வில்பத்து விவகாரத்துக்கு நியாயமான தீர்வு அவசியம் | தினகரன்

வில்பத்து விவகாரத்துக்கு நியாயமான தீர்வு அவசியம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வன பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதாகவும் இதற்கான ஆய்வை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகள் பணிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்றுமுன்தினம் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கின்றார். அது வனப் பாதுகாப்பு பிரதேசமா அல்லது மக்களின் வாழ்விடங்களா என்பது குறித்து இந்த ஆய்வின் பின்னரே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வில்பத்து வனத்தின் வடக்கு எல்லைப் பகுதிகள் வன பாதுகாப்புப் பிரதேசமாக அண்மையில் ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டதால் எழுத்துள்ள பிரச்சினை இன்று விஸ்வரூபமெடுத்திருக்கின்றது. குறுகிய நோக்கில் இதனைப் பார்ப்பது முறைகேடானதாகும். ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் மீதான ஓரவஞ்சனையாகவே இதனை முஸ்லிம்கள் பார்க்கின்றனர். வில்பத்து விவகாரம் தொடர்பில் முழுமையான ஆய்வினை மேற்கொண்டே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

இதன் விளைவாக அரசியல் தளத்தில் உச்சக்கட்ட முறுகல் நிலை உருவெடுத்துள்ளது. முஸ்லிம்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படுவதாக மக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்விடயம் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியும் இருக்கின்றது. அது ஆரோக்கியமானதல்ல.

1990 இல் வட புலத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதிலிருந்து 2009 வரையிலும் அடுத்து யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாள் முதல் 2017 வரையிலும் அந்த மக்கள் அகதி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக தங்களது காணிகளிலிருந்து அந்த மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் அக்காணிகளில் காடு வளர்வதைத் தடுக்க முடியுமா? அந்த மக்கள் அங்கிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டதால் வீடுகள், பள்ளிவாசல் பாடசாலை என்பன பாழடைந்தன. பல வீடுகள் முற்றாக சேதமுற்றுக் காணப்படுகின்றன. குடியிருப்புகள் காடாக மாறியதற்காக அவற்றை வனப் பாதுகாப்பு பகுதியாக கூற முடியுமா?

நீதியான முறையில் எல்லைகள் அடையாளம் காணப்பட்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்க முடியாது. இன்று வன இலாகா கூறும் பாதுகாப்பு வனப்பிரதேசம் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டதல்ல. அது உரிய முறையில் மேற்கொள்ளப்படாத எல்லை அடையாளமாகும். இவர்கள் வலியுறுத்தும் காணிகள் வன இலாகாவுக்குரியதென்றால் அங்கு எப்படி வீடுகள் பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன எனக் கேட்கப்படுவதில் நியாயம் இருக்கவே செய்கின்றது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட பள்ளிவாசல்களும், குடியிருப்புகளும் காணப்படும் நிலத்தை எப்படி வனப்பாதுகாப்பு பகுதி என காட்ட முயற்சிக்கின்றனர்? வெறுமனே முசலி பிரதேசம் எனக் குறிப்பிடுவதன் மூலம் முக்கிய விடயங்கள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. முசலி பிரதே சபைப் பிரதேசம் எனக் குறிப்பிட்டிருக்கின்ற போதிலும் அதில் காணப்படும் மறிச்சுக்கட்டி, பாலக்குழி, விளாத்திக்குளம் உட்பட பல கிராமப்புறப் பகுதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் அங்குபோன பொதுபலசேனா, ராவணா பலயவும் இக்காணி வன இலாகாவுக்குரியது எனக் கூறி அங்கு முஸ்லிம்கள் மீளவும் குடியேறுவதை அனுமதிக்க மறுத்து அம்மக்களின் இருப்பிடங்களை கபளீகரம் செய்யும் முயற்சிகளை தூண்டிவிட்டுள்ளன.

அதனையடுத்தே சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் பேசி, ஆய்வுகளை மேற்கொண்டு எல்லைகளை மீள்பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதியின் செயலாளர் முழுக் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவ்விடயத்தில் தனது மக்களுக்கு சரியான நியாயம் கிடைக்காத பட்சத்தில் பதவி துறந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராட முடிவு செய்திருப்பதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அறிவித்திருக்கும் நிலையில், சில அரசியல் சக்திகள் இதனை அரசியலாக்கி இலாபம் தேட முனைகின்றன. இவர்களின் பிற்போக்குத்தனமான அரசியல் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை​. இது ஒரு பிரதேச மக்களின் வாழ்வாதாரப் போராட்டமாகும். இதனை முன்னிறுத்தி அரசியல் வியாபாரம் நடத்த எவரும் முனையக் கூடாது. அந்த மக்களின் விடிவுக்கான பங்களிப்பையே செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் ராஜித சேனாரத்ன அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள் என்றோ, அமைச்சர் ரிஷாத்தின் மக்கள் என்றோ பார்க்க முற்படக்கூடாதெனவும் அந்த மக்களும் வாழ வேண்டும். அவர்களது இருப்பிட உரிமை உறுதி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்திக் கூறியிருக்கிறார். பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் வீடுகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் எதுவும் இருக்க முடியாது. அங்கு காடுகளும் மரங்களும், நீர் நிலைகளும் மட்டும் தான் இருக்க முடியும் என அமைச்சர் ராஜித யதார்த்தமாக கருத்து வெளியிட்டிருக்கிறார். இதனை நாம் ஆரோக்கியமாகவே பார்க்க வேண்டியுள்ளது. அமைச்சர் நியாயத்தின் பக்கம் நின்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். உண்மையான பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேச எல்லை அடையாளம் காணப்பட வேண்டும். அந்த எல்லை தெளிவாக அடையாளம் காணப்படுமானால், இன்று விஸ்வரூபமெடுத்திருக்கும் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வை எட்ட முடியும். இதில் மூடிமறைப்பதற்கு எதுவும் கிடையாது.


Add new comment

Or log in with...