போதிய எரிபொருள் கையிருப்பில் - கூட்டுத்தாபன தலைவர் (UPDATE) | தினகரன்

போதிய எரிபொருள் கையிருப்பில் - கூட்டுத்தாபன தலைவர் (UPDATE)

 

விநியோகிப்பதிலேயே சிக்கல்...

 
குறித்த போராட்டம் காரணமாக, கொலன்னாவ எரிபொருள் களஞ்சியத்திலிருந்து எரிபொருளை விநியோகிப்பதிலேயே தடை காணப்படுவதாகவும், களஞ்சியத்தில் போதியளவான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தபானத்தின் தலைவர் ஷெஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
 


 
மன்னாரில்
 
 
எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகியுள்ள தகவலையடுத்து  மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று (24) காலை முதல் நீண்ட வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
 
மன்னார் நகரில் 3 எரிபொருள் விற்பனை நிலையம் அமைந்துள்ள போதும் தனியார் ஒருவரின் எரிபொருள் விற்பனை நிலையத்தில் மாத்திரமே எரிபொருள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
 
ஏனைய இரு எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருட்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் குறித்த தனியார் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெற்றோல்,டீசல் போன்றவற்றை பெற்றுக் கொள்ளுவதற்காக வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வனவு செய்து வருகின்றது.
 
குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவே பெற்றோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
(மன்னார் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)
 


 

அம்பாறை, அக்கரைப்பற்றில்...

அம்பாரை அக்கரைப்பற்று பிரதேசத்தில் பெற்றோலுக்கான கேள்வி அதிகரித்தமையினால் இன்று (24) காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வாகனங்களால் நிரப்பி காணப்பட்டது.
 
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோல் இருக்கின்ற நிலையங்கள் மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்பட்டது.
 
 
பெற்றோல் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக காணப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முண்டியடித்து அதிகமான தொகைக்கு பெற்றோல் நிரப்புவதையும் காண முடிந்தது.
 
பெற்றொலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாகவே பெற்றோலுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் முடிந்துவிடலாம் எனும் அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளதே இந்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
(வாச்சிக்குடா விஷேட நிருபர் - வி.சுகிர்தகுமார்)
 


 

யாழில்...

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் யாழில்  இன்றைய தினம் (24)   எரி பொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று  எரிபொருளை பெற  காத்திருப்பதை காண முடிந்தது.
 
 
 
 
நேற்று நள்ளிரவில் இருந்து திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து   நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு  பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் தொழிற்சங்கங்களால்  அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 


 

பெற்றோலிய ஒன்றியம் போராட்டத்தில்; எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கூட்டம்

 
திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில் நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று நள்ளிரவு (24) முதல் இப்போராட்டம் அமுலுக்கு வருவதாக, அவ்வொன்றியத்தின் ஊடக பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்திருந்தார்.
 
அத்துடன் தற்போது நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்திருந்ததோடு, இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தமை காரணமாகவே தாங்கள் இம்முடிவுக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
இதன் காரணமாக நேற்று (23) இரவு, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தமையை காணக் கூடியதாக இருந்தது. 
 
 

Add new comment

Or log in with...