இளைஞர்களுக்கு புத்தூக்கமளிக்கும் அரசு | தினகரன்

இளைஞர்களுக்கு புத்தூக்கமளிக்கும் அரசு

இலங்கை சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் இளைஞர் யுவதிகளாக உள்ளனர். அதாவது இந்நாட்டின் தற்போதைய சனத்தொகையில் பெரும்பகுதியினர் இளம்பராயத்தினர் என்பது மிகத் தெளிவானது.

இன்று இளைஞர்களாக இருப்பவர்கள் தான் நாளை நாட்டின் தலைவர்களாகத் திகழவிருக்கிறார்கள். இவர்கள் தான் நாட்டை நிர்வகிக்கவிருப்பவர்கள். இது தான் உலகலாவிய நியதி. அதனால் அவர்களை அதற்கு ஏற்ப வளர்த்தெடுக்க வேண்டும். இதன் நிமித்தம் இளைஞர் யுவதிகள் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான காரியமாகும். அதாவது இளைஞர் யுவதிகளின் தேவைகள், எதிர்பார்ப்புக்கள், அவர்களது அபிலாஷைகள், உணர்வுகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். அவை ஒழுங்கு முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்.

 தவறும் பட்சத்தில் அவர்கள் தவறான பாதைகளில் இட்டுச் செல்லப்படலாம். குறிப்பாக அற்ப அரசியல் இலாபம் தேடு-பவர்களின் நலன்களுக்காகவும், அவர்களது தேவைகளுக்காகவும் அவர்கள் பயன்படுத்தப்படலாம்.

இதன் விளைவாகத் தான் தெற்கில் 1971ஆம் ஆண்டிலு-ம், , 1988, 1989 ஆம் ஆண்டுகளிலும் இளைஞர் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. அதேபோன்று வடக்கு கிழக்கு பிரதேங்களிலும் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களுக்குள் தள்ளப்பட்டனர். இப்போராட்டங்களும், கிளர்ச்சிகளும் இந்நாட்டு இளைஞர்களுக்கு சுபீட்சத்தையோ, விமோசனத்தையோ பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இந்நாடு வளம் மிக்க இளம் பராயத்தினரில் ஒரு பகுதியினரை இழந்தது.

ஆனால் இவ்விளைஞர் யுவதிகளின் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் உரிய முறையில் அணுகப்பட்டு அவற்றுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஒரு போதும் அவ்வாறான துரதிஷ்டகர நிலைமைக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள். இது மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ்வாறான விடயங்களில் அதிக கவனம் செலுத்திய தற்போதைய அரசாங்கம் இந்நாட்டு இளைஞர் யுவதிகள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது. அதன் பயனாக இந்நாட்டு இளைஞர் யுவதிகள் முன்னொரு போதுமே இல்லாத சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் அனுபவிக்கின்றனர்.

இதனை கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 01 வரை திருகோணமலையில் நடைபெற்ற யொவுன்புரய 2017 இளைஞர் முகாமிலும், நேற்று- முன்தினம் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞரணி மாநாட்டிலும் அவதானிக்க முடிந்தது. இவற்றில் இளைஞர்கள், யுவதிகள் தம் கருத்துக்களையும், எதிர்ப்பார்ப்புகளையும், ஆதங்கங்களையும், அபிலாஷைகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்தினர். அத்தோடு தம் ஆற்றல்களையும், திறமைகளையும் அவர்கள் பகிரங்கப்படுத்தவும் தவறவில்லை.

இவ்வாறான வாய்ப்புகள் கடந்த ஆட்சிக் காலத்தில் இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவ்வாட்சிக்காலத்தில் இளைஞர்களின் சக்தி ஓரிரு அரசியல்வாதிகளின் தேவைக்காகவும், அவர்களது நலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. இதனால் இளைஞர், யுவதிகளுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர்களைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் நன்மை பெற்றுக் கொண்டனர்.

ஆனால் இளைஞர் சக்தியையும், அவர்களது ஆற்றல்களையும் தம் நலன்களுக்காக பயன்படுத்துவதும் ,சூறையாடுவதும் எவ்விதத்திலும் ஏற்று-க் கொள்ள முடியாததாகும். அவை குறுகிய கால நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் நீண்ட காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது தான் கடந்த கால வரலாறு.

இந்த அடிப்படையில் தான் நல்லாட்சி அரசாங்கம் இளைஞர்களின் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்துகின்றது. அந்த வகையில் திருமலையில் நடைபெற்ற யொவுன்புரய 2017 நிறைவு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது, நானும் ஜனாதிபதியும் எமது இளமைப் பருவத்தை யுத்தத்தைப் பார்ப்பத்தில் தான் காலம் கழிக்க வேண்டி ஏற்பட்டது. அவ்வாறான ஒரு நிலைமை இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு இனிமேலும் ஏற்படக் கூடாது.

இந்த இளம் பராயத்தினருக்காகவே நாம் இரண்டு- பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்து-ள்ளோம்' என்று குறிப்பிட்டார். அத்தோடு 'கிராமத்திற்கு ஒரு கோடி' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் 1200 இலட்சம் ரூபாவை இளைஞருக்கு 75 ஆயிரம் ரூபா படி வழங்கினோம். அவர்கள் அப்பணத்தைக் கொண்டு ஐயாயிரம் இலட்சம் ரூபா பெறுமதியான வேலைகளை நாட்டுக்காக செய்து முடித்துள்ளார்கள். அதன் காரணத்தினால் இம்முறை அவர்களுக்கான நிதியை இரு மடங்காக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன்' என்றும் கூறினார்.

அதேநேரம் இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது, 'மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட இடமளிக்காத வகையில் இளைஞர் யுவதிகளுக்கு தேவையான சமூக அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது' என்று குறிப்பிட்டார். அத்தோடு நேற்று முன்தினம் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி-, 'நாட்டின் இளைஞர் சமூகத்திற்கும், பொது மக்களுக்கும் சிறந்ததொரு- எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஸ்ரீ ல.சு.க. வின் தலைமையை ஏற்றதாகவும் தெரிவித்தார்.

இந்நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களு-ம் இளைஞர் விவகாரம் தொடர்பில் இவ்வாறு கவனம் செலுத்துவதானது இந்நாட்டு இளைஞர் சமூகம் பெற்றிருக்கும் பெரும் பாக்கியமாகும். இது அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கு கட்டியம் கூறுகின்றது. அத்தோடு இளைஞர்களுக்கு நம்பிக்கை ஒளி தென்படவும் தொடங்கிவிட்டது. அதனால் அவர்களை எவரும் இனிமேல் அற்ப அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தக் கிடைக்காது. அவர்களது சக்தியும் திறன்களும் அவர்களுடைய சபீட்சத்திற்கும், நாட்டின் விமோசனத்திற்கும் பயன்படுத்தப்படும் யுகம் ஆரம்பித்திருக்கின்றது. அதுவே இன்றைய தேவையும் கூட. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...