ரஜினிகாந்த் ஏப்ரல் 09 இல் இலங்கை வருவதாக அறிவிப்பு (கடிதம்) | தினகரன்

ரஜினிகாந்த் ஏப்ரல் 09 இல் இலங்கை வருவதாக அறிவிப்பு (கடிதம்)

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்வரும் ஏப்ரல் 09, 10 ஆம் திகதிகளில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை இடம்பெயர்ந்து வாழும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே ரஜினிகாந்த் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்தியாவின் முன்னணி தொலைபேசி சேவை வழங்குனரான லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் அனுசரணையில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் தாய், ஞானாம்பிகை அல்லிராஜா அம்மாள் பெயரிலுள்ள அறக்கட்டளையின் மூலம், வவுனியாவின் சின்ன தம்பனை கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் உள்ள ஞானம் நகர் ஆகிய இடங்களில், அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்து, வீடற்ற நிலையில் வாழும் தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
 
இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களுக்காக அங்கே நேரில் வந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்டபோது, உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தார்.
 
விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
 
இந்நிகழ்ச்சியில் இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ். விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
1981 இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தீ' திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

Add new comment

Or log in with...