சகவாழ்வுக்கு அடித்தளமாக அமையும் யொவுன்புர | தினகரன்

சகவாழ்வுக்கு அடித்தளமாக அமையும் யொவுன்புர

இலங்கையின் எதிர்காலத்தை கையேற்கக் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளில் 6000 பேரின் பங்குபற்றுதலோடு 08வது யொவுன்புர இளைஞர் முகாம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க காலகட்டத்தில் இன்று திருகோணமலையில். ஆரம்பமாகின்றது. கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகராக விளங்கும் திருகோணமலையின் மெக்கைஸர் விளையாட்டரங்கில் ஆரம்பமாகும் இந்த யொவுன்புரய எதிர்வரும் 02 ஆம் திகதி வரையும் நடைபெறவிருக்கின்றது.

தேசிய நல்லிணக்கத்திற்கான பாலத்தை உருவாக்கும் நோக்கில் திருகோணமலையில் ஆரம்பமாகின்ற இம்மாநாட்டில் வடக்கு,கிழக்கு உட்பட நாடெங்கிலுமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 6000 இளைஞர்கள் பங்குபற்றுகின்றனர்.

'எதிர்காலம் ஆரம்பமானது' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இவ்வருட யொவுன்புர இளைஞர் முகாம் இன்று முதல் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை 05 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த இளைஞர் முகாமில் உள்நாட்டு இளைஞர், யுவதிகள் மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் சமூக சேவைகள் சம்மேளனம் இணைந்து மேற்கொண்டுள்ளன.

இளைஞர்களின் சக்தியைக் கொண்டு நாட்டில் சுபிட்சத்தையும் விமோசனத்தையும் ஏற்படுத்துவதை நோக்ககாகக் கொண்ட இந்த யொவுன்புரவானது நேற்று இன்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமல்ல. கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு திட்டமே இதுவாகும்.

அதாவது 1977 ஆம் ஆண்டில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தலைமையேற்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நாட்டில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். அதனடிப்படையில் இன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவிடம் அன்று இளைஞர் விவகார அமைச்சை ஒப்படைத்தார்.

ஜனாதிபதி ஜே.ஆர் பாரிய எதிர்பார்ப்புடனேயே இவ்வமைச்சை இன்றைய பிரதமரிடம் அன்று கையளித்தார். அந்த எதிர்பார்ப்புகளை உரியபடி நிறைவேற்றும் வகையில், பிரமதர் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்தார்.

அவற்றில் வரலாற்றில் அழியாத் தடம் பதித்த திட்டமே யொவுன்புரவாகும். அதாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்காலப் பகுதியில் அனுராதபுரத்தில் நடைபெற்ற சாரணர் முகாமில் கலந்து கொண்டதோடு நிலாவெளி இளைஞர் பயிற்சி முகாம் கலந்துரையாடலிலும் பங்குபற்றினார். அச்சமயம் நாட்டிலுள்ள அதிக இளைஞர், யுவதிகள் பங்குபற்றத்தக்க வகையிலான இளைஞர் முகாம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

 அதற்கு 'யொவுன்புரய' எனவும் அவரே பெயரிட்டார். இதனடிப்படையில் இன்றைய பிரதமரின் எண்ணக்கருவில் உருவான யொவுன்புரவின் முதலாவது இளைஞர் முகாம் 1984 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை புலதிஸிபுரவில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் 5000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டைத் தொடர்ந்து 1994 வரையும் பல இளைஞர் முகாம்கள் நடத்தப்பட்ட போதிலும் 94 ஆம் ஆண்டின் பின்னர் யொவுன்புர இளைஞர் முகாம் நிகழ்ச்சித் திட்டம் கைவிடப்பட்டது.

என்றாலும் 27 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் இந்த யொவுன்புர இளைஞர் முகாம் நிகழ்ச்சித் திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியாவில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் இன, மத, பிரதேச, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் 5000 இளைஞர், யுவதிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது கருத்துகளையும் ஆக்கங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்தினர்.

இந்த இளைஞர் முகாம் திட்டத்தில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடுவதால் அவர்களுக்கிடையே அறிமுகம், கருத்துப்பரிமாறல், ஆளையாள் புரிந்து கொள்ளும் தன்மை, ஒற்றுமையாக செயற்படும் பண்பு, கூட்டுச் செயற்பாடு என்பன கட்டியெழுப்பப்படுகின்றன.

உண்மையில் அவைதான் நாட்டுக்கு மிகவும் அவசியமானவை. அந்த வகையில் இந்நாட்டின் மூவின மக்களும் செறிவாக வாழும் திருகோணமலையில் ஒரு முக்கிய காலகட்டத்தில்தான் இந்த யொவுன்புரய இளைஞர் முகாம் நடத்தப்படுகின்றது

அதாவது சுதந்திரத்திற்கு பின்னர் சில அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினரின் தவறான அணுகுமுறைகளினால் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான இந்நாட்டு மக்கள் மத்தியில் இன ரீதியாக கசப்புணர்வுகள் ஏற்பட்டன. அதன் விளைவாக சுமார் 30 வருடங்கள் யுத்தமும் இடம்பெற்றது. அந்த யுத்தம் முடிவுற்று சுமார் 08ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் சகவாழ்வு, நல்லிணக்கம் ஒற்றுமை என்பன இன்னும் முழுமையாக ஏற்படாத நிலையே காணப்படுகின்றது.

அந்த குறையை நீக்குவதற்கு இந்த யொவுன்புர திட்டம் ஒரு நல்ல வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. அதேநேரம் நாட்டில் காணப்படும் இன, மத, பிரதேச மற்றும் அரசியல் பேதங்களை இளம் பராயம் முதலே களைந்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் இந்த யொவுன்புர பெரிதும் உதவக் கூடியதே. உண்மையில் இவ்வாறான பேதங்களை இளம் பராயத்திலேயே நீக்கும் போது அது நாட்டை ஒற்றுமையாக வளமாக்குவதற்கு வழிவகுக்கும். அது தேசிய ஒற்றுமைக்கு அடித்தளமாகவும் அமையும்.

ஆகவே 27 வருடங்களுக்கு முன்னர் தூரநோக்கின் அடிப்படையில் பிரதமரின் சிந்தனையில் உருவான யொவுன்புர திட்டம் இந்நாட்டின் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு மிகச் சிறந்த திட்டமாகும். அதன் மூலம் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டியது இந்நாட்டினரின் பொறுப்பாகும். அப்போது நாடு வளமானதாகவும் சுபிட்சமிக்கதாவும் மாறும். அதுவே எல்லோரதும் எதிர்பார்ப்பும் கூட. அதனால் இந்த யொவுன்புர திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அது நாட்டில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கு அது சிறந்த அடித்தளமாக அமையும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும். 


Add new comment

Or log in with...