Home » வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

- அபாயம் உள்ள ஏனைய மாவட்டங்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
October 5, 2023 2:34 pm 0 comment

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை குறைவின்றி வழங்குமாறும் அதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினர்களுக்கு அறிவித்துள்ளார்.

வெள்ளம், பலத்த காற்று, மண் மேடுகள் இடிந்து விழுதல், கடும் மழை, பாறைகள் சரிதல் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரை 2350 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 9448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 399 ஆகவும், ஏனைய சொத்து சேதங்கள் 37 ஆகவும் பதிவாகியுள்ளன.

மாலிம்பட, அகுரெஸ்ஸ, கம்புருபிட்டிய, திஹகொட ஆகிய பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள உணவு தயார்படுத்தல் நிலையங்களில் அவர்களுக்காக சமைத்த உணவு வழங்கப்படுகிறது. 6967 குடும்பங்களைச் சேந்த 25,553 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதோடு அவர்களுக்கு இராணுவம் சமைத்த உணவை வழங்கி வருகிறது.

வெள்ளத்தினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள மாலிம்பட பிரதேச செயலக மக்களுக்காக விசேட நிவாரணத் திட்டமொன்று இராணுவத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

அவசரகால நிலைமைகளில் மக்களை மீட்பதற்காக மோட்டார் படகுகள் மற்றும் இராணுவ சிறப்பு வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான தகவல்களை மேஜர் ஜெனரல் ஜனக ரணசிங்க (0766907042) கேர்ணல் ரொஷான் கண்ணங்கர (0766907146) ஆகியோருக்கு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாத்தறை மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலான அவசர சந்திப்பொன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தலைமையில் மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நேற்று (04) நடைபெற்றது.

தென் மாகாண ஆளுநர் விலி கமகே, பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடிதுவக்கு, மாவட்டச் செலயலாளர் வை.விமலசிறி ஆகியோருடன் ஆளுநரின் செயலாளர், மாவட்ட மேலதிகச் செயலாளர்கள், மாத்தறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர் மற்றும் அரச நிறுவனங்களை பிரதிநித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதோடு, வெள்ளநீர் வடிந்தோடிய பின்னர் பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்களை நாளாந்தம் நடத்தவும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினருக்கு Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நாளாந்தம் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT