Saturday, April 20, 2024
Home » மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 4 பதக்கங்கள்: தருஷி ஒலிம்பிக் எதிர்பார்ப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டி:

மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 4 பதக்கங்கள்: தருஷி ஒலிம்பிக் எதிர்பார்ப்பு

by sachintha
October 6, 2023 6:51 am 0 comment

சீனாவின் ஹான்சோ நகரை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (05) நிறைவடைந்ததோடு, இலங்கையின் போட்டிகள் நேற்று முன்தினம் வென்ற தங்கம் மற்றும் இரு வெண்கல பதக்கங்களுடன் நிறைவடைந்தது.

மெய்வல்லுனர் போட்டி தவிர இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றதோடு, அதன்படி இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இதுவரை மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இலங்கை 5 பதக்கம் அல்லது அதற்கு மேல் வெற்றியீட்டி இருப்பது 21 ஆண்டுகளின் பின்னர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை கடைசியாக 2002 ஆம் ஆண்டு 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கம் என 6 பதக்கங்களை வென்றது.

இம்முறை போட்டியில் அதிக அவதானத்தை பெற்ற வீராங்கனையாக தருஷி கருணாரத்ன மாறினார். அவர் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று ஒரு மணி நேரத்திற்குள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் இலங்கையால் வெண்கலப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.

இலங்கை இவ்வாறு மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது 21 ஆண்டுகளில் பின்னர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர் கடைசியாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றது 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டு விழாவிலாகும். அதில் சுசந்திகா ஜயசிங்க மற்றும் தமயந்தி தர்ஷா தங்கம் வென்றனர். இது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்ற 12ஆவது தங்கப் பதக்கமாகும்.

நேற்று முன்தினம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் இலங்கை வெண்கலம் பதக்கங்களை வென்றதோடு ஈட்டி எறிதலில் நதீஷா தில்ஹானி லேகம்கேவுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்த பதக்கங்களுடன் நேற்றைய தினத்தில் பதக்கப் பட்டியலில் இலங்கை 25 ஆவது இடத்தை பிடித்தது.

மூன்று பதக்கங்களை வென்றதைத் தொடர்ந்து ‘தினகரனுக்கு’ கருத்துத் தெரிவித்த தருஷி, போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடனேயே களமிறங்கியதாகவும் அதன்படி வெற்றியீட்டியதாகவும் குறிப்பிட்டார்.

“இந்த ஓட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் வெற்றி பெற முடியும் என்று அதிக நம்பிக்கை இருந்தது. எனது பயிற்சிகளுடன் இதனைச் செய்ய முடியும் என்று இருந்த நம்பிக்கை காரணமாகவே இந்த வெற்றியை பெற முடிந்தது. இந்த வெற்றியை இட்டு அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன். இது அதிக அர்ப்பணிப்பின் மூலம் பெற்ற வெற்றியாகும்” என்று தருஷி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த போட்டி இரண்டு சுற்றுகளைக் கொண்டிருந்ததோடு முதல் சுற்றில் ஓட்ட வேகம் சற்று குறைந்ததாகவும் அப்படி இல்லாவிட்டால் சாதனை ஒன்றை படைக்க முடியுமாக இருந்திருக்கும் என்றும் தருஷி குறிப்பிட்டார். எவ்வாறாயினும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பயிற்சியாளருடன் இணைந்து முன்கூட்டியே திட்டமிட்டதாகவும் தமது எதிர்பார்ப்பு தங்கப் பதக்கத்தை வெல்வது மாத்திரமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

“நான் போட்டியின் காலத்தை பற்றி நினைக்கவில்லை. நான் எதிர்பார்த்தது தங்கப் பதக்கத்தை. எனவே நான் அதனைச் செய்தேன்” என்று குறிப்பிட்ட தருஷி “இந்த வெற்றியின் பின்னால் இருந்த அனைவருக்கும் எனது நன்றிகளைக் கூறிக்கொள்வதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறேன்.

எனது தாய், தந்தை, அண்ணன், தங்கை, எனது பெற்றோருக்குப் பின்னர் பெரும் உதவியாக இருந்த சுசன்த சேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்களுக்கும், எனது பயிற்சிகளுக்கு பெரும் உதவி புரிந்த சமிந்த ஜயரத்ன அண்ணன், பேராசிரியர் ரணில் ஜயவர்தன, தேசிய ஒலிம்பிக் குழு, மெய்வல்லுனர் சங்கம் மற்றும் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்” என்று தருஷி குறிப்பிட்டார்.

“அடுத்து ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியே எனது அடுத்த எதிர்பார்ப்பாகும். முதலில் அதற்கு தகுதி பெற வேண்டும். அது முதல் எதிர்பார்ப்பு. பின்னர் அடுத்த கட்டம் பற்றி சிந்திப்பேன்” என்றார் தருஷி.

இந்த பதக்கத்தை வென்று ஒரு மணி நேரத்திற்குள் பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலை தருஷிக்கு ஏற்பட்டது. அதிலும் அவர் இலங்கைக்கு வெண்கலப் பதப்பத்தை வென்று கொடுக்க உதவினார்.

“ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு போட்டிகளில் பங்கேற்க ஏற்பட்டது பெரும் சவாலாகும். என்றாலும் என்னை விரைவாக ரிகவர் செய்ய எமது மருத்துவ குழுவினரிடம் இருந்து பெரும் உதவி கிடைத்தது. என்றாலும் இவ்வாறான இரண்டு போட்டிகளில் ஓட வேண்டி ஏற்பட்டாலும் எனது மன தைரியம் காரணமாகவே நான் ஓடினேன்” என்றும் தருஷி கூறினார்.

இந்த வெற்றியுடன் ஆசிய தரப்படுத்தலில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தை பிடித்த தருஷி சர்வதேச மட்டத்தில் மேலும் முன்னேறிச் செல்வதற்கு தேசிய ஒலிம்பிக் குழுவின் தலையீட்டுடன் வெளிநாட்டு புலமைப்பரிசில் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய ஒலிம்பிக் குழு பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார். அந்த பயிற்சி அமெரிக்காவில் இடம்பெறும் என்றும், என்றபோதும் அதற்காக தருஷியின் கல்வி செயற்பாடுகள் நிறைவடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தருஷி இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளார்.

கராட்டே

இதனிடையே இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து பெண்களுக்கான கராட்டே காத்தா ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் போட்டியிட்ட ஹோஷானி ஹெட்டியாரச்சிக்கு முதல் சுற்றுடனேயே வெளியேற வேண்டி ஏற்பட்டது. அந்தப் போட்டிக்கு 8 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், 34.30 புள்ளிகளை பெற்ற கேஷானி கடைசி இடத்தையே பெற்றார்.

இந்த விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு போட்டியே எஞ்சியுள்ளது. கராட்டே குமிதே போட்டியில் 67 கிலோகிராம் எடைப் பிரிவில் தினெத் அவிஹின்சய களமிறங்குகிறார். அவர் நாளை (7) போட்டியிடவுள்ளார்.

மல்யுத்தம்

நேற்று மல்யுத்தப் போட்டியின் 53 கிலோகிராம் எடைப் பிரிவில் களமிறங்கிய நெத்மி அஹின்சாவுக்கு கசகஸ்தான் வீராங்கனை செட்னேவா மரீனாவிடம் தோல்வியை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இதன்போது கசகஸ்தான் வீராங்கனை 5 புள்ளிகளை பெற்ற நிலையில் நெத்மி 4 புள்ளிகளை பெற்றார்.

பதக்கங்கள்

நேற்று மெய்வல்லுனர் போட்டிகள் நிறைவடையும்போது பதக்கப் பட்டியலில் சீனா 175 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தை வென்றதோடு, 39 தங்கப் பதக்கங்களை பெற்ற ஜப்பான் இரண்டாவது இடத்தை பெற்றது. தென் கொரியா 33 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை வென்றதோடு இந்தியா 21 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 5 பதக்கங்களை வென்ற இலங்கை 25 ஆவது இடத்தை பெற்றிருந்தது.

சீனாவிலிருந்து நிரோஷான் பிரியங்கர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT