வவுனியாவில் கிணற்றினுள் வீழ்ந்த நான்கு யானைகள் மீட்பு | தினகரன்


வவுனியாவில் கிணற்றினுள் வீழ்ந்த நான்கு யானைகள் மீட்பு

 
வவுனியா, ஒமந்தை, கொம்புவைத்தகுளத்தில் கிணற்றில் விழுந்த இரண்டு பெரிய யானைகளும், இரண்டு குட்டி யானைகளும் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டன.
 
ஒமந்தை, கொம்புவைத்த குளத்தில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு இரண்டு பெரிய யானைகளும், இரண்டு குட்டி யானைகளும் கிணற்றுக்குள் உள்ளதை அவதானித்ததுடன், வன விலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார்கள்.
 
 
ஆனால் மாலை 4.00 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் சழூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.
 
 
இதன் போது மீட்டெடுக்கப்பட்ட குட்டி யானை ஒன்று அவ்விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தாக்க முற்பட்டது. இதன் போது இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
 
 
எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்பு பணியினை தொடர முடியாமையினால் மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் இன்று (17) காலை ஆரம்பிக்கப்பட்டது. 
 
 
இதன்போது இரண்டு பெரிய யானைகளும் மீட்கப்பட்டு காட்டிற்குள் அனுப்பப்பட்டது.
 
 
 
 
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
 
 

Add new comment

Or log in with...