சுகாதாரத்துறையினர் கவனத்துக்கு... | தினகரன்

சுகாதாரத்துறையினர் கவனத்துக்கு...

இறக்காமம், வாங்காமக் கிராமத்தில் பள்ளிவாசல் கந்தூரி நிகழ்வில் உணவு உட்கொண்டோரில் உணவு ஒவ்வாமை காரணமாக 500 க்கும் மேற்பட்டோர் கடும் சுகவீனமுற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் இதுவரை மரணமடைந்துள்ளதாக கவலை தரும் செய்தி கிட்டியுள்ளது.

மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமானதாகக் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி பள்ளிவாசலின் வருடாந்த கந்தூரி நிகழ்வில் இரண்டாயிரம் பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர். உணவு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாக சமைக்கப்பட்ட உணவே ஒவ்வாமையாக காணப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை நாம் சாதாரணமானதொரு விடயமாகப் பார்க்க முடியாது. இதுவரையில் நான்கு உயிர்கள் பலியாகியுள்ளனர். 500 க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இச் சம்பவத்தை முதலாவது சம்பவமாக நோக்கவும் முடியாது கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மரணமடைந்த சம்பவங்களும் காணப்படவே செய்கின்றன. சமைக்கப்படும் உணவு விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டப்படாமையால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் சமயத்தலங்கள் பொது வைபவங்களின் போது அன்னதானம் வழங்கும் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப் படாமலிருப்பதன் காரணமாக உணவு விஷமடைவதும், ஒவ்வாமையாவதும் நடக்கின்றன. இதனால் பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். நகர்ப்புறங்களிலும், கிராமப்புறத்திலும் கூட சாப்பாட்டுக் கடைகளில் உணவு சுகாதார முறைப்படி தயாரிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.

ஆலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் அவற்றின் உற்சவங்கள், கந்தூரிகளின் போது உணவு சமைக்கப்படும் போது சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதிக்கப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்ற போதும் உரிய அதிகாரிகள் அது குறித்து அலட்டிக்கொள்ளத் தவறுகின்றனர்.

அவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்த வாங்காமக் கிராமப் பள்ளிவாசல் கந்தூரியிலும் இடம்பெற்றுள்ளது. பெரியளவில் உணவு தயாரிக்கப்படுகின்ற போது சுகாதார முறை ஒழுங்காகப் பேணப்படுகின்றதா? என்ற விடயத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயற்பட வேண்டியது கட்டாயமானதாகும். அது இவ்வாறான வைபவங்களின் போது கையாளப்படுவதாக தெரியவில்லை.

எனினும் இங்கு முக்கியவிடயமொன்றை குறிப்பிட்டேயாக வேண்டும். பௌத்த மக்களின் வெசாக் மற்றும் பெரஹரா காலங்களின் போது அன்னதானம் தயாரிக்கப்படுகின்ற வேளையில் சுகாதார அதிகாரிகள் மிக விழிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இதன் பொருட்டு பல ஒழுங்குமுறைகளும் பேணப்பட்டு வருகின்றது. 24 மணி நேரமும் அதிகாரிகள் உணவு தயாரிப்பு விடயத்தில் கண்காணித்தே வருகின்றனர். இந்த நடைமுறை ஏனைய வைபவங்களில் காணப்படுவதில்லை. இது குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் இன்று உருவாகியுள்ளது.

முன்னொரு தடவை நாட்டிலுள்ள வைத்தியசாலையொன்றின் சமையலறை குறித்த சம்பவத்தை மீள நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றோம். அந்த வைத்தியசாலை சமையலறையிலிருந்து பாத்திரங்கள் உரிய முறையில் சுத்தம் செய்யப்படாமலிருந்ததால் அதில் புழுக்கள் காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்று சுகாதாரத் துறையினர் அனைத்து விடயங்களிலும கண்காணிப்பை துரிதப்படுத்த வேண்டும். அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

மற்றொரு விடயம் சுகாதார அதிகாரிகளின் அசமந்தப் போக்கையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஆலயங்கள், பள்ளிவாசல்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகள், நாட்டிலுள்ள ஹோட்டல்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தத் தவறிவருகின்றனர். சில ஹோட்டல்களின் சமையலறைப் பக்கமே போகாமல் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

பள்ளிவாசல்கள், ஆலயங்களில் நடக்கும் வைபவங்களில் மாத்திரமல்ல பொது வைபவங்கள், திருமண நிகழ்வுகளில் சமைக்கப்படும் உணவு தொடர்பினும் கூடுதல் அவதானம் தேவைப்படுகின்றது. சமையலுக்காக கொண்டு வரப்படும் பொருட்கள் தொடர்பில் விழிப்படைய வேண்டும், காய்கறிகள் மட்டுமல்ல இறைச்சி, மீன் வகைகள் விடயத்தில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும். பழுதடைந்த பொருட்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவு மட்டுமல்ல சில சமயங்களில் பரிமாறப்படும் உணவுப் பண்டங்கள் கூட காலாவதியானவையாகக் காணப்படுகின்றன.

ஒரு சம்பவம் நடந்து விட்டால் அதன் தாக்கம் மக்கள் மனங்களிலிருந்து மறையும் வரைதான் நாம் கூச்சல் போடுகின்றோம். அதிகாரிகளும் கச்சைகட்டிக்கொண்டு உத்தரவுகளைப் போட்டவண்ணம் உள்ளனர். இரண்டு வாரம் ஒரு மாதம் கடந்த பின்னர் மக்கள் அதனை மறந்துவிடுவார்கள். அடுத்து என்ன நடக்கும் “பழையகுருடி” கதைதான். அதிகார மட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வாங்காமப் பள்ளிவாசல் கந்தூரியில் இடம்பெற்ற கவலைதரக்கூடிய சம்பவம் இனிமேல் எங்கும் இடம்பெறக் கூடாது. அதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாட்டை பிரதேச சுகாதார அதிகாரிகள் கொண்டிருக்கின்றனர். சுகாதார அமைச்சு அதிகாரிகளும், பிராந்திய சுகாதார உயரதிகாரிகளும் இதுவிடயத்தில் காத்திரமான செற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் பண்டிகைக்காலங்கள் எம்மை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. சமைத்த உணவுகள் போன்றே உணவுப் பண்டங்கள் விடயத்திலும் சுகாதார அதிகாரிகள் விழிப்புடனிருக்க வேண்டிய நேரமிது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


Add new comment

Or log in with...