Thursday, March 28, 2024
Home » பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த முற்படக்கூடாது
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல்

பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த முற்படக்கூடாது

by mahesh
October 4, 2023 8:10 am 0 comment

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகலுக்கான பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த முற்படவேண்டாமென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுமானால், அச்சுறுத்தல் விடுத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், பிடியாணை ம் பிறப்பிக்கவும் முடியும்.

அதேபோன்று,அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரமும் நீதிபதிக்கு உள்ளது. அந்த அதிகாரத்தை முல்லைத்தீவு நீதிபதி பயன்படுத்தவில்லை. அதனால், அதற்கான பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, அந்நீதிபதி தொடர்பான விடயம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ, ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. இது தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பில் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் பாரதூரமான விடயமாகும். அதேபோன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பிலும் இது பாரதூரமான விடயமாகும்.

நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்புகள் காரணமாக அவருக்கு மரண அச்சுறுத்தல் உட்பட பல்வேறு அழுத்தங்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதனால் அவரது பதவி விலகல் அறிவிப்பு தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்னணியில் இருக்கும் மறைமுக சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி வெளிநாடொன்றுக்கு சென்ற பின்னரே, அவரிடமிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு மன அழுத்தம், அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் வெளிநாடொன்றுக்கு சென்று கடிதம் அனுப்ப வேண்டியதில்லை.அச்சுறுத்தல் விடுத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு.

மேலும் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். ஏனெனில், நீதிபதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரம், நியமன அதிகாரமென அனைத்தும் நிர்வகிக்கப்படுவது நீதிச்சேவை ஆணைக்குழுவினாலாகும். நீதிச்சேவை ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவாகும்.

நீதிபதிக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தால் அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அது தொடர்பில் முறைப்பாடு செய்து பதிவொன்ற பெற்றுக்கொள்ள முடியும்.

பிரதம நீதியரசர் தலைமையிலான உரிய ஆணைக்குழுவுக்கு உத்தரவிடவோ, அதன் நடவடிக்கைகளில் தலையிடவோ அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT