எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை சுமந்திரனின் கருத்துக்கு தினேஷ் மறுப்பு | தினகரன்

எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை சுமந்திரனின் கருத்துக்கு தினேஷ் மறுப்பு

வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருக்கும் கருத்து முற்றிலும் தவறானது என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பு சபையினால் அமைக்கப்பட்ட உபகுழுவின் செயற்பாடுகளை பிழையாக வழிநடத்தும் வகையில் சுமந்திரன், ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருப்பதாக தினேஷ் குணவர்த்தன சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் வழிநடத்தல் குழு இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாவும், அதிகாரப்பகிர்வு தொடர்பான முன்வைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுமந்திரன் எம்பி, தனது செவ்வியில் கூறியிருப்பதாக தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.

எனினும், வழிநடத்தல் குழுவினால் இவ்வாறான எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்றும், வழிநடத்தல் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி கருத்துத் தெரிவிப்பதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லையென்றும் தெரிவித்தார். இந்த விடயம் திருத்தப்பட வேண்டும் என்றும் தினேஷ் குணவர்த்தன கேட்டுக் கொண்டார்.

இதன்போது சபையிலிருந்த சுமந்திரன் எம்பி, கருத்துத் தெரிவிக்கையில், குறித்த ஊடகம் தான் கூறிய கருத்துக்களை சரியான முறையில் அறிக்கையிட்டிருப்பதாகவும், தினேஷ் குணவர்த்தன எம்.பி கூறியதைப் போன்று தான் வழிநடத்தல் குழுவை தவறாக வழிநடத்தியிருந்தால் அது பற்றி வழிநடத்தல் குழுவில் கேள்வியெழுப்ப முடியும். இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...