தமிழகத்தில் அரங்கேறுவது பா.ஜ.கவின் அதிரடி ஆட்டம் | தினகரன்

தமிழகத்தில் அரங்கேறுவது பா.ஜ.கவின் அதிரடி ஆட்டம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை 12-ம் திகதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது.

இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பண விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து வருமானவரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனை சுமார் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் 'விஜய பாஸ்கரின் வீடுகள், அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன' என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் என்று சொல்லப்படுபவை வெளியாகின. அந்த ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அவர்கள் மூலமாக ஒரு வாக்காளருக்கு 4,000 ரூபாய் வரை வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியைப் பாகம் பாகமாகப் பிரித்து, 85 சதவீத வாக்களர்களுக்குப் பணம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி 89 கோடி ரூபாய் வரை செலவிட கணக்கிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

சென்னை ஆர்.கே. நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து அன்பழகன் தன் முகநூலில் இவ்வாறாக ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார்.

“ஒரு தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லை என்றால் கலைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தைத்தான்” என்று. அவரது கருத்து கொஞ்சம் அதட்டலாக, கடுமையானதாக இருந்தாலும்,இன்னும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் பலரின் எண்ண ஓட்டம் இதுதான்.

உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு, காட்டில் வசிக்கும் ஒரே ஒரு வாக்காளரையும் வாக்களிக்க வைக்க பாடுபடும் தேர்தல் ஆணையம் என பெருமை பிதற்றிக் கொள்ளும் அதேவேளையில், அந்த அமைப்பால் ஒரு சிறிய தொகுதியில் பண விநியோகத்தைத் தடுத்து, இடைத்தேர்தலை நடத்த முடியவில்லை என்பது நிச்சயம் தேசிய அவமானம் என்றே கூற வேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை என்ன காரணத்தைச் சொல்லி தேர்தல் ஆணையம் ரத்து செய்ததோ, அதே காரணத்தைத்தான் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளிலும் கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின் போது கூறி வாக்குப்பதிவை ரத்து செய்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும்கட்சி சார்பில் ஒரு வாக்குக்கு 4 ஆயிரம் வீதம் 85 சதவீத வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது எனச் செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை திடீர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியது.

அவரது வீட்டில் சிக்கியதாக சில ஆவணங்கள் வெளியாகின. இதையடுத்து தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை சார்பில் இரகசிய அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடமும் அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் 12-ம் திகதி நடக்க இருந்த இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, 29 பக்க அறிக்கையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

'சென்னையில் 21 இடங்களிலும் சென்னையைத் தாண்டி 11 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகள் இந்தச் சோதனையில் முக்கியமான இடங்கள் ஆகும்.

12- ம் திகதி நடைபெற உள்ள தேர்தலுக்காக, விஜயபாஸ்கர் மூலம் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடக்கிறது என்று வருமான வரித்துறைக்கு தகவல் வந்துகொண்டிருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கரின் கணக்காளர் சீனிவாசனிடமிருந்து சில தாள்கள் பறிமுதல்செய்யப்பட்டன. அதில் 89 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தகவல் இருந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன் சில வாகனங்கள் மூலம் பண விநியோகம் செய்துள்ளார்.

விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 5 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் விஜயபாஸ்கருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் பண விநியோகம் எப்படி எல்லாம் நடத்த வேண்டும். வார்ட் , பூத் வாரியான புள்ளி விவரங்கள், 89 கோடி ரூபாயை யார் யாரெல்லாம் செலவு செய்ய வேண்டும் என்ற விவரம், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்தது.

அ.தி.மு.க, தி.மு.க என்று வாக்காளர்களைப் பிரித்து, பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. மேலும் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் கொடுப்பது தொடர்பான நிறைய ஆவணங்களும் வருமான வரி சோதனையில் கிடைத்தன.

தேர்தல் அதிகாரிகளால் ஆர்.கே.நகரில் ரூ.31.91 இலட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக, 8 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் தேர்தல் பார்வையாளர், "பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் விநியோகம், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் எல்லாம் தேர்தல் நடத்தைகளையே சவால் விடும் வகையில் இருந்தது'' என்று கூறியுள்ளார்.

இரண்டாவது தேர்தல் பார்வையாளர் கொடுத்துள்ள அறிக்கையில், ''ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள், மூத்த தலைவர்களே முன்னின்று பணம் விநியோகம் செய்ததாக, கட்டுப்பாட்டு அறைக்கு நிறைய புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள் வருமான வரித்துறையோடு பகிர்ந்து கொள்ளப்பட்டன" என்று கூறியுள்ளார்.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கவனித்தது. மேலும் இது தொடர்பாக ஏற்கெனவே வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஆய்வு செய்தோம். இவை எல்லாவற்றின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் அட்டவணை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் நியாயமாக நடத்தும் வகையில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில், அ.தி.மு.க அம்மா கட்சி டி.டி.வி. தினகரன் அடையாறில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது "ஆர் கே நகர் இடைத்தேர்தலை,தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு.

இது ஒரு ஜனநாயகப் படுகொலை. 'நான் வெற்றி பெறுவேன்' என்று எனது வெற்றியைத் தடுக்க முயற்சிகள் நடந்தன. அதன்படிதான் பொலிஸ் கமிஷனர் மாற்றப்பட்டார். பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பல தவறான தகவல்கள், சமூகவலைதளங்கள்மூலம் பரப்பப்பட்டன.விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அவசியமில்லாத ஒன்று.

தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? இது ஒரு யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு. அதிகாரம் இருக்கும் காரணத்தால், அதைப் பயன்படுத்தித் தேர்தலை ரத்து செய்துள்ளனர்.

பண விநியோகம் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. இது தொடர்பான வழக்குகள் ஏதும் இல்லை. தேர்தல் நடந்திருந்தால், நான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். எனது வெற்றி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஆட்சியைக் கலைக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை அழிக்க சதி நடக்கிறது. ஆனால் ஆதாரம் இல்லாமல் பா.ஜ.க-வை குற்றம் சாட்ட முடியாது. இது யாருடைய சதி என்று விரைவில் தெரியும்.

எங்களுக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை. இந்தச் சவால்களை எதிர்கொண்டு கட்சியைக் காப்போம். அ.தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது. எந்தக் கொம்பனாலும் எங்களது ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. நான்கு ஆண்டுகள் எங்களது ஆட்சி தொடரும். 2021 தேர்தலிலும் வெற்றி பெறுவோம். தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் 'இரட்டை இலை' சின்னத்தைக் கோருவோம்.

தொலைக்காட்சிகள் இல்லை என்றால் தமிழிசை எல்லாம் வெளியே தெரியவே மாட்டார். ஆதாரங்களுடன் வருமானவரித்துறை சோதனை நடந்ததாக தமிழிசை கூறுகிறார். அவர் என்ன வருமானவரித்துறை அதிகாரியா? மத்தியில் ஆளும் கட்சி ஆர்.கே.நகரில் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். தேர்தல் நடத்திருந்தால் பா.ஜ.க 5,000 வாக்குகள் கூட பெற்றிருக்க முடியாது. தற்போது, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்" என்றார் தினகரன்.

சுற்றி வளைக்கப்பட்ட விஜயபாஸ்கர்:

நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில் வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘கடந்த 100 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வளைக்கப்பட்டிருக்கிறார். ஜூன் மாதம் வரையில் அமைச்சர்களுக்கு நிம்மதியான உறக்கம் வரப் போவதில்லை’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

‘நான் நிரபராதி. என் மீது எந்தக் குற்றமும் இல்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்கள் முன்பு சத்தம் போட்டுப் பேசினாலும், வருமான வரித்துறையின் புலானய்வுப் பிரிவு அதிகாரிகளின் விசாரணை வேறு கோணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் “பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக அரசின் மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, தங்கம் வாங்கி விற்கும் தரகர் பிரேம்குமார் உள்ளிட்டவர்களின் வீடு, அலுவலகங்களைக் குடைய ஆரம்பித்தது வருமான வரித்துறை.

 இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமுலாக்கத்துறையும் சி.பி.ஐ-யும் களத்தில் இறங்கின. அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அவரது மகன் ஆகியோரையும் அதிகாரிகள் விட்டுவைக்கவில்லை. ‘முதல்வர் ஜெயலலிதா இல்லாததால், ஆளும்கட்சியை வழிக்குக் கொண்டு வருவதற்காக, இதுபோன்ற சுற்றிவளைப்புகள் நடத்தப்படுவதாகவும் சிலர் பேசி வந்தனர்.

அமித்ஷாவின் அதிரடி ஆட்டம்:

உத்தரப் பிரதேச தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. ‘தமிழ்நாடு நமக்கு மிக முக்கியமான மாநிலம்’ என ஈஷா யோக மைய விழாவிலும் பா.ஜ.க நிர்வாகிகளிடம் கோடிட்டுக் காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நேரத்தில் ஆர்.கே.நகருக்குத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு மிக முக்கியக் காரணமே, டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுதான்.

‘தேர்தல் வெற்றிக்காக எவ்வளவு பணத்தையும் இறைப்பார்கள்’ என்பதை அறிந்து, கூடுதல் கவனத்தைத் திருப்பியது வருமான வரித்துறை. தொகுதி நி​ைலவரம் குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கும் அறிக்கைகளை அனுப்பினர். இவை அனைத்தும் அமித் ஷாவின் அறிவுரையின்படியே நடந்தன.

கார்டனுக்கு நெருக்கமான அமைச்சர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்துவதுதான் இந்த ஒபரேஷனின் மிக முக்கிய நோக்கம் ஆகும். “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், தொகுதி மக்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்கள், வாக்குறுதிகள் என அனைத்து விவகாரங்களையும் தனித்தனியாக சேகரித்தனர் அதிகாரிகள்.

பண விநியோகம் குறித்து, ஆளும்கட்சி தரப்பில் இருந்தே ஆதாரங்களை உருவாக்கியிருந்தனர். சுற்றிவளைப்புக்கான நேரத்தைக் கணித்துக் கொடுத்த வரையில்,தகவலாளிகளின் பங்கு மிக முக்கியமானது. கார்டனின் மிக முக்கிய பரிவர்த்தனைகளில் விஜயபாஸ்கரின் முக்கியத்துவம் குறித்து, ஏராளமான தகவல்கள் கிடைத்தன.

தினகரனுக்கும் ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்கும் இடையில் இடைவெளி உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக நடந்து வருகின்றன. தினகரனுக்கு ஆதரவான ஆளும்கட்சி புள்ளிகள் மீது வரும் ஜூன் மாதம் வரையில் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து அரங்கேற இருக்கின்றன. அனைத்தையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் மனநிலையில் அமித் ஷா இல்லை என்று கூறப்படுகின்றது.

இன்னும் இரண்டு மாதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘இந்தத் தேர்தலில், தமிழகத்தின் ஆதரவு தேவை’ என்ற மனநிலையில் மத்திய அரசு இல்லை. ‘வாக்குப் போடுங்கள் என இவர்களிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இது வலுவிழந்த அரசு’ என்பதை அறிந்து வைத்திருக்கிறார் அமித் ஷா. எனவேதான், தினகரனுக்கு விசுவாசம் காட்டுகின்றவர்களை, சுற்றிவளைப்பின் மூலம் அலற வைக்கிறார். ஆர்.கே.நகருக்கு மீண்டும் இடைத்தேர்தலை அறிவிக்காமல் பொதுத் தேர்தலைக் கொண்டு வரும் முடிவில் இருக்கிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் கோலோச்சிய அமைச்சர்கள் ஒவ்வொருவரும், விவரிக்க முடியாத அளவுக்கு சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார்கள்.

இதைக் காப்பாற்றுவது குறித்துத்தான் அவர்கள் கவலைப்படுகிறார்களே தவிர, ஆட்சி அதிகாரம், இரட்டை இலையைக் காப்பாற்றுவது குறித்த சிந்தனையே அவர்களுக்கு இல்லை.

‘தினகரனிடம் நெருங்கி இருக்காமல் தள்ளியே இருப்போம். நீங்களும் அமைதியாக இருங்கள்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தூபம் போடும் வேலைகளையும் தொடங்கியிருக்கிறார்கள் அ.தி.மு.க அம்மா அணியினர்.

'வருமான வரித்துறையின் பார்வை யாரை நோக்கி நீளும்?’ என்ற அச்சம் அமைச்சர்கள் மத்தியில் வலம் வந்தாலும், ஒபரேஷன் தமிழ்நாட்டுக்கான அடுத்த கட்ட நடவடிக்ைககளில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க தலைமை.

இதுஒருபுறமிருக்க ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தங்கள் அணியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ரூ.89 கோடி வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் கையெழுத்திட்டதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. .

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடைபெற்ற விசாரணையில் பணம் வினியோகம் செய்ததை ஒப்புக் கொண்டார். அங்கு வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ. 89 கோடி மட்டுமல்லாமல் பல்வேறு முறைகேடுகளில் விஜயபாஸ்கர் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

பண விநியோகத்துக்கான முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பண விநியோகத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள் குறித்த விவரங்கள், சரத்குமார் உள்ளிட்ட உதிரி கட்சிகளுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்டவை குறித்து சரமாரி கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி வருகின்றனர். இதனால் மேலும் சில அமைச்சர்கள் சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Add new comment

Or log in with...