விதவைகளிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை

RSM
 
தந்தையை இழந்த மாணவி ஒருவரின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடாத்தப்பட்டு வருகின்றது.
 
யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின், இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை மேலதிக நடவடிக்கைகாக மாகாண கல்விப் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என, கிளிநொச்சி பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.
 
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
 

கிளிநொச்சியின்  மேற்கு பிரதேசத்தில், நகரிலிருந்து பத்து கிலோ மீற்றருக்கு அப்பால்  உள்ள 01 ஏபி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த ஏப்ரல் முதலாம் தினதி (01), மது போதையில் நள்ளிரவு 11.30 மணியளவில், குறித்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முற்பட்ட போது குறித்த பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர்  வீட்டின் பின்புற வாயில் ஊடாக தப்பி வெளியேறி அருகில் உள்ள  வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர். 

 
வறிய நிலையில் உள்ள குறித்த பெண்  வீட்டுத்திட்டம் மூலம் அமைக்கப்பட்ட வீட்டில் கதவுகள் பொருத்தப்பட்டிருந்த போதும் ஜன்னல்கள் முழுமையாக பொருத்தப்பட்டிருக்க வில்லை.
 
ஜன்னல் நிலைகள் வெறுமனே கயிற்றினால் கட்டப்பட்டே காணப்பட்டுள்ளன. இதனால் குறித்த ஆசிரியர் ஜன்னல் நிலைகளை கழற்றிவிட்டு அதன் வழியே வீட்டுக்குள் சென்றுள்ளார் என குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை அன்றைய தினமே அதே பிரதேசத்தில் உள்ள கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் மற்றுமொரு பெண்ணின் வீட்டுக்குள்ளும் நுழையும் நோக்கில், மோட்டார்சைக்கிளில் சென்று வீட்டு வாசலுக்குள் முன்னாள் நின்று நீண்ட நேரமாக ஒலி எழுப்பியவாறு நின்றதாகவ தெரிவித்து, குறித்த பெண் பாடசாலை அதிபருக்கு எழுத்த மூலம் அறிவித்துள்ளார்.
 
எனவே மேற்படி இரு பெண்களும் ஏப்ரல் 05ஆம் திகதி எழுத்து மூலம் பாடசாலை  அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
 

இது தொடர்பில் பாடசாலை அதிபர் மதுரநாயகம் அவர்கிளிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, 

 
குறித்த விடயம் தொடர்பிலான எழுத்து மூலமான முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளது எனவும், அது தொடர்பிலான உரிய நடவடிக்கைக்காக வலயக் கல்வி அலுவலகத்திற்கு அம்முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதேவேளை பதில் வலயக் கல்விப்  பணிப்பாளர் கிருஸ்ணகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதனால் அடுத்த வாரமளவில் விசாரணை குழு ஒன்றை அமைத்தது விசாரணை செய்து அதன் அறிக்கையை உரிய நடவடிக்கையின் பொருட்டு மாகாண கல்விப் பணிமனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
 
இதேவேளை குறித்த ஆசிரியர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய சகா என்பதனால், பிரச்சினையை மூடிமறைக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரின் மிக நெருக்கமான ஒருவர் மூலம் குறித்த பெண்களுடன் சமரச முயற்சியில் ஈடுப்பட்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன்)
 
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
5 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...