குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமி; மீட்க விடாமல் தாக்கிய குரங்குகள்

RSM

 

குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை பொலீசார் மீட்டுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிபிசி ஹிந்தி பிரிவிடம் பேசிய ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, அந்த சிறுமியை மீட்கச்சென்றபோது, ஒரு குரங்குக் கூட்டத்தோடு விளையாடிக்கொண்டிருந்ததாகவும், குரங்குகளை போலவே சைகைகளை காட்டி விளையாடிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

மருத்துவமனையில்

(மருத்துவமனையில்.. படத்தின் காப்புரிமை AZEEM MIRZA)

அந்த சிறுமியை இந்திய - நேபாள எல்லையில் உள்ள கத்ரீனாத் வனவிலங்கு சரணாலய பகுதியில் கிராம மக்கள் பார்த்தனர்.

சுரேஷ் யாதவ் என்ற காவல்துறை அதிகாரி அந்த சிறுமியை மீட்கச்சென்றபோது குரங்கு கூட்டம் காவல் துறையினரைத் தாக்கியது என்று தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது, அந்த சிறுமி நீளமான தலைமுடி, நகங்கள் மற்றும் உடலில் காயங்களுடன் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

முதலில் அந்த சிறுமி பேச முடியாமல், கத்தவே செய்தாள் என்றும் இரண்டு கை மற்றும் கால்களில் நடந்தாள் என்றும் கூறினார்.

தற்போது சிறுமியின் நிலை மிகவும் சிறப்பாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் நீண்ட கால நலனைக் கவனத்தில் கொண்டு அச் சிறுமி அரசின் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற மருத்துவர்கள் சிறுமிக்கு மெதுவாக தற்போதைய உலகத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

(மருத்துவமனையில் சிகிச்கையின் போது.. படத்தின் காப்புரிமை AZEEM MIRZA)

இந்த சிறுமி தற்போதுள்ள மருத்துவமனையில் இருந்து, சிறப்பான மருத்துவ வசதியைப் பெற லக்னெள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று மருத்துவமனையின் தலைமை அதிகாரி டி கே சிங்க் பிபிசி ஹிந்தி பிரிவிடம் தெரிவித்தார்

மருத்துவமனைக்கு வந்து நேரில் பார்த்த உள்ளூர் மாவட்ட நீதிபதி அஜய்தீப் சிங், அச் சிறுமிக்கு வனதுர்கா என்று பெயரிட்டார்.

 

இந்தியாவில் பலரும் இந்த சிறுமியை ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்லிங்க் எழுதிய ஜங்கிள் புக் என்ற கதையில் ஓநாய்களால் வளர்க்கப்படும் ஒரு குழந்தையோடு ஒப்பிடுகின்றனர். ஆனால் இந்தக் சிறுமி எத்தனை காலம் வனப்பகுதியில் வளர்ந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.

 

- BBC Tamil
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...