Friday, March 29, 2024
Home » சிகரட் மோதலால் ரயில் ​சேவைகள் சீர்குலைவு

சிகரட் மோதலால் ரயில் ​சேவைகள் சீர்குலைவு

by gayan
October 5, 2023 6:30 am 0 comment

ரயில்வே ஊழியர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று (04) நண்பகலில் இருந்து ரயில் போக்குவரத்துகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த வேளையில் ரயில்வே ஊழியர்கள் குழப்பம் விளைவித்தது சீர்குலைக்கும் செயலென ரயில் பொது முகாமையாளர் டபிள்யூ ஏ. பி. எஸ். ஈ பி. குணசிங்க நேற்று(04) தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை ரயில்வே தளத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் திடீர் வேலை நிறுத்தத்தால் மக்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், ரயில் பயணிகளை சிரமத்துக்கு உட்படுத்தாமல் பணிக்கு வருமாறு அனைத்து ஊழியர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். நேற்று மாளிகாவத்தை ரயில் தளத்தில் துணை கட்டுப்பாட்டாளர் ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்த போது புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தருடன் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இங்கு துணை கட்டுப்பாட்டாளர் சுகயீன விடுமுறை பெற்று பணிக்கு வருவதை தவிர்த்து வருவதோடு குறிப்பிட்ட பாதுகாப்பு பிரிவு அதிகாரியின் பணியை இடைநிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் காரணமாக ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் 78 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தூர இடங்களுக்கான சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாகவும் ரயில் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளபோதும் இவ்வாறு நடவடிக்கையில் ஈடுபடுவது ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த பொது முகாமையாளர் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்டத்துக்கு அமைய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இவ்வேளை மோதலில் ஈடுபட்ட இரண்டு ரயில் ஊழியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT