Home » இலவசக் கல்விக்கு புத்துயிரூட்டி வறிய மாணவர் மீது இரக்கம் கொள்ள ஆசிரியர்கள் முன்வருவது அவசியம்!

இலவசக் கல்விக்கு புத்துயிரூட்டி வறிய மாணவர் மீது இரக்கம் கொள்ள ஆசிரியர்கள் முன்வருவது அவசியம்!

-அர்ப்பணிப்புடன் கருமமாற்றும் ஆசிரியப் பெருந்தகைகளை போற்றுவோம்!

by sachintha
October 6, 2023 6:00 am 0 comment

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவராலும் போற்றப்படுபவர்கள் ஆசிரியர்கள் ஆவர். சமுதாய வழிகாட்டி,உளவியளாளர், கணிதமேதை, மருத்துவர், ஆய்வாளர், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தளங்களில் நின்று உலகை இயக்கும் இயக்க சக்திகளுக்கு எரிபொருளாக திகழ்பவர்கள் ஆசிரியர்களேயாவர்.

எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்ற ஆத்தி சூடி வாக்கியம், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு எனும் திருக்குறளின் முதலாவது பதிவு, ஒதுவீராக! படிப்பீராக! என்கின்ற அல்-குர்ஆனின் முதல் கட்டளை என்பவற்றை வைத்துப் பார்க்கும் போது, ஆசிரியம் அல்லது கற்பித்தல் என்பது புனிதமானதென்பது தெளிவாகின்றது. இவ்வாறான பண்புகளை உண்மையாகவே கொண்டுள்ள ஆசிரியர்களைக் கௌரவிக்கும் ஓர் தினமே ஆசிரியர் தினமாகும்.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் ஒக்டோபர் 06 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்ற போதும், செப்டம்பர் 5 இல் இந்தியாவிலும், ஒக்டோபர் 5 இல் ரஷ்யாவிலும், மே 2இல் ஈராக்கிலும், ஜனவரி 16 இல் தாய்லாந்திலும், நவம்பர் 24இல் துருக்கியிலும் என வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

தன்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற மாணவப்பயிர்களை எதிர்கால நற்பிரஜைகளாக வளர்த்தெடுக்க வேண்டியவர்கள் ஆசிரியர்களாவர். இன்றைய தினத்தில் நாம் நடத்துகின்ற வழமையான கொண்டாட்டங்கள், கௌரவிப்புக்கள் என்பவற்றுக்குப் புறம்பாக ஆசிரியர்கள் அனைவரையும் அர்ப்பணிப்பாளர்களாக மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு முதன்மையானதாகும். வெறுமனே ஆசிரியர்தின வழிபாடாக மட்டுமன்றி, ஆசிரிய இலட்சியத்தை விதைக்கின்ற தினமாக இத்தினம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

கிஷ்ஷ்ணரின் குருவாக ஸ்ரீ சாந்தீபனி மகரிஷியும், அகத்தியரின் குருவாக சிவனும், நபித் தோழர்களின் கற்பிப்பாளராக முஹம்மது(ஸல்) அவர்களும் இருந்ததை வேதநூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாறான உயர்நிலையில் வைத்து மதிக்கப்படும் ஆசிரியர்கள் தமது பொறுப்புகளைப் பற்றி இன்றைய தினத்தில் சிந்திப்பது பொருத்தமாகும்.

மாணவர்களுக்குத் தண்டனை வழங்காமை, குருகுலவாசகக் கல்வி முறையின் மாற்றம், கட்டாய வகுப்பேற்றம் ஆகிய கல்விக் கொள்கையின் முன்னெடுப்புகளால் ஆசிரியத்துவம் வலுவிழந்து வருகின்றது என்ற சிந்தனை பல்வேறு நாடுகளில் இன்று வேரூன்றியுள்ளது. வரலாற்றுக் காலங்களில் வலம் வந்த அவைக்கள புலவர்கள் முதல் அல்பேட் ஐன்ஸ்டின், மரியா மொன்ட சூரி, ஸ்டிபன் காகின்ஸ் போன்ற விஞ்ஞானத்துறை அறிஞர்கள் மற்றும் இந்திய ஆசிரியர்தின மூலகர்த்தவான இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்த ​ெடாக்டர் சர்வாப்பள்ளி ராதாகிருஷ்ணன் அடங்கலாக பலர் ஆசிரியர்களாகத் தம்பணி தொடர்ந்திருக்கின்றனர்.

ஆசிரியர்களைக் எதிர்கொண்டால் சபைகளிலும் வீதிகளிலும் எழுந்து நின்று மரியாதை செய்வதும், அவர்களது கண்டிப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வதும் என மேன்மைப்பட்டிருந்த ஆசிரியர் சமூகம் இக்காலத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய அரச தொழிற்துறையினரை விடவும் அதிக சம்பளம், எதிர்பாராத விடுமுறைகள் போன்றவற்றால் ஆசிரியர்கள் மீதான மனக்கிலேசம் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாததாகின்றது.

அதுமாத்திரமன்றி ஆசிரியர் சமூகத்திலுள்ள பலரின் நடத்தைக் கோலங்களும் அவர்கள் மீது சமூகத்தில் நிலவும் அதிருப்திக்குக் காரணமாகின்றன.

பாடசாலைக் கற்பித்தலைப் பார்க்கிலும், ரியூஷன் கல்வியானது எமது மாணவர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் இலவசக் கல்வி என்பது கேள்விக்குறியாகிப் போயுள்ளது. இலவசக் கல்வியினுடாக மாத்திரம் பல்கலைக்கழகம் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பு எட்டாக்கனியாகி வருகின்றது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் வைத்தியத்துறை, பொறியியல்துறை போன்றவற்றுக்குள் நுழைவதற்கு ஏழை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

பாடசாலைகளில் கற்பித்து விட்டு ரியூஷன் வகுப்புகளை நடத்துவதில் தவறில்லை. ஆனால் பாடசாலையில் கற்பிக்காமல் ரியூஷன் வகுப்பில் கற்பிக்கின்ற ஆசிரியர்களைப் பார்க்கின்ற போது வறிய மாணவர்கள் மீது கவலையே வருகின்றது.

சில பாடசாலைகளில் அதிபராலும் மாணவர்களாலும் ‘இயங்குநிலையற்றவர்’ என்ற பெயரினைக் தக்கவைத்துக் கொண்ட ஆசிரியர்கள் சிலர் ரியூஷன் வகுப்புக்களில் திறமையாகத் தொழிற்படுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

சில பாடசாலைகளில் குறித்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் எவ்வித நேரசூசிகளும் இன்றி அதிபர்களின் கைப்பொம்மைகளாக இருந்து வருகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் காலத்தை வீணடிக்கின்றனர். தேடல் மிகுந்த இக்காலத்தில் வெளித்தொடர்பாடல் மூலம் கனதியான அறிவுடன் வருகின்ற மாணவர்களை அலைக்கழிக்கின்றவர்களாக இத்தகையோர் உள்ளனர்.

பாடசாலை நேரங்களில் தங்களது சொந்த வேலைகளுக்காக வெளியேறிச் செல்வது, ஒப்பத்தினை இட்டு விட்டு வீடுகளில் ஓய்வெடுப்பது, தொழிற்சங்கச் செயற்பாட்டின் அங்கத்துவத்தைப் பெற்று கற்பித்தல் பணியில் இருந்து விலகியிருத்தல் என்றெல்லாம் ஆசிரியர் பலர் மீதான விமர்சனங்கள் அதிகம் உள்ளன.

ஆசிரியர்களில் பலர் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக வெளியே சென்றால் உரிய நேரத்திற்கு திரும்பி வருவதில்லை. ஆசிரியர்கள் மீது பெற்றோரின் விமர்சனங்களும் பார்வையும் எந்நேரமும் இருந்து கொண்டேயிருக்கின்றன.

அதேசமயம் ஆசிரியர்களை ஒரு சமூகத்தின் முன்மாதிரியாக, சமூக வழிகாட்டிகளாக, மாணவர்களின் ஏணியாக, அவர்களின் உருவாக்கியாக பல்வேறு கோணங்களில் கௌரவிக்கின்ற பெற்றோரும் உள்ளனரென்பதை மறுப்பதற்கில்லை.

எல்லாவற்றிலும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் இருப்பது உண்மை. ஆசிரியர்கள் மீதும் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவையாகும். இதனை ஒரு தொழிலாக அன்றி பணியாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஆசிரியர்கள் நம் மத்தியில் அநேகம் உள்ளனரென்பதை நாம் காண்கின்றோம். மாணவர்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டு, தியாக சிந்தையுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்விக்கு உயிர்கொடுக்கும் மகான்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவர்கள் என்றும் மாணவர்களின் உள்ளங்களில் நிறைவோடு வாழ்கின்றனர். அவ்வாறானவர்களை இச்சந்தர்ப்பத்தல் நினைவு கூருவோம், அவர்களுக்கு மகுடம் சூட்டுவோம்.

ஜெஸ்மி எம்.மூஸா…

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT