நியாயமாக அணுகப்பட வேண்டிய முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி விவகாரம் | தினகரன்

நியாயமாக அணுகப்பட வேண்டிய முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி விவகாரம்

இலங்கையில் சுமார் மூன்று தசாப்த காலம் நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் 08 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இருந்தும் இந்த யுத்தம் தோற்றுவித்த பெரும்பாலான பிரச்சினைகளும், அவை தோற்றுவித்துள்ள பின்விளைவுகளும் இன்னும் தீர்க்கப்படாதுள்ளன. அவற்றில் பொதுமக்களின் காணிகள் தொடர்பான விவகாரம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்திலுள்ள முசலிப் பிரதேசத்தில் இருக்கும் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த மக்கள் தமது பூர்வீக வாழிடங்களை மீட்பதற்கான போராட்டத்தை கடந்த 12 நாட்களுக்கு மேலாகவும், இதே பிரதேச செயலகத்தின் மறிச்சிக்கட்டியைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமது பூர்விக வாழிடங்களை வில்பத்து வனாந்திரம் என்ற போர்வையில் கபளீகரம் செய்யும் வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசல் முன்பாக கடந்த ஏழு நாட்களுக்கு மேலாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை இவ்வாறிருக்க, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபுலவு பிரதேசத்திலுள்ள மக்கள் தம் பூர்விக வாழிடங்களைக் கோரி சுமார் இரு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இங்கு மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் எல்.ரி.ரி.ஈ யினரால் 1990 இல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். இவர்கள் யுத்தம் முடிவுற்றும் 2012 இல் தான் சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டனர்.

முள்ளிக்குளம் மற்றும் கேப்பாபுலவு மக்கள் யுத்தம் இடம்பெற்ற போது தம் வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். அதனால் முள்ளிக்குளம் மற்றும் கோப்பாபுலவு காணிகளில் பாதுகாப்புப் படையினர் நிலை கொண்டனர். ஆனால் யுத்தம் முடிவுற்று 08 வருடங்கள் கடந்தும் அவ்விடங்கள் இன்னும் மக்களிடம் கையளிக்கப்படாதுள்ளன. அதனால்தான் மக்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இதேவேளை மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் தம் வாழிடங்களை வில்பத்து வனாந்திரத்திற்குள் உள்ளடக்கும் வகையிலான வர்த்தமானியை இரத்து செய்யும்படி கோரி இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். ஆனால் இவ்விவகாரங்கள் மக்கள் போராட்டமாக வெடிக்க முன்னர் நியாயமாகத் தீர்வு காணப்பட்டிருப்பது அவசியம். அது உள்நாட்டிலேயே தீர்வு காணப்படக் கூடிய விவகாரம். ஆனால் இன்று முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி மற்றும் கேப்பாபுலவு விவகாரம் உள்நாட்டின் கவனத்தை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த விடயமாக மாறி விட்டது.

இதன் விளைவாக தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சயில் ரெட்டி தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி பிரதேசங்களுக்கு நேரில் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மறிச்சிக்கட்டி, முள்ளிக்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது பக்க நியாயங்களை இவர்களிடம் விபரமாக எடுத்துக் கூறினர். தமது பூர்வி க வாழிடங்களுக்கான ஆதாரங்களையும் எடுத்துக் காண்பித்தனர்.

இம்மக்களது குறைகளையும், ஆதங்கங்களையும் கேட்டறிந்த சர்வதேச மன்னிப்பு சபை பொதுச்செயலாளர் தலைமையிலான குழுவினர், 'நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அறிந்த நாம் சர்வதேச மன்னிப்பு சபை சார்பாக இங்கு வந்துள்ளோம். உங்களது விவகாரத்தை உயர் மட்டங்களுக்கு கொண்டு செல்வோம்' எனக் குறிப்பட்டுள்ளனர். இது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதலாகும். ஆனால் சர்வதேசத்தின் கவனத்தை இவ்விவகாரம் ஈர்த்திருப்பது இலங்கைக்கு ஆரோக்கியமானதல்ல.

கடந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்தை பிழையாக அணுகியதன் விளைவாக இந்நாடு உலகிலிருந்து தனிமைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மாற்றந்தாய் மனப்பான்மையோடுதான் உலக நாடுகள் இலங்கையை நோக்கின. பெரும்பாலான நாடுகள் இந்நாட்டுடனான உறவுகளிலிருந்து தூரமாகின. இதனால் இந்நாடு பலவித அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தது. அவ்வாறான துரதிஷ்ட நிலையிலிருந்து இந்நாட்டை மீட்டெடுத்து சுபிட்சம் மிக்க ஒளிமயமான பாதையில் நாட்டை இட்டு சென்ற பெருமை நல்லாட்சி அரசாங்கத்தையே சாரும்.

இதன் பயனாக கடந்த ஆட்சிக் காலத்தில் சீர்குலைந்திருந்த சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் மீண்டும் சீரடைந்துள்ளன. இந்நாட்டுனான உறவில் இருந்து- தூரமான நாடுகள் மீண்டும் இலங்கையுடன் நெருக்கமான உறவை ஆரம்பித்து விட்டன. அத்தோடு உலகின் பல நாடுகளும் இந்நாட்டில் முதலீடுகளை செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இவ்வாறான சூழலில்தான் முசலிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மறிச்சிக்கட்டி மற்றும் முள்ளிக்குள விவகாரமும், கேப்பாபுலவு விவகாரமும் சர்வதேசம் வரையும் சென்றிருக்கின்றன.

இவ்விகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதுவே நாட்டின் மீது நேசம் கொண்டுள்ள ஒவ்வொரு பிரஜையினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. நாட்டின் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அது தான் ஆரோக்கியமானது. நாடு தொடர்ந்தும் முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டுமேயொழிய கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று வீழ்ச்சிப் பாதையில் செல்லலாகாது. அதற்கு ஒரு போதுமே இடமளிக்கக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவு-ம் உள்ளது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...