பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 46 பயணிகள் பலி | தினகரன்

பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 46 பயணிகள் பலி

 இந்தியாவின் ஷிம்லா மாவட்டத்தின் இமாச்சல் பகுதி பள்ளத்தாக்கில் தனியார் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. இதனை ஷிம்லா மாவட்ட ஆணையாளர் ரோஹன் சான்ட் தாகூர் உறுதிசெய்துள்ளார்.

ஷிம்லாவின் டியுனி என்ற கிராமத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் விகாஸ் நகர் நோக்கி பஸ் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக ஏ.எப்.பி. செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.  மலைப் பகுதியொன்றில் ஷிம்லாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ், Tons ஆற்றின் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இடம் பெற்றபோது பஸ்ஸில் 56 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்தோர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பள்ளத்தில் கிடக்கும் பஸ்ஸின் அருகில் செல்வதற்கோ மீட்பு பணியை விரைவாக ஆரம்பிக்கவோ முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வட இந்தியாவில் கடந்த பெப்ரவரி மாதம் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்திருந்ததுடன், 50திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு இலட்ச ரூபா நஷ்ட ஈட்டுத்தொகையும் படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும் வழங்குவதாக உத்தரகாண்ட மாநில முதலமைச்சர் திருவேந்திர சிங் ராவட் அறிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...