இறக்காமம் உணவு நஞ்சான சம்பவம்; கைதான இருவர் விளக்கமறியலில் | தினகரன்

இறக்காமம் உணவு நஞ்சான சம்பவம்; கைதான இருவர் விளக்கமறியலில்

 
இறக்காமத்தின், வாங்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளி ஒன்றில் பரிமாறப்பட்ட  உணவு நஞ்சாகி மூன்று பேர் பலியானமை தொடர்பில் நேற்று முன்தினம் (07) கைதான இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
 
கடந்த புதன்கிழமை (05) தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்காமம், வாங்காமத்தின் 10 ஆம் கொலணியிலுள்ள பள்ளி ஒன்றில் பரிமாறப்பட்ட அன்னதான உணவை (கந்தூரி) உட்கொண்ட மூவர் பலியானதோடு, சுமார் 900 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, குறித்த பள்ளிவாசலில் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்ட இரு பிரதான சமையல்காரர்களை பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்.
 
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் நேற்று (08) அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, குறித்த இருவரையும் ரூபா 2 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில், பிணையாளர்களின் வசிப்பிடம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
ஆயினும், பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமையின் காரணமாக குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
குறித்த விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே 03 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, தமண பொலிசார் இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Add new comment

Or log in with...