மூன்றாவது நாடு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை | தினகரன்

மூன்றாவது நாடு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை

 
மூன்றாவது நாடு வந்து தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீடித்து நிலைத்து நிற்கும் தீர்வினைப்பெற்றுக்கொள்ளமுடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சத்துருக்கொண்டான் மீன்பிடி நிலையத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
 
இன்று சிலர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் மிகச்சிறந்த சட்டவாதியான சுமந்திரனையும் இன்று தும்படித்துக் கொண்டிருக்கின்றனர்
 
எங்களுடைய சகோதரர்களே இதனைச் செய்கின்றனர். எங்களை கூடுதலாக விமர்சிப்பவர்கள் எங்களுடன் இருந்தவர்கள்தான். அவர்கள் உடனடியான ஒரு தீர்வு வரும் என நினைக்கின்றனர். 
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். பல நூல்களை வாசித்துள்ளார். அதன் மூலமும் பல அனுபவங்களைப்பெற்றுள்ளார். அதிகமான இராஜதந்திரிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்.
 
அதன் மூலமும் அனுபவங்களைப் பெற்றுள்ளார். இவற்றைக்கொண்டு பிரச்சினையினை எப்படி தீர்ப்பது என்பது தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
 
பிரச்சினையை தீர்ப்பது என்பது ஒருவருக்கு தோல்வியேற்பட்டு ஒருவர் வெற்றிபெறும்போது ஏற்படாது. எவருக்கும் தோல்வி ஏற்படக்கூடாது. போர் வெற்றியை இறுமாப்புடன் கொண்டாடியவர்கள் அழுத்தம் காரணமாக போர்குற்றம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
 
போர் வெற்றியை கொண்டாடியவர்கள் பான்கீன்மூன் வந்தபோது சிலவற்றை செய்தனர். பின்னர் இலங்கை அரசாங்கம் செய்யாததன் காரணமாக நிபுணர் குழுவொன்றை ஐ.நா. உருவாக்கியது. அது வந்தபோது இலங்கையில் கற்றறிந்த பாடகங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
 
இவ்வாறுதான் விடயங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு விடயங்களும் நடைபெறுதவற்கு வெறுமனே சர்வதேச நாடுகள் மட்டும் காரணமல்ல. இந்த சர்வதேச நாடுகளில் மிக முக்கியமான நாடான அமெரிக்காவினை எங்களது தலைவர்கள் சந்தித்து என்ன பொறிமுறையை கையாள்வதன் மூலம் எங்களது மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கலாம்.
 
மஹிந்த ராஜபக்‌ஷ, சிங்கள மக்களிடம் சென்று என்னை மின்சார கதிரையில் ஏற்றப் போகின்றார்கள், அதற்காகத்தான் ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்படுகின்றது என சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துவந்தார்.
 
அவரை மின்சாரக் கதிரையில் ஏற்றுவதா இல்லையா என்பதை பிறகு பார்க்கலாம்; முதலில் எங்களுக்குரிய நிவாரணத்தை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்று கூறினோம்.
 
இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் அதன்கீழ் விசாரணைசெய்வதும் இல்லை, அதன் கீழ் வழக்கு தாக்கல் செய்வதும் இல்லை. ஒவ்வொரு பொறிமுறையினையும் நாங்கள் கையாள கையாள அரசாங்கம் எங்களுக்கு எதிரான விடயங்களை கைவிட்டேயாக வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது.
 
இன்று எதுவும் நடைபெறவில்லையென்று நாங்கள் கூறிவிட முடியாது. பல விடயங்கள் 18 மாத அவகாசத்திற்குள் நடைபெற்றுள்ளன. சில இடங்களில் இருந்து இராணுவம் நகர்ந்துள்ளது, பல போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
மீள்நிர்மாணம் என்ற தொனியில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் நினைத்த வேகத்தில் சர்வதேசம் நினைத்த வேகத்தில் நடைபெறவில்லையென்பது உண்மையாகும். ஆனால் அரசாங்கம் ஒன்றும்செய்யவில்லையென சொல்லமுடியாது என மேலும் தெரிவித்தார்;
 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...