சைற்றம் பங்குடமை நிறுவனமாக மாற்றம்; நிர்வகிக்க தனி கவுன்சில் | தினகரன்

சைற்றம் பங்குடமை நிறுவனமாக மாற்றம்; நிர்வகிக்க தனி கவுன்சில்

சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் பங்குடமை நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதோடு அதனை நிருவகிக்க தனியான கவுன்சில் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி இனிமேல் அது தனியொருவருக்கு சொந்தமானதல்ல எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

நீண்டகாலப் பிரச்சினையான இது அண்மித்த காலத்தில் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. இதனை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டதன் காரணமாக உயர் கல்வியமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோருடன் நானும் இணைந்து மூன்று சந்திப்புகளை மேற்கொண்டு ஒரு நியாயமான உடன்பாட்டுக்கு வர முடிந்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நடத்தப்பட்ட மூன்று சந்திப்புக்களிலும் தனிநபரிடம் இப்பல்கலைக்கழகம் இருப்பது தவறான விளைவுகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை இணைத்துக்கொண்டு ஒரு நிர்வாக சபையை அமைத்து அரச சார்பற்ற நிறுவனமாகச் செயற்ட வைப்பதில் ஓரளவு வெற்றி காண முடிந்துள்ளது.

இலவசக் கல்வி முறை பாதிக்கப்படாத விதத்தில் உயர் கல்வி முறையில் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள் அமைய வேண்டுமெனக் கூறிய ஜனாதிபதி மருத்துவக் கல்விக்காக எமது பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதை விட மருத்துவ பீடத்துக்கு பரீட்சை மூலம் தெரிவானவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடிய விதத்தில் இந்த சைட்டம் மருத்துவக் கல்லூரியை பயன்படுத்த முடியும், அதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சகலருக்கும் பயன்தரக்கூடிய வகை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். கட்டண முறையில் சாதாரண மக்களுக்குப் பொருந்தக்கூடிய விதத்தில் கட்டமைப்பைக் கொண்டுவரவும் கூடுதலான புலமைப் பரிசில்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.

முறைகேடுகளற்ற விதத்தில் இப்பல்கலைக்கழகம் இயங்குவதற்கும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தகைமைக்கேற்ற தகைமைகளை கொண்டியங்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

எமது ஆலோசனைகளுக்கு சாதகமாகச் செயற்பட சைட்டம் நிறுவனர் முன்வந்துள்ளதால் விரைவில் நிருவாக சபை அமைக்கப்படும் என்பதோடு பங்குச் சந்தையில் பங்குகளை பெற்றுக்கொடுக்கவும் அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சைட்டம் தொடர்பில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை. சுகாதார அமைச்சு, உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது இதனை பொது நிறுவனமாக உள்வாங்கி நிருவாக சபை அமைப்பதற்கு டாக்டர் நெவில் பெர்னாந்து இணக்கம் தெரிவித்திருக்கிறார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு. மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டுள்ளதால் ஒரு சுமுக தீர்வுக்கு வர முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...