தழிழ்மொழிக்கு ஏன் இந்தக்கதி? | தினகரன்

தழிழ்மொழிக்கு ஏன் இந்தக்கதி?

 இலங்கையின் அரசியலமைப்புக்கமைய சிங்களம் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது போன்று தமிழும் அரச கரும மொழியாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டில் தேசிய கீதம் கூட தமிழில் பாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரச கரும மொழியாக தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்போது அரச துறையில் கூட தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது கண்துடைப்பு போன்றே நடைபெற்று வருகின்றது. அரச அலுவலகங்கள், அமைச்சுக்களில் இடம்பெறும் ஊடக மாநாடுகளில் கூட தமிழுக்கு பெரும் பஞ்சத்தையே காணமுடிகிறது.

சில தினங்களுக்கு முன்னர் எமக்குக் கிடைத்த செய்தியொன்றில் இ. போ. ச பஸ்களில் பெயர்ப்பலகையில் தமிழ் கொலை எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. செய்தியை படித்துப் பார்த்தபோது பெரும் வேதனையாகவே இருந்தது. தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற இறக்குவானை, கஹவத்தைப் பிரதேச பாதைகளில் ஓடும் பஸ்களில் காணப்படும் பெயர்ப்பலகைகளில் காணப்படும் ஊர்ப் பெயர்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அட்சரம் தவறாமல் அப்படியே காணப்படுகின்றது. ஆனால் அதே பெயர்கள் தமிழில் உச்சரிக்க முடியாத அளவுக்கு எழுத்துக் குளறுபடிகள் நிறைந்ததாகவே உள்ளன. நாட்டிலுள்ள இ. போ. ச டிப்போக்களில் கடமை புரியும் அதிகாரிகள் அசமந்தப்போக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உயர் மட்டத்திடம் சுட்டிக்காட்டப்பட்டால் என்ன கூறுகிறார்கள்? தவறுக்கு வருந்துகிறோம். இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் எனக் கூறி தப்பித்துக்கொள்வர்.

இ.போ.ச பஸ்களில் மட்டுமல்ல அரச அலுவலகங்ளில் கூட இதுதான் நிலைமை. சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத தமிழ் பேசும் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்சமல்ல. எந்த அலுவலகத்துக்குப் போனாலும் சிறிய விடயத்துக்குக் கூட பத்துப் பேரின் காலைப் பிடிக்கவேண்டிய நிலையே காணப்படுகின்றது.

சில வாரங்களுக்கு முன்னர் எமக்குத் தெரிந்த நண்பரொருவர் முறைப்பாடொன்றை தனது தாய்மொழியான தமிழில் எழுதி உயரதிகாரி ஒருவருக்கு அனுப்பியிருந்தார். ஒருவாரத்துக்குள் அவருக்குப் பதில் வந்தது. பிரித்துப் பார்த்தபோது பதில் சிங்களத்திலேயே காணப்பட்டது. அதனை எடுத்துக்கொண்டு சிங்களம் தெரிந்தவரை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. அரசியலமைப்பு தமிழையும் அரச கரும மொழியாக எழுத்தளவில் தான் பிரகடனப்படுத்தி இருப்பதாக தமிழ் மக்கள் பேசிக்கொள்கின்றனர். ஆட்சி மொழி தனிச் சிங்களமாகவே காணப்படுகிறது. எமது மொழிக்குரிய இடத்தை உரிய முறையில் தரவே தயக்கம் காட்டுவோரிடமிருந்து எவ்வாறு ஆரோக்கியமான தீர்வை எதிர்பார்க்க முடியும் என அவர் அழாக்குறையாக கேட்டார்.

அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாகவே உணரவேண்டியுள்ளது. காலத்துக்குக் காலம் புதுப்புது விடயங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அரசுகள் கடந்த காலத்தில் முன்வைத்த திட்டம்தான் தமிழர்கள் சிங்களம் படிக்கவேண்டும். சிங்களவர்கள் தமிழ் படிக்கவேண்டும் என்பது அதற்கு பகுதி நேர வகுப்புகளும் நடத்தப்பட்டன. கடந்த ஆட்சியில் மும்மொழிக் கொள்கை மாநாடும் நடாத்தப்பட்டது.அதிதியாக முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பங்கேற்றிருந்தார்.அதனால் கண்ட பயன்தான் என்ன? மக்கள் எத்தனை வழிகளில் ஏமாற்றப்படுகின்றார்கள். சில சந்தர்ப்பங்களி்ல் தமிழ் பேசும் மக்கள் வெளியிடும் கருத்துகளில் அவர்களது ஆத்திரத்தையே காணக்கூடியதாக உள்ளது.

நாட்டின் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எந்தவொரு அலுவலகத்திலும் தமிழ் பேசும் மக்களுக்கு தமது தாய் மொழியில் கருமங்களை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதே இல்லை. கொழும்பிலுள்ள பிறப்பு, இறப்பு பதிவாளர் திணைக்களத்தில் கூட தமிழில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

பொலிஸ் நிலையங்களில் சிங்களத்தில் மட்டுமே முறைப்பாடுகளை முன்வைக்க முடிகிறது. வாக்குமூலம் வழங்கச் சென்றால் அதுவும் சிங்களத்திலேயே பதிவு செய்யப்படுகின்றது. இது தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும்.

இந்த ஆட்சியில் கூட அரச கரும மொழி அமுலாக்கத்துக்காக தனியான அமைச்சு காணப்படுகின்றது. அதில் முக்கிய விடயம் என்னவென்றால் அமைச்சுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் கூட தமிழராகும். அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி வருபவர். சிலவேளைகளில் அதிகாரத் தரப்புடன் முரண்பட்டு தனது கருத்துக்காகவும் தமிழ் மொழி பேசுவோருக்காகவும் கடும் நிலைப்பாடு கூட எடுத்து வருவர்.

தமிழ் மொழி அமுலாக்கல் விடயத்தை மேலே இருந்து கீழ் மட்டத்துக்கு எடுத்துச் செல்வதை விட கீழிலிருந்து மேலாக முன்னெடுக்க வேண்டும். அதனை கிராமிய மட்டத்திலிருந்து நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

வடக்கு கிழக்குக்கு வெளியே நாட்டிலுள்ள சகல அலுவலகங்களிலும் முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழில் கருமமாற்றக்கூடிய வகையில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழ் தெரிந்தவரகள் நியமிக்கப்படவேண்டும்.

அரச அலுவலகங்கள், அரச வாகனங்கள், தனியார், இபோச பஸ் வண்டிகளில் தமிழ் சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரச கருமமொழிகள் திணைக்களம் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அனைத்துத் திணைக்களங்கள் அரச அலுவலக ங்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களம் உரிய சுற்று நிருபங்களை அனுப்பி தமிழ் மொழிப் பயன்பாட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும். இப்படியான சிறிய விடயத்திலாவது தமிழ் பேசும் மக்களை திருப்திப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய அதிகாரிகள் இதற்காக நேசக்கரம் நீட்டுவார்களா?


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...