அமெரிக்காவின் விமானதாங்கி கப்பல் வட கொரியாவுக்கு அப்பால் பயணம் | தினகரன்

அமெரிக்காவின் விமானதாங்கி கப்பல் வட கொரியாவுக்கு அப்பால் பயணம்

வட கொரியா நோக்கி பயணிப்பதாக அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் விமானதாங்கி கப்பல் மற்றும் ஏனைய போர் கப்பல்கள் தற்போது அதற்கு எதிர்த் திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

வட கொரியாவின் அணு செயற்பாடுகள் தொடர்பான பதற்ற நிலை காரணமாக கார்ல் வின்சன் விமானதாங்கி கப்பலின் தாக்குதல் படை கொரிய தீபகற்பத்தை நோக்கி பயணிப்பதாக அமெரிக்க கடற்படை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி அறிவித்தது. போர் கப்பல் அனுப்பப்பட்டிருப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கடந்த வாரம் கூறி இருந்தார்.

எனினும் விமானதாங்கி கப்பல் வார இறுதியாகும்போது அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து தொலைதூரத்தில் இருந்ததோடு அது நேராக இந்திய பெருங்கடலை நோக்கி பயணித்து வருகிறது.

அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் கட்டளையகம் செவ்வாயன்று வெளியிட்ட அறிவிப்பில், போர் கப்பலின் பேர்த் துறைமுகத்தை நோக்கிய பயணம் ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட கப்பல் அதன் முந்தைய அட்டவணையை பூர்த்தி செய்ய அவுஸ்திரேலிய வடமேற்கு கடலுக்கு அப்பால் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விமானதாங்கி கப்பல் வார இறுதியில் ஜவா கடலில் இருந்து சுன்டா நீரினையை நோக்கி பயணிக்கும் புகைப்படத்தை கடற்படை வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவின் கடற்படை தாக்குதல் குழு, உத்தரவுக்கு அமைய மேற்கு பசுபிக் கடலில் பயணிக்கிறது.

எனினும் பயணப்பாதை மாற்றப்பட்டதற்கான காரணம் பற்றி தெளிவாக தெரியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது ஒரு வேண்டுமென்ற நடவடிக்கை, வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை பயமுறுத்தும் செயற்பாடு அல்லது தவறான தொடர்பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் தாக்குதல் குழுவில் 97,000 தொன் கொண்ட விமானதாங்கி கப்பல், இரு ஏவுகணை கப்பல்கள் மற்றும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் ஒன்றை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் விமானதாங்கி கப்பலுக்கு சென்றுள்ளார். பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர், வட கொரியா மீது கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அண்மைய வாரங்களில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் விமானதாங்கி கப்பலை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்புவது ஒரு முன்கூட்டிய தாக்குதலுக்கான திட்டமாக கருதப்பட்டு வந்தது. 


Add new comment

Or log in with...