புத்துயிர் பெறும் இலங்கை – ரஷ்ய இராஜதந்திர உறவு | தினகரன்

புத்துயிர் பெறும் இலங்கை – ரஷ்ய இராஜதந்திர உறவு

உலகின் அதிசக்திவாய்ந்த நாடுகளில் மிக முக்கியமான நாடாகக் கருதப்படும் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டிருக்கிறார். இதனை ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க விஜயமாகவே நோக்க வேண்டியுள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பின்னரே இலங்கையின் தலைவரொருவர் ரஷ்ய நாட்டுக்குச் சென்றிருக்கிறார். 1974ல் அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ரஷ்யத் தலைவரின் அழைப்பையேற்று அங்கு சென்றார்.

அதுவே இலங்கைத் தலைவரொருவரின் அந்த நாட்டுக்கான முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 43 வருடங்களுக்குப் பின்னர் இன்றைய பலம்வாய்ந்த உலகத் தலைவர்களில் ஒருவரான விலாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான வெளிவிவகார உறவுகளின் முக்கிய மையப்புள்ளிக்கு இலங்கை வந்துள்ளதாகவே நோக்க வேண்டியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கிடையில் இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 1977 க்குப் பின்னர் சுமார் 18 ஆண்டுகளாக நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிசெய்தது. அக்காலகட்டத்தில் இலங்கை அரசியலில் அமெரிக்காவின் செல்வாக்கே அதிகரித்துக் காணப்பட்டது. பின்னர் 1998 ல் மீண்டும் பண்டாரநாயக்க யுகம் ஆரம்பமானது. சிறிமா பண்டாரநாயக்கவின் புதல்வி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிகூடிய மக்களாதரவைப்பெற்று நாட்டின் ஜனாதிபதியானார்.

அதன்பின்னர் மீண்டும் இலங்கை அரசியல் காற்று அமெரிக்க பக்கமிருந்து சீனாவின் பக்கம் வீசத் தொடங்கியது. இடையிடையே ரஷ்யாவின் ஆதரவும் கிட்டியது. அன்று முதல் சுதந்திரக் கட்சி ரஷ்யாவைவிட சீனாவின் மீதே கூடுதல் நம்பிக்கை கொண்டிருந்தது.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்து சீனாவுடனான உறவை மீண்டும் பலம்கொண்டதாக மாற்றியமைத்துக் கொண்டார். இது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாகவே காணப்பட்டது. இதன் பிரதிபலனாக மேற்குலகு இலங்கை மீது கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. அந்த அழுத்தங்களிலிருந்து இன்றளவும் இலங்கையால் மீள முடியாத நிலையே தொடர்ந்தவண்ணமுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சி கண்டது. கடன்பழு கூட மிக மோசமாக அதிகரித்தது.

இந்தச் சூழ்நிலையிலேயே 2015 ஜனவரியில் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை நோக்கிப் பயணித்தனர். மைத்திரிபால சிறிசேனவையும், ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்து இந்த ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டது… இன்று நல்லாட்சியின் மூலம் சர்வதேசத்தின் நேசக் கரம் இலங்கையின் பக்கம் நீளத் தொடங்கியது.

மக்கள் மனங்களை வென்ற நல்லாட்சி அரசு உலக நாடுகளது மனங்களையும் வென்றெடுப்பதில் அக்கறை காட்டத் தொடங்கியது. வல்லரசு நாடுகளில் எதனையும் புறக்கணிக்காமல் நேச உறவை வலுப்படுத்துவதில் ஆட்சித் தலைவர்கள் இருவரும் கூடுதல் அக்கறை காட்டி வருகின்றனர். இது பயன்மிக்கதாகவும் மேலோங்கிக் காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யாவுடனான உறவு மிக நெருக்கமாகத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதியின் இந்த ரஷ்ய விஜயம் எமது நாட்டுக்கு மிகக் கூடுதலான அனுகூலங்களைக் கொண்டுவரக்கூடியதான சாதக சமிக்​ை ஞகளை காட்டி நிற்கின்றது.

இலங்கைக்கு மிக விஷேடத்துவம் மிக நலன்களைக் கொண்டுதரக்கூடிய வகையில் பொருளாதார, வர்த்தக, சுற்றுலாத்துறை விஞ்ஞான, தொழில்நுட்ப, கல்வி, கலை கலாசாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ரஷ்யாவின் உதவிக் கரம் நீளக்கூடியதாகவே எதிர்நோக்கப்படுகிறது.

நவீன இலங்கையை கட்டியெழுப்புவதற்குரிய அனைத்து அம்சங்களையும் உள்வாங்கி பத்துக்கும் மேற்பட்ட உடன்படிக்கைகளில் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் இந்த ரஷ்ய விஜயம் இலங்கையில் மறுமலர்ச்சி யுகத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையலாமென கருதப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டிய முக்கிய நிகழ்விலும் ஜனாதிபதி பற்கேற்பது ஒரு வரலாற்றுப் பதிவாகவே அமைந்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த ரஷ்ய விஜயம் எதிர்காலத்தில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான வர்த்தக உறவை மேலோங்கச் செய்யக்கூடியதாக காணப்படுகிறது. அதன் பொருட்டு இலங்கை – ரஷ்ய வர்த்தக அமையம் அமைக்கப்பட்டு அதன் ஆரம்ப நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து ஊக்குவித்திருக்கிறார். இது எமது நாட்டின் வர்த்தக மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

கடன் பழுவிலிருந்து விடுபட்ட சக்திமிக்க ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிவரும் ரஷ்யா உலகின் மிக விசாலமான எரிபொருள் சக்தி வளத்தைக் கொண்ட நாடாகக் காணப்படுவதாலும் உலகின் 11 வது பெரிய தேசிய உற்பத்தி பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதாலும் அந்த நாட்டுடனான எமது உறவு மீளக் கட்டியெழுப்பப்படுவதன் மூலம் நாம் எதிர்கொண்டிருக்கும் பாரிய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து குறுகிய காலத்துக்குள் மீட்சிபெற முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்பத் துறையிலும், கலை கலாசார ரீதியிலும் முன்னணியில் இருக்கும் ரஷ்யாவுடன் கலை கலாசாரப் பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

1956ல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை – ரஷ்ய உறவு மீண்டும் மலர்ச்சிபெற்றிருப்பதன் மூலம் நீண்டகால நட்புறவை மீளப்புதுப்பிக்கும் வாய்ப்பை ஜனாதிபதியின் இந்த விஜயம் உத்தரவாதப்படுத்தியுள்ளது. இலங்கையின் நாளைய ஒளிமயமான விடியலுக்கு மற்றொரு மைல்கல்லாக இந்த விஜயத்தை பதிவுசெய்ய முடியும். சாத்தப்பட்டிருந்த கதவு மீண்டும் அகலமாக திறக்கப்பட்டுள்ளதையே ஜனாதிபதியின் விஜயம் நிரூபித்துள்ளது.


Add new comment

Or log in with...