பேரவலத்துக்கு யார் பொறுப்பு? | தினகரன்

பேரவலத்துக்கு யார் பொறுப்பு?

மீரியபெத்த, அரநாயக்க, சாலாவ என நீண்டு செல்லும் அவலங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் பெயர் 'மீதொட்டமுல்லை' குப்பை தானே என பொருட்டாக கொள்ளாமல் ஒதுக்கி வைத்த விவகாரம் இன்று பூதகரமான பிரச்சினையாக மாறிவிட்டது.

ஒருவாரம் கடந்தும் குப்பை மேட்டு அவலத்தின் சோகம் ஓயவில்லை. ஒரு பக்கம் இந்த அனர்த்தத்திற்கு பொறுப்பானவர்கள் யார் என சாதாரண குடிமகன் முதல் உயர்மட்டம் வரை அலசப்படுகிறது. மறுபக்கம் சடலங்களை மீட்கும் பணிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முழு நாடும் சிங்கள தமிழ் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கையில் கடந்த 14ம் திகதி மீதொட்டமுல்லை அரங்கேறிய அவலம், முழு நாட்டையும் ஒரு கனம் அதிரவைத்தது.

ஒரு ஊரையே புரட்டியெடுத்த இந்த அனர்த்தம் சுமார் 40 உயிர்களை காவு கொண்டுள்ளது. 100 வீடுகள் வரை இருந்த இடம் தெரியாமல் சிதைந்து கிடப்பதோடு 246 குடும்பங்களை சேர்ந்த 1059 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் 300 அடி வரை உயர்ந்து வளர்ந்த குப்பை மேட்டை இனியும் சுமக்க முடியாதென பூமித்தாய் தனக்குள் புதைத்துக் கொண்ட சோகம் இன்னும் ஜீரணிக்க முடியாமல் பிரமிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. குப்பை மேட்டின் ஒரு பகுதி நிலத்திற்குள் புதைந்ததால் அதன் தாக்கம் காரணமாக குடியிருப்பு பகுதியில் இருந்து நிலம் வெளியில் பாய்ந்து மண் சுனாமியொன்றை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

குப்பையின் ஆரம்பம்

மீதொட்டமுல்லை இன்று நாற்றமடிக்கும் அசிங்கமான குப்பை மேடுள்ள பிரதேசமாக இருந்தாலும் 30 வருடங்களுக்கு முன்னர் இது அழகிய வயல்வெளிகளுடன் கூடிய மனங்கவரும் கிராமமாகும். வயல்வெளிகளை நிரப்பியதால் அப்பிரதேசம் பின்னாளில் காடாக மாறியது. 1990 முதல் கொலன்னாவ நகர சபை இங்கு குப்பை கொட்ட ஆரம்பித்தது. அன்றும் மக்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டாலும் அது செவிடன் காதில் சங்காகவே இருந்தது.

கடந்த 30 வருடங்களாக கொழும்பு குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு மட்டங்களில் முன்னெடுப்புகள் இடம்பெற்றாலும் எதுவுமே சாத்தியமாகவில்லை. இந்த நிலையில் தான் புளுமெண்டல் பகுதியிலும் குப்பை மேடொன்று உருவானது. இங்கு குப்பை கொட்ட 2008 ல் நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் கொழும்பு குப்பைகளையும் மீதொட்ட முல்லைக்கு அனுப்பும் நிலை உருவானது. இரு வருடங்களுக்கு மாத்திரமே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதோடு இரண்டு ஏக்கர் பகுதியில் மட்டும் தான் குப்பை கொட்ட இடமளிக்கப்பட்டது. அதற்கிடையில் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் திட்டங்களை முன்னெடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்தக் காலங்களிலும் கூட வேறு நாடுகளின் உதவிகளுடன் பல்வேறு திட்டங்கள் பற்றி பேசப்பட்டன. ஆனால் இன்று வரை எந்த திட்டமும் செயற்படுத்தப்படாததன் விளைவாக 40 உயிர்கள் குப்பைக்கு பலியாகியுள்ளன.

இரண்டு ஏக்கர் காணியில் வளர்ந்த குப்பை மேடு இன்று 23 ஏக்கர் 300 அடி உயரத்திற்கு பிரமண்டமாக வளர்ந்து விட்டது.

சமூக மட்டத்தில் எழுந்த எதிர்ப்புகள், குப்பை தொடர்பில் சட்டபூர்வ அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற சர்ச்சை மற்றும் குப்பை மீள்சுழற்சிக்கு யார் நிதி வழங்குவது போன்ற பிரதான பிரச்சினைகள் இத்தனை காலமும் மீதொட்ட மட்டுமன்றி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் குப்பை பிரச்சினைகள் வளர எதுவானது.

குப்பை பிரச்சினை இங்கு மட்டுமா?

வருடாந்தம் உலகம் முழுவதும் 7 முதல் 10 பில்லியன் தொன் நகர்ப்புற கழிவுகள் சேர்வதாக கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி, நகர மயமாக்கல் அதிகரித்து வரும் நுகர்வு என்பன காரணமாக ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 2030 ம் ஆண்டாகும் போது கழிவுகள் இரட்டிப்பாகும் என ஐ.நா. சூழல் திட்டம் எச்சரித்துள்ளது.

இதனால் பல நாடுகள் குப்பை பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளன. அநேக நாடுகள் அவற்றை மீள்சுழற்சி செய்யவும் மீள பயன்படுத்தவும் திட்டங்கள் வகுத்து அவற்றை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் வெற்றி கண்டு கழிவை ஆசிர்வாதமாக்கிக் கொண்ட நாடுகளும் இல்லாமலில்லை.

குப்பை நாடு?

இலங்கையில் நாளாந்தம் 7 ஆயிரம் டொன் மெற்றிக் தொன் குப்பை சேர்கிறது பண்டிகை காலங்களில் இது இரட்டிப்பாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேல்மாகாணத்தில் தான் அதிகளவு கழிவு சேர்கிறது. நாளாந்தம் இங்கு 1400 மெற்றிக் தொன் கழிவு குவிகிறது.

அதிலும் கொழும்பு மாநகர பகுதியில் மாத்திரம் 700 மெ.தொ குப்பை சேர்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பங்கு மீதொட்டமுல்லையில் தான் கொட்டப்படுகிறது. கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்படாமல் மீதொட்டமுல்லையில் கொட்டப்படும் நிலையில் மீதொட்டமுல்லை மேடு பெரும் மலையக வளர்ந்து எரிமலைபோன்று எந்த நிமிடமும் வெடிக்கும் நிலைக்கு உருவாகியது.

கொழும்பில் வாழும் 6 1/2 இலட்சம் மக்களினதும் தினமும் வந்து செல்லும் 11 இலட்சம் மக்களினதும் குப்பைகள் மீதொட்ட முல்லை மேடு வரை காரணமாக அமைந்தது.

மக்களின் எதிர்ப்பு

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மீதொட்டமுல்லையில் குப்பை கொட்டுவதற்கு எதிரான மக்கள் போராட்டம் நீடித்து வந்தது. சில சமயங்களின் உக்கிரமான எதிர்ப்புகள் காரணமாக குப்பை லொறிகள் திருப்பி அனுப்பட்ட சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. சில போராட்டங்கள் கலகமாக வெடித்தோடு போராட்டக்காரர்களுக்கு சிறை செல்லவும் நேரிட்டது.

 இங்கிருந்த வீடுகளில் மக்களை விட ஈக்களும் கொசுவும், புழு பூச்சிகளும்தான் நிறைந்திருந்தன. ஒரு பக்கம் துர்நாற்றம் மறுபக்கம் கழிவு நீர், தொற்று நோய்கள் என அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு மத்தியில்தான் நாட்களை ஓட்டினார்கள். மக்கள் போராட்டங்கள் பாதுகாப்புத் தரப்பின் அதிகாரத்துடன் அடக்கப்பட்டனவே தவிர தீர்வு ஒன்று மட்டுமே கடைசி வரை கனவாக மாறியிருந்தது.

காட்டுகள் எழுந்துள்ளன வெளியேறாத மக்கள்?

குப்பை மேடு எந்த நிமிடமும் சரியலாம் என கடந்த சில மாதமாகவே எச்சரிக்கப்பட்டது. அங்கிருந்த வீடுகள் அடையாளமிடப்பட்டு மக்களை வெளியேறவும் பணிக்கப்பட்டது.

கடந்த மாதம் 63 வீடுகளை அகற்ற மாநகர சபை திட்டமிட்டிருந்தது. ஆனால் 8 குடும்பம் மட்டுமே நஷ்டஈட்டை பெற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இன்று உயிருடன் உள்ளார்கள். ஏனையவர்கள் சில அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டே தொடர்ந்து வீடுகளில் இருந்ததாக தெரிய வருகிறது. அரசியல்வாதிகளின் தவறுக்காக பொதுமக்களின் இந்த முடிவை சதி என்று கூறிவிடமுடியாது. சில நாடுகள் பணம் எதுவும் அறவிடாமல் குப்பையை மீள சுழற்சி செய்ய முன்வந்தன. ஆட்சியாளர்களும் பல்வேறு மாற்றுத்திட்டங்கள் முன்வைத்திருந்தார்கள். கடைசியாக புத்தளத்தில் உள்ள சுண்ணக்கல் குழிகளில் ரயில் மூலம் குப்பைகளை எடுத்துச் சென்று கொட்டவும் திட்டமிடப்பட்டது.

பல உயிர்கள் காவுகொல்லப்பட்ட பின்னர் இன்று அரசியல்வாதிகள் பலரும் நாம் அதை செய்ய இருந்தோம் இதை செய்ய இருந்தோம் என மார்தட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அது போதாதென்று மாறி மாறி மற்றைய தரப்பினர் மீது விரல் நீட்டி தம்மை நிரபராதியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பாதிக்கப்பட்ட மக்களை வேதனைப்படுத்தியுள்ளதே தவிர ஆசுவாசப்படுத்தவில்லை.

ஆயிரம் திட்டங்களை பட்டியலிடும் எவருக்கும் அதனை முழுமையாக செயற்படுத்த முடியாமல் போனதால் அப்பாவி மக்கள் யிர்களை இன்று காவு கொள்ளப்பட்டுள்ளன. இனியாவது அரசியல்வாதிகள் கண்திறந்து நேர்மையாக நடப்பார்கள் என்ற நம்பிக்கை மீதொட்ட மக்களுக்கு இன்னும் ஏற்படவில்லை மீதொட்டமுல்லை மேட்டின் சில பிரதேசங்கள் அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் முழு மீதொட்டமுல்லை பிரதேசமும் அரசியல்வாதிகளுக்கு தடுக்கப்பட்ட பிதேசமாக மாறியுள்ளது அந்தளவிற்கு மக்கள் அவர்கள் மீது ஆத்திரத்துடனும் வெறுப்புடனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் காரணம்?

இந்த மனிதப் பேரவலத்திற்கு அரசியல் வாதிகள் தான் முழுப் பொறுப்பு என்பது அவர்களின் நிலைப்பாடு. இத்தகைய காலமும் ஏமாற்றப்பட்டதால் அவர்களின் நிலைமையில் இது நியாயமாகதே. ஆனால் மீதொட்டமுல்லை அவலத்திற்கு முழுநாட்டு மக்களும் தான் பொறுப்பு கூற வேண்டும்.

இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம் சரிந்து விழுந்த குப்பை மேட்டில் கொழும்புக்கு வந்து சென்ற நாட்டின் ஏனைய பிரதேச மக்களின் ஒரு துளி குப்பையாவது கலந்திருக்கவே செய்யும் இத்தனை உயரத்திற்கு வளர்ந்த குப்பை மேடு நாட்டின் அநேகமான மக்களின் கழிவுகளினால் தான் உருவாகியுள்ளது. என்பதை மறுக்க முடியாது.

மாற்றம் வேண்டும்

இறந்த 40 உயிர்களுக்கும் சேதங்களுக்கும் நாமும் தான் காரணம் என எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள். அரசியல்வாதிகள் மீது விரல் நீட்டி கோபத்தை தீர்த்துக் கொள்ளும் எமக்கு எமது தவறு இன்னும் ஏன் புரியாமலிருக்கிறது. குப்பை லொறி வரும் வரை காத்திருக்கும் பெண்மணிகள் ஒருநாளும் தமது வீட்டின் உண்டு பருகும் குப்பைகளே வெளியில் கொட்டப்படுகிறது என்பதை சிந்திப்பதில்லை. இது குறித்து வெட்கப்படுவதும் இல்லை.

மீதொட்டமுல்லை பிரச்சினை நாளை இன்னொரு நகரில் வராது என யாருக்கும் உறுதியாக கூற முடியாது. எனவே அரசாங்கம் இவற்றுக்கு எத்தகைய தீர்வு வழங்கினாலும் முதலில் நமது மனப்பாங்கில் மாற்றம் வருவது முக்கியமானது.குப்பைகளை வீடுகளிலே பசளையாக மாற்றும் உபகரணங்கள் கடந்த காலத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டன.அந்த திட்டங்கள் பாதியிலே கைவிடப்பட்டன.

பெரும் அவலம் நடக்கும் போது மட்டும் பேசும் மக்கள் அரசியல் வாதிகளை போன்றே பின்னர் அவற்றை மறந்து விடுகின்றனர்.

எமது குப்பை என்பது எமது வீட்டிலுள்ள குறைபாட்டையை சித்தரிக்கிறது. அதனை வெளியில் விடாமல் நாமே மூடிவிடுவது நமக்குமட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது. மீதொட்டமுல்லை அவலம் அனைவருக்கும் நல்ல பாடமாக அமையட்டும்.


Add new comment

Or log in with...