Thursday, March 28, 2024
Home » மலையக மக்களுக்கு சட்டபூர்வமாக காணி வழங்க முன்வருவோருக்கே அடுத்த தேர்தலில் நாம் ஆதரவு

மலையக மக்களுக்கு சட்டபூர்வமாக காணி வழங்க முன்வருவோருக்கே அடுத்த தேர்தலில் நாம் ஆதரவு

by gayan
October 5, 2023 8:48 am 0 comment

“மாத்தளை மாவட்டத்தின் ரத்வத்தை தோட்டத்தில் தொழிலாளர் குடும்பத்துக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தி உலகத்துக்கு எடுத்துக்காட்டினோம். அண்மையில் சகல கம்பனிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேட்ச் காணி வழங்க ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதை 10 பேர்ச்சாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்” என மலையக மக்கள் முன்னணி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் கூறினார்.

அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியவற்றின் அனுசரணையுடன் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘200 வருடங்கள் இலங்கையில் இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாழ்க்கை சுவடுகளை நினைவூட்டும் சிறப்பு மலர்’ வெளியீட்டுவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொழிற்சங்கவாதியான எஸ்.முருகையா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கவாதியுமான வடிவேல் சுரேஷ்,பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ், கலாநிதி இரா. ரமேஸ், அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம்.வாமதேவன் மற்றும் கல்வியாளர்கள், தொழிற்சங்கவாதிகள்,தொழிலாளர்கள், நகரவர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இராதாகிருஷ்ணன் எம். பி தொடர்ந்து பேசுகையில், தொழிலாளர்களுக்கு அமைச்சரவை அங்கீகாரத்துடன் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், முக்கிய நிகழ்வாக பட்டிமன்றம் நடத்தப்பட்டது. சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பேசுகையில் “மலையக மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் 9 பேர் மட்டுமே இருக்கின்றோம். ஸ்ரீமா _சாஸ்திரி ஓப்பந்தம் மற்றும் இனக்கலவரம் ஊடாக மலையக சமூகம் திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டு குறுகியுள்ளதால் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. மலையக மக்களுக்கு சட்டபூர்வமாக காணி வழங்குவதற்கு முன்வருபவர் யாராக இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரையே ஆதரிப்போம்” என்றார்.

அடுத்து பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் தொழிற்சங்கவாதியுமான எஸ். முருகையா தமது உரையில், 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழர்களின் சார்பாக 07 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். எனினும் 1948 இல் திட்டமிடப்பட்ட முறையில் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு 1977 வரை அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டார்கள். எனவே நாடற்றவர்களாக இருந்த மக்கள் அனைவருக்கும் 2003 இல் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்ட து. இருந்தும் இன்றுவரை 80 சதவீதமான பெருந்தோட்ட மக்கள் லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில் காணி உறுதிகள் வழங்கும்போது காணிக்கச்சேரியில் பதிவு செய்யப்பட்டு முழுமையான அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.

டி.வசந்தகுமார்…?

(நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT