வரலாறு காணாத வகையில் வாக்காளருக்கு பண விநியோகம் | தினகரன்

வரலாறு காணாத வகையில் வாக்காளருக்கு பண விநியோகம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந் திகதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் பிரசாரம் ஓய்கிறது.

ஆர்.கே.நகர் மீதுதான் அனைவரின் கவனமும் இருக்கிறது. காரணம் அது ஜெயலலிதாவின் தொகுதி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க பிளவுபட்டுப் போனதால் எந்த அணியின் செல்வாக்கு ஓங்கியிருக்கிறது என்பதை அறிவதற்கான பரீட்சைக் களமாக ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது.

அரசியல் கட்சியினர் அங்கு பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. ஆர்.கே.நகரில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால் அங்கு பணமழை கொட்டுகிறது. சசிகலா அணி வேட்பாளரான தினகரனின் பணம் எங்கும் புகுந்து விளையாடுகிறது.

பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக துணை இராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முறைகேடுகளை தடுப்பதற்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இடைத்தேர்தல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் ஆணையாளர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பொலிஸ் அதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆர்.கே.நகரில் பணம் கொடுப்பது தடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாகவே ஆர்.கே.நகர் தொகுதியில் ஆங்காங்கே பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. காமாட்சி விளக்கு, குத்து விளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களும் விநியோகிக்கப்பட்டன. இது தொடர்பாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை திடீரென வாக்காளர்களுக்கு மொத்தமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது. தொகுதி முழுவதும் 80 சதவீதம் பேருக்கு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் வீதம் கொடுக்கப்பட்டது.தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளையும் மீறி ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாக வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 15 இலட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆர்.கே.நகரில் வன்முறை வெடிக்கும் சூழல் நிலவுவதாலும், பணப்பட்டுவாடா நடைபெறுவதாலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க. சார்பில் பண வினியோகம் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். அணி, பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளன.

அதே நேரத்தில் டி.டி.வி. தினகரன், ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்துவதற்கு சதி நடப்பதாக கூறி உள்ளார். பணப்பட்டுவாடா, மோதல் என ஆர்.கே.நகர் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி இருக்கும் நிலையில் அங்கு திட்டமிட்டபடி 12-ந் திகதி தேர்தல் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் காரணமாகவே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியிலும் அதுபோன்ற குற்றச்சாட்டுகளே அதிகமாக எழுந்துள்ளன. இதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன் அணியினர் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி, விடிய விடிய பணத்தை வாரி இறைத்தனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளதால் இடைத்தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தி.மு.கவில் மருதுகணேஷ்; அ.தி.மு.க வில் பன்னீர் அணியில் மதுசூதனன்; சசிகலா அணியில் தினகரன் உட்பட 62 பேர் போட்டி யிடுகின்றனர். அ.தி.மு.க இரு அணிகளாக களம் காணும் நிலையில் தினகரனுக்கு தொகுதியில் பலத்த எதிர்ப்பு உள்ளது.

ஆட்சியிலும் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த, தேர்தலில் தினகரன் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தினகரன் தரப்பினர் வெற்றி பெற பகீரத முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பணம், பொருட்கள் விநியோகத்தில் தீவிரம் காட்டுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை இரவு அவர்கள் களத்தில் குதித்தனர். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என தொகுதி முழுவதும் விடியவிடிய வீடுகளில் பணப் பட்டுவாடா செய்தனர்.வாக்குக்கு 4,000 முதல் 5,000 ரூபா வரை வழங்கப்பட்டது. வீடுகளில் கொடுக்க முடியாதவர்களுக்கு, அலைபேசியில் பொதுவான ஓரிடத்திற்கு அழைத்து, விநியோகம் செய்தனர்.இது குறித்த தகவல்கள், பல தரப்பில் இருந்தும், பறக்கும் படையினருக்கு வந்தன. அவர்களது தீவிர சோதனையில், கொருக்குப்பேட்டை அஜீஸ் நகரில் வீதியில் கவனிப்பாரற்றுக் கிடந்த, நான்கு பைகள் சிக்கின. அதில், 10 இலட்சம் ரூபாய் இருந்தது.

தொகுதியின் பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஐந்து இலட்சம் ரூபாய் என மொத்தம், 15 இலட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நேதாஜி நகர் பகுதியில் பணபட்டுவாடாவை தடுக்க முயன்ற தி.மு.கவினரை தினகரன் தரப்பினர் அடித்து விரட்டினர். இதில் தி.மு.க நிர்வாகிகள் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

'ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் அணியினர் வாக்குக்கு, 4,000, - 5,000 ரூபாய் என பணத்தை வாரி இறைக்கின்றனர். அதைத் தடுக்க வேண்டும். தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என கோரிக்ைககள் தீவிரமடைந்துள்ளன.

பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி, மற்றும் முன்னாள் அமைச்சர் முனுசாமி ஆகியோர் கூறுகையில், 'போட்டி, தேர்தல் ஆணையத்துக்கும், ஆளுங் கட்சியின் அதிகார வர்க்கத்துக்கும் இடையே தான் நடக்கிறது. பண விநியோகத்தை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தோற்றுள்ளது' என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியைச் சேர்ந்த சவுந்தரராஜன், ''தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; தேர்தலை ரத்து செய்ய வேண்டும்'' என்றார். இது போல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளனர். அடுக்கடுக்காக புகார்கள் குவிவதால், தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த அளவுக்கு பண விநியோகம் எப்போதும் நடந்தது இல்லை. பிறஅரசியல் கட்சிகள் மட்டுமல்ல; மக்களே திகைப்பில் உள்ளனர். அப்புறம் எப்படி தேர்தல் நியாயமாக நடக்கும். அராஜகம் அதிகரிக்கும் என்பதால் தேர்தலை ரத்து செய்ய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...