Thursday, April 25, 2024
Home » சமூக ஊடகங்களை தணிக்கைக்கு உட்படுத்தல் அரசின் நோக்கமல்ல

சமூக ஊடகங்களை தணிக்கைக்கு உட்படுத்தல் அரசின் நோக்கமல்ல

ஓழுங்குபடுத்துதலே எதிர்பார்ப்பு

by mahesh
October 4, 2023 6:20 am 0 comment

சமூக ஊடகங்களை ஓழுங்குபடுத்துவதே தவிர அவற்றை தணிக்கைக்கு உட்படுத்தவில்லையென வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச் சட்டம் நாடு, இனம் அல்லது குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விடயங்களைத் தடுக்கிறதே தவிர, முன்னேற்றம் மற்றும் செழிப்பைத் தடுக்கும் விடயங்கள் எதையும் உள்ளடக்கவில்லையென அவர் கூறினார்.

இவ்வாறான பாரபட்சத்தை ஏற்படுத்தும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக எவருக்கும் சந்தேகம் இருந்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தமது விடயங்களை முன்வைக்கலாம். அவ்வாறு ஒன்று இருந்தால், உச்ச நீதிமன்றத்தின் கற்றறிந்த நீதிபதிகள் பாராளுமன்றத்தில் அச்சட்டத்தை அங்கீகரிக்க அனுமதிக்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

சமூக ஊடகங்கள் மூலம், ஏராளமான நிராயுதபாணிகள் மற்றும் வன்முறையற்றவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், தாக்கப்படுகி றார்கள், அவமானப்படுத்தப்படுகின்றனர். மேலும்,கேலி செய்து வெறுப்பையும் கோபத்தையும் பரப்புகின்றனர். இது ஏராளமான மனித உயிர்களை அழிக்க வழிவகுக்கிறது.சமூக ஊடகங்களில் நல்லதும் கெட்டதும் நடக்கும். சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய எதிர்பார்க்கவில்லை. இச்சட்டத்தின் நோக்கம், தவறான, இழிவுபடுத்தும், மத, இன வெறுப்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றை ஒழிப்பதே!இச்சட்டத்தின் மூலம்,

சமூகத்தின் நல்வாழ்வை முன்னேற்றும் ஒரு அதிகாரத்தை உருவாக்குவதாகும். .

சீனா போன்ற நாட்டை எடுத்துக் கொண்டால், அங்கு எந்த சமூக ஊடகங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடை விதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. நல்ல உரையாடல்களும், விமர்சனங்களும், அறிவுபூர்வமான உரையாடல்களும் இதில் இடம் பெறலாம்.

வணிக நிறுவனங்களின் விளம்பரம், விற்பனையை மேம்படுத்துதல் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு இந்தச் சட்டத்தில் எந்தத் தடையும் இருக்காது. அவற்றை யார் வேண்டுமானாலும் நியாயமாகச் செய்யலாம் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT