Thursday, March 28, 2024
Home » தத்ராத்ரேய அவதாரி ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபரின் பாதுகை பூசை சாயி நாதனின் சரணாலயத்தில்

தத்ராத்ரேய அவதாரி ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபரின் பாதுகை பூசை சாயி நாதனின் சரணாலயத்தில்

by sachintha
October 6, 2023 9:36 am 0 comment

குருபிரம்மா, குருவிஷ்ணு, குருமஹேஷ்வரர் ஆகியோரின் இணைந்தவடிவமான குரு ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் மானுட அவதாரமான ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் அவர்கள் பாதுகை ரூபத்தில் இலங்கை விஜயம் செய்ய இருக்கிறார். நிகழும் ஒக்டோபர் மாதம், 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு சாயி நாதனின் சரணாலயத்தில் ஸ்ரீ ருத்ர தத்த பாதுகா அபிசேகமும் பூசையும் நடைபெற்று, அன்பர்கள் பாதுகை தரிசனமும் ஆசிகளும் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் காக்கி நாடாவில் அமைந்துள்ள 18 சத்திபீடங்களில் ஒன்றான பீடாபுரம் என்ற திருத்தலத்தில் திரு அப்பல ராஜ சர்மாவுக்கும் அகண்ட சௌபாக்கியவதி மாதா சுமதிக்கும்குழந்தையாக 13 ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் பல அதிசயங்களை அடியார்களுக்கு நிகழ்த்தினார், இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

தனது 32 ஆவது வயதில் குருவபுரம் என்னும் தலத்திற்கு அருகில் ஓடும் புனித கிருஷ்ணநதியில் ஜலசமாதியில் மறைந்தார். இன்றுவரை சூட்சும உருவில் தன்னை மனதார நினைப்பவருக்கு நொடியில் பிரத்யட்சமாக தனது அருளை வழங்கி அவர்களது கஷ்டங்களை நீக்குகிறார். இவரது திருமூர்த்தி அண்மையில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அருகில் உள்ள மேல்சிறுணை மற்றும் மாருதிபுரம் எனும் கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில்கள் அமைக்கப்பட்டன.

ஸ்ரீ சக்ர தத்ராத்ரேயர், அக்கல்கோட் மஹராஜ் மற்றும் சீரடி சாயிபாபா ஆகியோரும் இங்கு வீற்றிருப்பது இத்தலங்களின் விசேடமாகும். மேல்சிருணையிலே 16 அடி உயர பஞ்சலோக ஸ்ரீ பாத வல்லபரும் ஒரு கோடி ஸ்ரீ சக்கரங்களும் பிரதிஷ்டை செய்ய தெய்வ அருள் கூடியுள்ளது. இப்பிரமாண்டமான நிகழ்வுக்கு பக்தர்களை தயார் செய்யும் முகமாக ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபரின் பாதுகை பூசை தமிழ்நாட்டின் பல இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீபாதரின் பாதுகைகள் சென்ற இடங்களிலெல்லாம் அவரது சைதன்யத்தை பக்தர்கள் பிரத்யட்சமாக அனுபவித்து ஆனந்தமடைகிறார்கள்.

முதன்முதலாக, கடல் கடந்து இலங்கைத் திருநாட்டிற்கு வந்து கொழும்பு மாநகரில் உள்ள சாயிநாதனின் சரணாலயத்தில், தமது பாதுகை தரிசனம் மற்றும் பூசையை அடியவர்களுக்கு அருள ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் திருவுளம் கொண்டுள்ளார். சாயி சரணாலய அடியார்கள் தத்ராத்ரேய அவதாரியான சீரடி சாயி பாபாவையும் ஏனைய தத்த பரம்பரை சத்குருக்களான ஸ்ரீ பாதர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள், அக்கல் கோட் மஹராஜ் சுவாமி சமர்த்தர், ஸ்ரீ மாணிக்க பிரபு மஹராஜ், ஸ்ரீ கஜானன் மஹராஜ் மற்றும் ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி சுவாமி ஆகியோரையும் பக்தியுடன் வணங்கி அவர்கள் சரித்திரங்களைப் பாராயணம் செய்து தமது அல்லல்கள் நீங்கி நலமாக வாழ்கிறார்கள் என்பது மெய். இவர்களின் மாசற்ற அன்பிற்கும் பக்திக்கும் மனம் நெகிழ்ந்தோ என்னவோ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் தமது பொன்னான பாதுகைகளை இலங்கைக்கு அனுப்ப திருவுளம் கொண்டுள்ளார்.

சென்னை திருவாளர் சுந்தர் சாய், ஆத்மார்த்த சாய் சேவகர், காஞ்சிபுரம் ஸ்ரீ சக்ர தத்த க்ஷேத்ர பீடத்தின் அறங்காவலர் மற்றும் மாருதிபுரம் (உத்திரமேரூர்) ஸ்ரீ சுவாமி சமர்த்த சேவா சமஸ்தானம், ஸ்ரீ குருதத்த பாதுகா ஷேத்ர அறங்காவலராக விளங்குபவர். சென்னை அன்பர் ஸ்ரீ நாராயணன் ஆன்மீக பணியில் ‘யூ டியூப் நாராயணன்’ என்று அறியப்படுபவர், ஸ்ரீ குரு தத்த அவதாரங்களின் சரித்ராம்ருதம் பற்றிய சொற்பொழிவாளர், தினசரி பூஜைகள் மற்றும் தத்த பாதுகை ருத்ராபிஷேகம் செய்பவர். இவ்வன்பர்கள் இருவரும் அத்தி மரத்தாலான சுவாமி ஸ்ரீ பாதரின் பாதுகைகளுடன் ஒக்டோபர் 13 ஆம் திகதி இலங்கை வருகிறார்கள். சனிக்கிழமை காலை 9 மணிக்கு, சாயி சரணாலயத்தில் பாதுகை பூசையும், தொடர்ந்து மகா பிரசாதமும் வழங்கும் நிகழ்வும் நடைபெறும். இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி தத்த குருவின் அருளாசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பர்களை பணிவுடன் அழைக்கிறோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT