இரணைமடுவை சுற்றியுள்ள 2439 ஏக்கர் காணியை விடுக்க இராணுவம் இணக்கம் | தினகரன்

இரணைமடுவை சுற்றியுள்ள 2439 ஏக்கர் காணியை விடுக்க இராணுவம் இணக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சி இரணைமடுவை சுற்றியுள்ள 2439 ஏக்கர் காணியை விடுப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இராணுவக் கட்டுப்பாட்டில் 24,000 ஏக்கர் காணி இருந்ததாகவும் தற்போது 783 எக்கர் காணியையே இராணுவத்தினர் வைத்திருப்பதாகவும் அதை படிப்படியாக விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்படுமெனவும் கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவித்ததாக சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.

அத்துடன் கிளிநொச்சியில் சுமார் நூறு ஏக்கர் காணியை உடனடியாக இராணுவத்தினர் விடுவிக்கவுள்ளதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பொது மக்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ​இரணைமடுவை சுற்றியுள்ளமேற்படி காணிகள் முல்லைத்தீவு மாவட்டம் என்பதால் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் இக் காணி விவகாரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் அந்தக் காணிகள் கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகதெரிவித்தனர்.

கிளிநொச்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கலந்துரையாடலாகவும் சுமுகமான பேச்சுவார்த்தையாகவும் இடம்பெற்றது. இராணுவத்தினரும் தமது கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுவதாக தெரிகிறது.

ஆகவே இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் நாங்கள் முன் நகரலாம் படிப்படியாகவேனும் காணிகள் விடுவிக்கப்படும் என்று தென்படுகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இராணுவனத்தினர் தனியார் காணிகளை விடுப்பதுதான் தங்களது முதல் நோக்கம் என தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரேயொரு பிரச்சினை என்னவெனில், காணிகள் சி​வற்றை தனியார் காணிகள் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்தியதை இராணுவத்தினர் அரச காணிகள் என்று நினைத்திருக்கின்றார்கள். காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஆரம்பமாகி முடிவுக்கு கொண்டுவரப்படாமலிருப்பதே காரணம். காணி சுவீகரிப்பு ஆரம்பமாகியவுடனே அவை அரச காணி என்று இராணுவத்தினர் நினைத்துவிட்டார்கள்.

கிளிநொச்சி குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...