31 நாட்களில் சசிகலா 28 பார்வையாளர்களை 14 முறை சந்தித்து பேசியதாக ​தெரிவிப்பு | தினகரன்

31 நாட்களில் சசிகலா 28 பார்வையாளர்களை 14 முறை சந்தித்து பேசியதாக ​தெரிவிப்பு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூா் சிறப்பு நீதிமன்றம் விதித்த தலா 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ச‌சிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூாில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத் துறையிடம் சில விவரங்களை கோரியிருந்தார். இதற்கு சிறைத் துறை பதில் அளித்துள்ளது.

அதில், “கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி முதல் மார்ச் 18-ம் திகதி வரையிலான 31 நாட்களில் சசிகலா (கைதி எண் 9234) 28 பார்வையாளர்களை 14 முறை சந்தித்து பேசியுள்ளார். இதில் அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்களும் அடங்குவர்.

இதேபோல இளவரசி (கைதி எண் 9235) 4 முறையும் சுதாகரன் (கைதி எண் 9236) ஒரு முறையும் தங்களது உறவினர்கள், வழக்கறிஞரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

சசிகலாவை மக்களவை துணைத்தலைவர் தம்பி துரை, தமிழக அமைச்சர்கள், உறவினர்கள் டிடிவி தினகரன் (2 முறை), விவேக் (4 முறை), ராஜராஜன், கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் அசோகன், செந்தில், மூர்த்தி ராவ் ஆகியோரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரும் தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினருமான முகுந்த் சீனிவாசலு ரெட்டி கடந்த மார்ச் 1ஆம் திகதி சந்தித்து 20 நிமிடங்கள் பேசியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்வேன்

இதுகுறித்து டி.நரசிம்ம மூர்த்தி, கூறும்போது, “கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளி ஆட்களை சந்திக்கத் தண்டனை கைதிக்கு அனுமதி வழங்க‌ வேண்டும். இதன்படி சசிகலாவை 31 நாட்களில் 2 முறை மட்டுமே சந்திக்க அனுமதித்து இருக்க வேண்டும். அதிகப்பட்சமாக 6 பேர் மட்டுமே சசிகலாவை சந்தித்திருக்க வேண்டும்.

ஆனால் சிறை அதிகாரிகள், 28 பார்வையாளர்கள் சசிகலாவை சந்திக்க அனுமதித்துள்ளனர். இது விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். மேலும் தண்டனைக் கைதியை மக்கள் பிரதிநிதிகளான மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் கள், சட்டமேலவை உறுப்பினர் முகுந்த் சீனிவாசலு ரெட்டி உள்ளிட்டோர் சந்தித்ததும் தெரியவந்துள்ளது. இதுவும் சட்டப்படி குற்றமாகும்.

சட்டத்தை மீறிய சிறைத்துறை அதிகாரிகள் மீதும், சசிகலா மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சகம், சிறைத்துறை இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இன்னும் 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்றார்.

சட்ட விதிமீறல் இல்லை

இதுகுறித்து கர்நாடக மாநில சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கூறும்போது, “சிறை விதிகளை மீறி சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரி களிடம் விசாரிக்கிறேன்” என்றார்.

கர்நாடக மாநில அதிமுக (அம்மா) கட்சியின் மாநில செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான புகழேந்தி கூறும்போது, “த‌ன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும் ஆர்.கே.நகர் தேர்தல் வேலையைப் பாருங்கள் என்றும் சசிகலா உறுதியாக தெரிவித்துள்ளார். எனவே கட்சியினரும் நிர்வாகி களும் சட்டத்தை மீறி சசிகலாவை சந்திக்கவில்லை” என்றார். 


Add new comment

Or log in with...