அமைச்சர் ராஜிதவின் கருத்து ஐ.நாவை ஏமாற்ற முயலும் செயல் | தினகரன்

அமைச்சர் ராஜிதவின் கருத்து ஐ.நாவை ஏமாற்ற முயலும் செயல்

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ள கருத்து, ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றும் செயற்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் ராஜித ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இறுதி யுத்தத்தில் இடம் பெற்ற போர்க்குற்றங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதெனவும் அது இறுதி யுத்தத்தின் போது அதிகளவில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணை குழுவால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ஏனைய நல்லிணக்க பொறுமுறைகள் உட்பட ஐ.நா மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தணைகளை நிறைவேற்றவும் இலங்கை அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் கோரியிருந்தது.

இவ்வறான நிலையில் அரசு ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் நிபந்தனைகளுக்கு இணைந்து கால அவகாசத்தையும் பெற்றுள்ள இவ்வேளையில் போர்க்குற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் மிப்பெரிய பொய்யொன்றை முக்கிய அமைச்சராக உள்ள ராஜித தெரிவித்துள்ளார்.

இதற்கும் அப்பால், இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்வது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சகல உரிமையையும் சலுகைகளையும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று வடக்கு கிழக்கில் பாரிய நில மீட்பு போராட்டங்களும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் இடம்பெற்றுவரும் நிலையில் எதனை சாதித்துவிட்டதாக அரசு பறைசாற்ற முயல்கின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

எனவே தெற்கில் ஓர் கதையும் வடக்கில் ஓர் கதையும் பேசும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் இலங்கை அரசாங்கமும் இரண்டு வருட கால அவகாசத்தில் ஐ நாவின் மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுக்கின்றதா? என்பது தொடர்பில் குறித்த காலப்பகுதிக்கொருமுறை ஆய்வை மேற்கொண்டு இலங்கை அரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா விசேட, கோவில்குளம் குறூப் நிருபர்கள் 

 


Add new comment

Or log in with...