காதல் சந்தியாவின் பயம் | தினகரன்

காதல் சந்தியாவின் பயம்

நடிகைகள் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பாக செயல்படுகிறார்கள். தனது ரசிகர்கள் மத்தியில் தேவதையாக வலம் வரு கிறார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. பல நடிகைகள், பலவிதங்களில் காயம்பட்டிருக்கத்தான் செய்கிறார்கள்.

‘காதல்’ சந்தியா:

“உடல் ரீதியாக மட்டுமல்ல, மனோரீதியாகவும் பெண்கள் சமூகத்தால் பாதிக்கப்படுகிறார்கள். நடிகைகளுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என்றும் சொல்லிவிடமுடியாது. இதன் மூலம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக குறை சொல்லவில்லை. சில மனநோயாளிகள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்.

அவர்கள் சிகிச்சை பெறவேண்டியவர்கள். ஒரு பெண், குறிப்பாக ஒரு நடிகையை தசை பிண்டமாக மட்டுமே பார்ப்பவர்கள் மனநோயாளியாகத்தானே இருக்க முடியும்? ஆள் கூட்டத்திற்கு மத்தியில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்குமோ என்ற பயம் எனக்கு இப்போதும் இருக்கிறது. அதனால் ஆள் கூட்டத்தில் தனியாக நான் செல்வதில்லை. 16 வயதில் எனக்கு ஏற்பட்ட சம்பவம்தான் அந்த பயத்திற்கு காரணம்.

அப்போது நான் ‘காதல்’ சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தேன். அம்மாவும் அந்த இடத்தில் இருந்தார். ஒரு பாடசாலையில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. வகுப்பறை ஒன்றில் நானும் அம்மாவும் உட்கார்ந்திருந்தோம். ஷொட் ரெடியானதும் நான் கேமராவின் முன்னால் சென்றேன்.

நடித்து முடித்துவிட்டு நான் அம்மாவை நோக்கி செல்லும்போது தனியாளானேன். படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் என்னை சூழ்ந்துவிட்டார்கள். யாருடைய கையோ என்னை நோக்கி நீண்டுவந்தது. நான் கதறி அழுதபடி அம்மாவை நோக்கி ஓடினேன்.

அந்த சம்பவம் எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சமூகம் ஏன் ஒரு நடிகையை இப்படி பார்க்கிறது என்ற கோபமும் வந்தது. அதோடு பெரிய பயமும் மனதில் உருவாகிவிட்டது. பல மாதங்களாக அந்த பயம் என் மனதில் பதிந்து கிடந்தது. மீண்டும் அது போன்ற உபத்திரவம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நான் ஆள் கூட்டத்தில் செல்லாமலே இருந்தேன்.

ஒரு பெண்ணை உபத்திரவம் செய்ய வந்த கைகள் நிச்சயம் ஒரு மனநோயாளியின் கையாகத்தான் இருக்கும். அவருக்கு சிகிச்சையோடு, தண்டனையும் வழங்குவதுதான் சரியாக இருக்கும். இயக்குனரும், படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் அந்த நபரைத் தேடி அலைந்தார்கள். ஆனால் அதற்குள் அந்த ஆள் தப்பிவிட்டார்.

திரை உலகத்தினுள் எனக்கு அதுபோன்ற மோசமான சம்பவம் எதுவும் ஏற்பட்டதில்லை. நல்ல குழுவினரோடு என் திரை உலக வாழ்க்கை தொடங்கியது. ஒரு குழந்தையைப்போல் அவர்கள் என்னை கவனித்துக்கொண்டார்கள். வெற்றியோடு என் பயணம் தொடங்கியது. நான் திடீரென்றுதான் கதாநாயகியானேன். அதனால்தான் எனக்கு மோசமான அனுபவம் எதுவும் கிடைத்ததில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் நிறைய பேர் திரை உலகத்தினுள் தங்களுக்கு மோசமான அனுபவங்கள் கிடைத்திருப்பதாக சொல்வதை கேட்டிருக்கிறேன். இதை ஒரு நிமிடத்தில் நம்மால் இல்லாமலாக்கிவிடமுடியாது. பாதுகாப்பாக இருக்க நம்மால் முயற்சிக்க மட்டுமே முடியும். இன்னொரு அனுபவம் எனக்கு சென்னையில் கிடைத்தது. ஷூட்டிங் முடிந்து, எனது அறைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தேன்.

பைக்கில் வந்த மூன்று பேர் வழிமறித்தார்கள். நிறைய குடித்திருந்தார்கள். நான் இறங்கி நடந்தால் மட்டுமே வழி விடுவதாக நிர்பந்தம் செய்தார்கள். நான் இறங்கவே இல்லை. டிரைவர் ஒருவழியாக பைக்கை இடித்துக்கொண்டு முன்னேறினார். சிறிது தூரம் அவர்கள் எங்களை பைக்கில் விரட்டிக்கொண்டே வந்தார்கள். கடைசியில் அவர்கள் சறுக்கி வீதியில் பைக்குடன் விழுந்தார்கள். அதனால்தான் தப்பிக்க முடிந்தது” 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...