Friday, March 29, 2024
Home » மூவின மக்களையும் அரவணைத்து செயற்பட்டவர் மர்ஹும் அஷ்ரப்

மூவின மக்களையும் அரவணைத்து செயற்பட்டவர் மர்ஹும் அஷ்ரப்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் எஸ்.எஸ்.எம். ஜெஃபர்

by gayan
October 5, 2023 10:52 am 0 comment

மூவின மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் அரசியல் செயற்பாடுகள் அமைந்திருந்தன என தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளருமான எஸ்.எஸ்.எம்.ஜெஃபர் தெவித்தார்.

தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23 ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வு அட்டாளைச்சேனையில் அண்மையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே ஜெஃபர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “நாட்டிலுள்ள மூவின மக்களும் சமஉரிமையோடும், சமத்துவத்தோடும் வாழ வேண்டும் என்பதை செயலுருவில் காட்டிய தலைவராக அஷ்ரப் மிளிர்ந்தார். மூவின மக்களும் அரசியல் அந்தஸ்தோடு வாழ வேண்டும் என்பதற்காகவே தமது அந்திம காலங்களில் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) கட்சியை அமைத்து அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டார்.

முஸ்லிம்களின் நலன்களில் மாத்திரம் அக்கறை கொண்ட ஒரு தலைவராக அவர் இருக்கவில்லை. அனைவரும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டுமென்ற எண்ணக்கருவோடு எல்லோருக்கும் எல்லா வகையான உரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டுமென்பதில் அவர் கவனமாக இருந்தார்.

அவருடைய அந்திம காலங்களில் அவரது அரசியல் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் பிற சமூகத்தவர்கள் ஏற்றுக்கொண்டு அவருக்குப் பின்னால் அணிதிரளத் தயாராகவிருந்தனர்.

முஸ்லிம்களுக்கென்று தனியான அரசியல் கட்சியை உருவாக்கி முஸ்லிம்களது கல்வி, பொருளாதாரம், அரசியல் சமய கலாசார உரிமைகள் பெற்று குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் என்பவற்றை உருவாக்கியதுடன், மக்களை ஓரணியில் ஒன்றுதிரட்டினார்.

முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் இந்நாட்டில் எந்தவொரு பெரும்பான்மைக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமையை இலங்கை அரசியலில் தோற்றுவித்து முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழும் நிலைமையை ஏற்படுத்தினார். அவ்வாறு பணியாற்றிய பெருந்தலைவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

அஷ்ரபின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் முஸ்லிம் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சென்று எதிர்காலத்தில் ஐக்கியம் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்ப அரசியல் தலைவர்களும்,முஸ்லிம் புத்திஜீவிகளும் முன்வர வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

எம்.எப். றிபாஸ்…?

(பாலமுனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT