நம்பிக்கை தரும் நகர்வு | தினகரன்

நம்பிக்கை தரும் நகர்வு

உள்நாட்டில் சுமார் முப்பது வருட காலம் நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இற்றைக்கு ஏழு வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளன. என்றாலும் இந்த யுத்தம் தோற்றுவித்த பாதிப்புக்கள், தாக்கங்கள் மற்றும் பின்விளைவுகள் என்பன இற்றைவரையும் முழுமையாகத் தீர்த்து வைக்கப்படாதுள்ளன. இதற்கான பொறுப்பில் பெரும்பகுதியை ஏற்க வேண்டியவர்கள் கடந்த ஆட்சியாளர்களேயாவர்.

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் கடந்த ஆட்சியாளர்கள் காட்டிய தீவிர ஆர்வம், இந்த யுத்தம் தோற்றுவித்த பாதிப்புக்கள் மற்றும் பிளன்விளைவுகளைத் தீர்த்து வைப்பதிலோ நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலோ காட்டவில்லை. அவ்வாறு கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது படையினர் வசமுள்ள தனியார் காணிகளாகும்.

யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த காணிகளில் பாதுகாப்பு படையினர் நிலை கொண்டனர்.ஆனால் இவ் யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்தும் கூட அக்காணிகளை விடுவிப்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைளை கடந்த ஆட்'சியாளர்கள் மேற்கொள்ளவில்லை. அத்தோடு அவ்வாட்சியாளர்கள் யுத்தம் முடிவுற்ற பின்னர் முன்னெடுத்த நகர்வுகள் அவ்வாட்சி மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்தது.

இவ்வாறான நிலையில் இந்நாட்டைச் சேர்ந்த சகல மக்களதும் ஆணையோடு 2015.01.08 அன்று- நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. இவ்வரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் படையினர் வசமிருந்த தனியாரின் காணிக்ளைக் கட்டம் கட்டமாக விடுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிக்கள் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. படையினர் வசமுள்ள தனியாரின் காணிகளை உரிமையாளரிடம் வழங்கும் நடவடிக்கை மந்தகதியில் இடம்பெறுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பின்புலத்தில் தான் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபுலவு, வட்டுவாகல் பிரதேசங்களிலும். மன்னார் மாவட்டதின் முள்ளிகுளம் பிரதேசத்திலும், கிளிநொச்சி மாவட்டதின் கிளிநொச்சி நகரிலும் நில மீட்பு போராட்டங்கள் காணி உரிமையாளர்களால் முன்னெடுப்பட்டு வருகின்றன. குறிப்பாக கேப்பாப்புலவு போராட்டத்தின் விளைவாக ஒரு பகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ளது-. என்றாலும் விடுவிக்க வேண்டிய காணி இன்னுமுள்ளன. அதானால் அங்கு 45 நாட்களுக்கும் மேல் மக்கள்போராட்டம் இடம் பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில், படையினர் வசமுள்ள தனியாரின் காணிகளை விடுவித்தல் மற்றும் மக்கள் முன்னெடுத்துவரும் நில மீட்பு போராட்டம் என்பன தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனும், கூட்டமைப்பு பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனும் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அப்பேச்சுவார்த்தையின் தொடராக முப்படைகளின் தளபதிகளையும் கடந்த 17 ஆம் திகதி இவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் வட மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் படை முகாம் அமைந்திருக்கும் பிரதேசத்திற்கு சென்று படையினர் மற்றும் காணி உரிமையாளர்களுடன் இணைந்து பேசி அதனடிப்படையில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கவிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்தி-ரன் தெரிவித்திருக்கின்றார்.

இதனடிப்படையில் நேற்று கேப்பாபுலவில் காணி உரிமையாளர்கள் மற்றும் படை முகாம் அதிகாரிகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதோடு, இன்று யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மன்னர், வுவுனியா, மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களிலும் இவ்வாறான சந்திப்பை நடாத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

படையினர் வசமுள்ள தனியார் காணிகள் மற்றும் நில மீட்பு போராட்டம் என்பவற்றுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருக்கும் இந்த நகர்வும் சஎம். பி சுமந்திரனின் அறிவிப்பும் நிர்க்கதிக்கு உள்ாகியுள்ள மக்களுக்கு நிச்சயம் ஆறுதலாகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

இதன் பயனாக கேப்பாபுலவு, வட்டுவாகல், முள்ளிக்குளம். கிளிநொர்ச்சி நில மீட்பு போராட்டங்ளுக்கு நியாயமானது-ம் நம்பிக்கை அளிக்கக் கூடியதுமான தீர்வு விரைவில் கிடைக்கப் பெறும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அது நியாயமான எதிர்ப்பார்ப்பே.

உள்நாட்டு யுத்தம் காரணமாக மூன்று தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்தோடு பலவித அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்த இம்மக்கள், யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் கடந்தும் கூட தம் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதிருப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதனால் தான் மக்கள் பொறுமை இழந்து சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்திருகின்றனர். இப்போரட்டதிற்கு நியாயபூர்வமான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்நகர்வை முன்னெடுத்திருக்கின்றது.

ஆகவே வடக்கு கிழக்கில் படையினர் தம் வசம் வைத்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்களது கோரிக்கையை மனிதாபிமானதுடன் நோக்கி நியாயபூர்வமாக தீர்த்து வைக்க முன் வேண்டும். அதுவே மனித நேயம் கெதாண்ட அனைத்த தரப்பினரதும் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


Add new comment

Or log in with...