குப்பைகள் அகற்றும் நடவடிக்ைகயில் மாபியாக்கள் ஒழிக்கப்பட வேண்டும் | தினகரன்

குப்பைகள் அகற்றும் நடவடிக்ைகயில் மாபியாக்கள் ஒழிக்கப்பட வேண்டும்

'குப்பை மாபியாவை கட்டுப்படுத்த பிரதான அரசியல் கட்சிகள் இரண்டினாலும் முடியாது போனாலும் மக்கள் விடுதலை முன்னணி திஸ்ஸமஹாராமையில் முன்மாதிரி ஒன்றை காட்டியது' என்று மீதொட்டமுல்லை குப்பைமேடு அனர்த்தம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ம. வி. முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,

“இந்நாட்டில் குப்பை அகற்றும் நடவடிக்கை பெரும் பணம் ஈட்டும் வியாபார மாபியாவாகும். குப்பை அகற்றும் ஒப்பந்தம், மற்றும் குப்பை போடும் இடம் அதற்காகப் பாவிக்கப்படும் வாகனங்கள் எல்லாமே பணம் சம்பாதிக்கும் வழிகளாகும்.

குப்பை அகற்றும் நடவடிக்கையை நிர்வாகிப்பவர்கள் சில அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்த அதிகாரிகளுமாவர். இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையை உடைத்து மக்கள் நடமாட்டம் அற்ற சூனிய பிரதேசமொன்றைத் தெரிவு செய்து குப்பை மீள்சுழற்சியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

அறுபத்தொன்பது ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த பிரதான அரசியல் கட்சிகளால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது போயுள்ளது. எந்த நாளும் எல்லா இடத்திலும் குப்பை மேடுகள் உருவாகி பிரச்சினை ஏற்படுகின்றது. ம. வி. முன்னணி அன்று திஸ்ஸமஹாராமையில் பிரதேச சபை அதிகாரத்தைப் பெற்ற சந்தர்ப்பத்தில் குப்பை மீள்சுழற்சி முறையை ஏற்படுத்தினோம். அதன் மூலம் அங்கு உரத்தை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு சலுகை விலையில் வழங்கினோம்.

நாம் அந்த சிறிய பிரதேச சபை மூலம் நாட்டிற்கே முன்மாதிரியொன்றை பெற்றுக் கொடுத்தோம். இன்று தேசியப் பிரச்சினையாக மாறியுள்ள இப்பிரச்சினையைத் தீர்க்க முன்னாள் அரசு முன்வரவில்லை. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் பொறுப்புள்ள சூழல் அமைச்சரொருவர் இரண்டு வருடங்களில் ப்ளூமெண்டல் குப்பை மலையை தரை மட்டமாக்குவதாகக் கூறினார். அது வெறும் வாய்வார்த்தைகள்தான்.

பின்னர் இந்தக் குப்பையை மக்கள் வசிக்கும் பிரதேசமான மீதொட்டமுல்லவில் கொட்டுவதற்கு ஐ.தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். குப்பை என்பது பணம் சம்பாதிக்கும் வியாபாரமாகும். அந்தப் பணத்திற்கு அடிபணிந்தே அவர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். 2009ம் ஆண்டு கோத்தபய ராஜபக்ஷ அதிகாரத்தைப் பாவித்தே அங்கு குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டினார். அப்போதும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஒரே பிரதேசத்தில் குப்பைகளைக் கொண்டு சென்று கொட்டுவது தீர்வாகாது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் குப்பையை ஜா_எல ஏத்தேகாடு என்னும் பிரதேசத்தில் கொட்டுவதற்கு முடிவெடுத்தது. அந்த இடம் அத்தனகளு ஓயவை அண்மித்த சனங்கள் வாழும் பிரதேசமாகும். அந்த இடத்திலும் குப்பையை சும்மா கொண்டு போய்க் கொட்டவே எண்ணினார்கள்.

அங்கும் மீள்சுழற்சி முறையொன்று இருக்கவில்லை. அந்த இடத்தில் நெதர்லாந்து உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டாலும் எந்தவொரு திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை. அது தொடர்பாக கூறப்படும் விடயங்களிலும் உண்மைத் தன்மையில்லை.

அங்கு சூழல் அதிகாரி பெற்றுக் கொடுத்துள்ள அறிக்கையின்படி அருகிலுள்ள சதுப்பு நிலத்தை மண் நிறைத்து அதன் பின்னர் குப்பை கொட்டப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் குப்பையைக் கொட்டினால் அத்தனகலு ஓயாவிற்கு அடித்துச் செல்லப்பட்டு அடிக்கடி வெள்ளப் பாதிப்பு ஏற்படும். மாகேலிட உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பெரும் பிரச்சினை ஏற்படும். கடந்த வருடமும் பத்து பதினைந்து அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டது. அங்கு சென்று குப்பை கொட்டுவதால் சூழல் பாதிப்பு ஏற்படும்.

மீள்சுழற்சி நடவடிக்கையை ஆரம்பித்து குப்பைகளைக் கொண்டு சென்று கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உண்மையான கதை என்னவென்றால் இந்த நடவடிக்கைக்காக எந்தவொரு நிறுவனத்தையும் வருவதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை.

பிரித்தானியா, ஜப்பான், சீன மற்றும் கொரிய நிறுவனங்கள் வந்து அதற்கு தீர்வைப் பெற்றுத் தர தயாரெனக் கூறின. ஆனால் போலியான காரணங்களைக் கூறி அவற்றை மறுத்தார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால், குப்பையுடன் தொடர்புடைய அரசியல் மாபியாவை தோல்வியடையச் செய்ய வேண்டும். ஆயிரம் மில்லியன் ரூபா டென்டரை எண்ணூறு மில்லியன் ரூபாவுக்கு கொடுக்கின்றார்கள். இருநூறு மில்லியன் ரூபா இலாபம். அதனை நாம் தோல்வியடையச் செய்யாமல் குறுகிய அரசியல் இலாபம் காண முனைகின்றோம்.

இது முற்றிலும் தவறாகும். மீதொட்டமுல்ல மக்கள் தாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதற்கு தாக்குதல் நடத்தினார்களே தவிர செவிமடுக்கவில்லை. மீள்சுழற்சி நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தால் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்க மாட்டார்கள். புத்தளத்திற்கு கொண்டு சென்று போட நினைத்தார்கள். பின்னர் எக்கலவிற்கு வந்தது. தற்போது முதுராஜவலவிற்கு கொண்டு செல்லப் போகிறார்கள்.

இத்திட்டத்தை பிரபல வர்த்தகர் ஒருவரே செய்யவுள்ளார். அதிலிருந்து இது வியாபாரம் என்று தெளிவாகின்றது. எப்படியிருந்த போதும் அரசாங்கம் இதனை தேசியப் பிரச்சினையாக ஏற்று மக்களுக்கு நோயைப் பரப்பும் மிகவும் மோசமான சூழலை உருவாக்கும் இந்நிலைமையை அறிந்து அதிவேகப் பாதை, பாரிய ஹோட்டல்கள் அமைக்க மற்றும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள கடனுதவி பெறுவது போன்று இப்பிரச்சினையைத் தீர்க்கவும் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்” என்கிறார் விஜித ஹேரத் எம். பி.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி கருத்து:

கழிவுகள் கொட்டப்படுவதற்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு உடனடியாகத் தேவை என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

“குப்பைகளை அகற்றும் பிரச்சினையை தீர்க்கும் பணியை யாருக்கும் அளிக்காமல் நாட்டின் உயர்பீடம் அதற்காக விஞ்ஞானபூர்வமான தீர்வொன்றை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இது கொழும்பு குப்பைப் பிரச்சினை என்று கூறினாலும் முழு நாட்டிலும் உள்ள பிரச்சினையாகும். மீதொட்டமுல்லயில் எனக்குத் தெரிய 1989ம் ஆண்டிலிருந்து குப்பை கொட்டப்படுகின்றது. ஆரம்பத்தில் கொலன்னாவ, முல்லேரியாவ, கொடிகாவத்த நகரசபை, பிரதேச சபை குப்பைகளே அங்கு கொட்டப்பட்டன. குப்பைகள் மலை போல் குவிந்து சரிந்து விழுந்து மக்கள் இறக்கும் நிலைமை உருவாவதற்கு முன்னாள் அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமுமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

இதிலிருந்து யாராலும் விலக முடியாது. அதனால் யார் மீதாவது கைகாட்டி விட்டு தப்பிக்க முடியாது. அதற்குக் காரணம் குப்பைகளை அகற்றுவதற்கு எவ்விதமான விஞ்ஞானபூர்வமான தீர்வும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இது பற்றி மிகவும் கவலையடைவதுடன் அது குறித்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

அநேகமானோர் கொழும்புக் குப்பை என்று குற்றம் சாட்டுகிறார்கள். அதுவும் குறுகிய நோக்கத்துக்காக கூறப்படுவதாகும். சாதாரணமாக கொழும்புக்கு தினமும் எட்டு இலட்சம் பேரளவில் வருகிறார்கள்.

அந்த எட்டு இலட்சம் பேரும் போடும் குப்பையுடன் கொழும்புக் குப்பையும் சேர்ந்து ஒரு நாளைக்கு எழுநூற்றைம்பது இலட்சம் தொன் குப்பை சேருகின்றது. அதனால் இப்பிரச்சினைக்கு தேசிய தீர்வொன்று அவசிமாகும். முன்னரே இப்பிரச்சினையை அறிந்து தீர்வு கண்டிருந்தோமானால் இத் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வதோடு சிலர் இந்தப் பிரச்சினை மூலம் பணம் சம்பாதிக்கப் பார்க்கின்றார்கள்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் தவறியுள்ளன. இதற்கான தீர்வொன்றை பிரதமர் அண்மையில் முன்வைத்தார். ஏக்கல பிரதேசத்தில் குப்பை மீள்சுழற்சி திட்டமொன்றுடன் குப்பையை அகற்றும் நடவடிக்கையை ஆரம்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அங்குள்ள மக்கள் ஒத்துழைக்காமல் எதிர்ப்புத் தெரிவித்ததனால் திட்டம் கைவிடப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு நாட்டின் உயர் மட்டத்திலிருந்து தீர்வும் காணப்பட வேண்டும். இது கொழும்பு குப்பைப் பிரச்சினையல்ல. நாட்டின் குப்பைப் பிரச்சினையாகும். மரணமடைந்தவர்களும் குப்பையை இங்கேதான் கொடடியிருப்பார்கள். நாட்டின் இந்தப் பிரச்சினைக்கு விஞ்ஞான ரீதியாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

அனுர பிரேமலால்
தமிழில்: வீ. ஆர். வயலட்


Add new comment

Or log in with...