குப்பைமேடு அனர்த்தத்தில் மறைந்துள்ள உண்மைகள்! | தினகரன்

குப்பைமேடு அனர்த்தத்தில் மறைந்துள்ள உண்மைகள்!

கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவுக்கு உள்ளாகி அனர்த்தம் ஏற்பட்டு இன்றோடு ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது. இந்த ஒரு வார காலப் பகுதியில் இக்குப்பைமேடு தொடர்பாகவும், அது சரிவுக்குள்ளாகி அனர்த்தம் ஏற்பட்டமை தொடர்பிலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி விட்டன. அவை இக்குப்பை மேட்டினுள் மோசடிகள் மாத்திரமல்லாமல் பல உண்மைகளும் மறைந்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.

இந்த குப்பைமேடு சரிவுக்கு உள்ளாக முடியும் என்ற முன்னெச்சரிக்கையை அரசாங்க உத்தியோகத்தர்கள் ஏற்கனவே பிரதேசவாசிகளுக்கு வழங்கியுள்ளனர். அதேநேரம் இக்குப்பைமேடு காணப்படும் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கொழும்பு மாநகர சபையும் செயற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் மேல் மாகாண சபை உறுப்பினர் சுசில் ஹிதல்பிட்டிய தொலைபேசி ஊடாகத் தம்முடன் தொடர்பு கொண்டு மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவுக்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தல் எற்பட்டிருப்பதாகக் கூறியதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய குறிப்பிட்டிருக்கின்றார்.

என்றாலும் இக்குப்பை மேடு காணப்படும் பகுதியிலிரு-ந்து மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேல் மாகாண சபை ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் மேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் பதினையாயிரம் ரூபாவை வழங்கி இவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்தை ஏற்று சுமார் 40 குடும்பங்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளன.

ஆனால் சில அரசியல்வாதிகள் தம் நலன்களை அடைந்து கொள்வதற்காகப் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதைத் தவி-ர்த்துள்ளதாகவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. அத்தோடு சிலர் இக்குப்பை மேட்டை வைத்து தனிப்பட்ட நலன்களை அடைந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

'அரசியல் கயிறிழுப்பு காரணமாகவே இப்பகுதி மக்களை அப்புறப்படுத்த முடியாது போனது மட்டுல்லாமல் பெறுமதியான உயிர்களையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது' என்றும் மேல் மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல நிவாரணங்களையும் அளிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்றுமுன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு இந்த அனர்த்தம் காரணமாக மரணமடைந்தவர்களுக்குப் பொறுப்பு கூற நாம் கடமைப்பட்டுள்ளோம் எனவும் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விடயத்தில் ஜனாதிபதியும், அரசாங்கமும் தமது பொறுப்புக் கூறும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

இவ்வாறான நிலையில் இங்கு குப்பையைக் கொட்டுவதற்காக லொறியொன்றுக்கு ரூபா 1000 முதல் ரூபா 1500 வரை கப்பம் அறவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான சூழலில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் நேற்றுக்காலையில் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதொட்டமுல்லையில் குப்பைகளைக் கொட்டுவதற்கு பணம் அறவிடப்பட்டமை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கவென ஒய்வு பெற்ற நீதியரசர் ஒருவரை நியமித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையைத் தமக்கு ஒரு மாத காலப் பகுதிக்குள் வழங்குமாறு கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவ்விடயத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்படுவார்களாயின் அவர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் பொறுப்பு மிக்க அரசாங்கம் என்ற வகையில் பாதிக்கப்பட்டுள்ள சகல மக்களுக்கும் நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு இக்குப்பை மேட்டில் மறைந்துள்ள மேலும் பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. அதேநேரம் இந்த அறிவிப்பின் ஊடாக ஜனாதிபதி வெளிப்படைத்தன்மையை மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்நடவடிக்கை மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாகவே இருக்கும். ஜனாதிபதி மேற்கொண்டுள்ள இவ்விடயம் தொடர்பான நடவடிக்கைளை ஆக்கபூர்வலமான நடவடிக்கைகளாகவே மக்கள் நோக்குகின்றனர்.

ஆகவே இக்குப்பைமேட்டை வைத்து தனிப்பட்ட முறையில் இலாபமடைந்தவர்கள், அந்த இலாபத்தை அடைந்து கொள்வதற்காக இந்த அப்பாவி மக்களைப் பாவித்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தத் தவறக் கூடாது. அப்போதுதான் இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் இனிமேலும் இடம்பெறாது தவிர்க்க முடியும். அத்தோடு மோசடிக்காரர்களின் உண்மை மு-கத்தை மக்கள் கண்டு கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். அது அவர்களை விட்டு மக்கள் பாதுகாப்புப் பெற வழிவகுக்கும். 


Add new comment

Or log in with...