காக்ைக வன்னியன் போல் சிலர் சுயநலச் செயற்பாடு | தினகரன்

காக்ைக வன்னியன் போல் சிலர் சுயநலச் செயற்பாடு

சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்கொண்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சித்துவரும் நிலையில் சிலர் காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறானவர்களின் செயற்பாடானது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் பேச்சுக்களுக்கு ‘வா’ என்று அழைப்பார்கள். போனால் குடிக்கத் தருவார்கள், சாப்பிடத் தருவார்கள். ஆனால் உரித்துக்களைத் தரமாட்டார்கள் என்றும் வடமாகாண முதலமைச்சர் விமர்சித்தார்.

வடமாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியனின் சிலையை முல்லைத்தீவில் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறினார்.

தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அதேபோன்று வெற்றி வாகை சூடியவர்களும் தொடர்ந்து வெற்றியாளர்களாக மிளிர முடியாது என்பதற்கு பண்டாரவன்னியனின் வரலாறு ஒரு சிறந்த சான்றாகும்.

எமது மக்கள் சொல்லொண்ணாத்துயரங்களில் வாடுகின்றார்கள். உறவுகளை இழந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள், இருப்பிடங்களை இழந்தவர்கள், நிலபுலங்களை இழந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் துன்பச் சுமைகளுடன் வாழுகின்றார்கள். இவர்களின் துன்பங்களை எவ்வாறு துடைக்க முடியும் அல்லது இவர்களுக்கு எந்த வகையில் எம்மால் உதவிகளை அல்லது ஒத்தாசைகளை வழங்க முடியும் என நாம் யாவரும் அல்லும் பகலும் செய்வதறியாது சிந்தித்த வண்ணம் உள்ளோம். இந்தத் தருணத்தில் எமது வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் முன்வர வேண்டும்.

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முள் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பரந்தன் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...