாகவுள்ளது.

ஆகவே தற்காலிகத் தீர்வாக சில முன்னேற்பாடுகளை எதிர்வரும் மே மாதம் 15ம் திகதிக்கு முன்னர் செய்து கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்".

இவ்வாறு குப்பைமேட்டுப் பிரதேசத்தை நேரில் சென்று பார்வையிட்ட மத்திய மாகாண ஆளுநர் கருத்துத் தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா


Add new comment

Or log in with...