பொறுப்புக் கூறுவது யார்? | தினகரன்

பொறுப்புக் கூறுவது யார்?

கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட சிறிமல்வத்த மகா வித்தியாலயத்தின் 70 வருடகால பழமைவாய்ந்த கட்டிடமொன்றின் கூரை உடைந்து விழுந்ததால் அங்கு படித்துக்கொண்டிருந்த 19 மாணவர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களே இதில் காயமுற்றுள்ளனர். இதுவொரு நவோதய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பாடசாலைக் கட்டிடம் 70 வருடகாலம் பழைமை மிக்கதெனவும் இதன் கூரை இற்றுப் போயிருப்பது தொடர்பாக கல்வித் திணைக்களத்துக்கு பல தடவைகள் முறையிடப்பட்டிருந்த போதிலும் அதிகாரிகள் அசமந்தப் போக்கில் இருந்ததன் காரணமாக அப்பாவி சிறிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏதோ தெய்வாதீனமாக மாணவர்கள் உயிர் தப்பியிருப்பது பெரிய விடயமாகும். அதிகாரிகளின் கவனயீனப் போக்கை கண்டிக்காமலிருக்க முடியாது.

அத்துடன் பாதுகாப்பற்ற ஒரு கட்டிடத்தில் வகுப்பறை நடத்தியது குறித்து ஆசிரியர்கள், முக்கியமாக அதிபர் எண்ணிப்பார்க்க வேண்டும். அதுவும் மழைக் காலத்தில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்பதை புரிந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். கூரை உடைந்து விழுந்ததன் மூலம் வகுப்பறை முற்றாக சேதமடைந்துள்ளது. தளபாடங்கள் பாவிக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகின்றன. மாணவர்களின் பாடப்புத்தகங்களும் புத்தகப்பைகளும் கூட சேதமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பறைக் கட்டிடத்தில் 43 மாணவர்கள் இருந்துள்ளனர். இவர்களில் 19 மாணவர்கள் மாத்திரமே காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிராபத்தை மாணவர்கள் எதிர்கொள்ளாத போதிலும் இவ்விடயத்தை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இதனை எச்சரிக்கையாகவே நோக்கவேண்டும். எதிர்காலத்தில் மிக விழிப்புடன் செயற்படவேண்டும். இந்த ஒருபாடசாலை மட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இது பொருந்தும்.

வீட்டிலிருந்து படிப்பதற்காக புறப்பட்டு வரும் மாணவர்களின் பாதுகாப்பு பாடசாலை அதிபரையும், ஆசிரியர்களையுமே சார்ந்து நிற்கின்றது. பிள்ளைகள் படிப்பை முடித்துக்கொண்டு வீடு வந்து சேரும்வரை பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து சிந்தனையுடனேயே இருக்கிறார்கள். அவர்கள் வீடு வந்த சேர்ந்த பின்னர்தான் அந்த தாய் தந்தையர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். இந்த இடத்தில் ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. வீட்டிலிருந்து புறப்பட்ட பிள்ளை பாடசாலையை சென்றடையும் வரை கண்காணிப்பாக இருக்க வேண்டும். அதேபோன்று பாடசாலை விட்டு வீடு போய்ச் சேரும்வரை ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

இந்த சிறிமல்வத்த பாடசாலையின் கூரை நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டதோடு கூரை எந்த வேளையிலும் உடைந்து விழக்கூடிய அச்சுறுத்தல் காணப்பட்டது. அபாய அறிவிப்பு காணப்பட்ட நிலையிலும் அதிபர், ஆசிரியர்கள் பொறுப்பற்ற விதத்திலும், கவனயீனமாகவும் இருந்துள்ளனர். இத்தகைய அலட்சியப் போக்கு குறித்து பெற்றோர் தெரிவிக்கும் விசனம், நியாயமானதாகவே கொள்ள வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் பொறுப்பற்ற வகையில் இருந்தவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவேண்டும்.

இதேவேளை இந்தச் சம்பவத்தை திடீர் விபத்தென வர்ணித்திருக்கும் மத்திய மாகாண முதலமைச்சர் இது தொடர்பில் ஆளாளுக்கு விரல் நீட்டி குற்றம் சுமத்துவதை விடுத்து, பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் மனநிலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையில் களமிறங்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். குற்றச்சாட்டு சுமத்துவதால் எதுவும் நடத்துவிடப்போவதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சம்பவம் தொடர்பில் கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் உரிய காலத்தில் நீதி கிடைக்காது போனதன் காரணமாக பாடசாலை கட்டிடத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியாது போனதாக அவர் குறிபபிட்டுக் காட்டியிருக்கிறார். கட்டிடம் இற்றுப்போனது ஒருபுறம், எதிர்பாராத விதத்தில் கடும்மழை பெய்தமை மாற்றொரு காரணம் இதில் யாரைத்தான் குறைகூற முடியும் எனக் கூறிய அவர் நடந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டும், விமர்சித்துக்கொண்டுமிராது உடைந்த கட்டிடத்தை புதுப்பிக்க அவசர நடவடிக்கை எடுப்பதே முக்கிய பணியெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறை நிவர்த்திகளை மேற்கொள்ள உரிய காலத்தில் நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற விரும்பத்தகாத, கவலை தரக்கூடிய சம்பவங்கள், விபத்துக்கள் இடம்பெற்றிருக்க முடியாது. இனிமேலும் காலம் தாழ்த்தப்படக்கூடாது உடைந்த கட்டிடத்தை உடனடியாக மறு சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பெற்றோர்களை திருப்திப்படுத்தும் வகையில் வாக்குறுதியளித்துவிட்டு காலம் கடத்தி மறக்கடிக்கச் செய்யும் செயற்பாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

இந்தப் பாடசாலை மாகாண சபையின் கீழ் இருந்தபோதிலும் கல்வியமைச்சு இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று கல்வியமைச்சுக்கு மிக முக்கியமானதொரு பொறுப்பு இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் கட்டிடங்கள் தொடர்பிலும் தரப்பட்டியலொன்று தயாரிக்கப்படவேண்டும். பொறியியலாளர்களைக் கொண்டு இந்த தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உறுதிப்படுத்தவேண்டும். இந்த தரப்பட்டியல் குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது நாடு தழுவிய மட்டத்தில் திரட்டப்படவேண்டும்.

இப்பாடசாலைச் சம்பவம் அடுத்த ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் மறந்துபோய்விடக்கூடும். அடுத்து மற்றொரு சம்பவம் இடம்பெறும்போது தடுமாறும் நிலை உருவாகும். இவ்வாறு பழக்கப்பட்டுப்போன நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். அதிகாரிகள் தமது பணியினை நேர்மையாகச் செய்யவேண்டும். இது அவர்கள் மீதான கடப்பாடாகும். மற்றொரு சம்பவம் நடக்கும் வரை பார்த்திராது கடமையை உடன் செய்யவேண்டியதே அவசர பணியாகும் என்பதை வலியுறுத்துகின்றோம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...