மீத்தொட்டமுல்ல; ஜப்பான் நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் | தினகரன்

மீத்தொட்டமுல்ல; ஜப்பான் நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம்

 
UPDATE
 
மீதொட்டமுல்ல தொடர்பில் அறிக்கை மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு இலங்கை வந்த ஜப்பானிய நிபுணர்கள் குழு, இன்று (24) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியது.
 
 
இந்நிகழ்வில் பிரதமரின் அலுவலக பிரதானியும் அமைச்சருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


 

குறுகிய கால நடவடிக்கைகள்:

- அடித்தளத்தை பலப்படுத்தி பொலித்தீனால் மூடுதல்
- மழை காலத்துக்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைப்பை மலை போன்ற (ஈர்ப்பு சக்திக்கமைய) வடிவத்திற்கு மாற்றுதல்
 

நீண்ட கால நடவடிக்கைகள்:

குப்பைமேட்டின் அளவை படிப்படியாக குறைத்தல் 
மீள்சுழற்சி, மின்சாரம் மற்றும் இயற்கை உர உற்பத்தி செய்தல்
 
மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகை தந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று (24) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
பிரதிநிதிகள் குழுவின் தலைவரான Mitsutake Numahata வினால் குறித்த அறிக்கை, ஜனாதிபதியிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
 
 
குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் அடித்தளத்தை பலப்படுத்தி பொலித்தீனால் மூடுதல் மற்றும் மழை காலத்துக்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைப்பை மலை போன்ற வடிவத்திற்கு மாற்றி ஈர்ப்புச் சக்திக்கமைய உருவாக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டது. 
 
குப்பைமேட்டின் அளவை படிப்படியாக குறைத்து மீள்சுழற்சி, மின்சக்தி உற்பத்தி மற்றும் இயற்கை உர உற்பத்திக்காகவும் பயன்படுத்துவது நீண்டகால விதந்துரையாக முன்வைக்கப்பட்டது. 
 
இந்த அனர்த்தம் ஏற்பட்டு மிகவும் குறுகிய காலத்தினுள் நாட்டுக்கு வருகைதந்து விரிவான ஆய்யை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தமைக்காக நிபுணர்கள் குழுவிற்கும், ஜப்பானிய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். 
 
1960 ஆம் ஆண்டில் ஜப்பானிய மக்களும் குப்பை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜப்பானிடமிருக்கும் சிறந்த அனுபவங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாகுமென அங்கு கருத்துத் தெரிவித்த ஜப்பானியப் பிரதிநிதிகளின் தலைவர் குறிப்பிட்டார். 
 
மனித பேரவலமான மீதொட்டமுல்ல சம்பவம் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 
 
இலங்கையின் கழிவுப்பொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷண யாப்பா, பாட்டலி சம்பிக்க ரணவக, ஜப்பானிய தூதுவர் கெனெச்சி சுகுநோவா உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 
 
- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
 
 
 
 
 

Add new comment

Or log in with...